சனாதனம் – பொய்யும் மெய்யும்

முன்னுரை

சனாதனம் தமிழர்க்கு மட்டுமல்ல, மனித உலகிற்கே எதிரானது. ஆனால் திட்டமிட்டே சனாதனம் குறித்து உயர்வாகப் பரப்புவதால் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் “அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன?” என்று எண்ணுகிறார்கள். சனாதனத்தால் மிகுதியாக எப்பிரிவினர் தீங்கிற்கு ஆளாகிறார்களோ அப்பிரிவினரையே அதற்கு ஆதரவாகப் பேச வைப்பதுதான் சனாதனவாதிகளின் வெற்றியாகிறது. சான்றுக்கு ஒன்று பார்க்கலாம். நேரு, பெண்களுக்குச் சொத்துரிமையில் பங்கு உண்டு எனச் சட்டம் கொண்டுவர சட்ட வரைவைக் கொண்டு வரும் பொழுது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி பெண்களை அதற்கு எதிராகச் செயற்பட வைத்ததைச் சொல்லலாம். (ஆனால் அது வெற்றி பெறவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.) தாழ்த்தப்பட்டவர்களில் பலர் சனாதன வாதிகளுக்கு அடிமையாக இருப்பதையும் சொல்லலாம்.

சனாதனக் கருத்துகள் இடையே தமிழ் முதலிய பிற மொழிகளில் உள்ள நன்னெறி கருத்துகளைச் சனாதனத்தில் உள்ளதுபோல் புகுத்தி வருகின்றனர். பொதுவாகவே, “பிராமணர்கள் தமிழரிடத்திலிருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” என்பர், பரிதிமாற்கலைஞர்  (தமிழ் மொழியின் வரலாறு, பக்கம் 26, 27) அந்த வழியில்தான் சனாதனத்திலும் சில நல்ல செய்திகளைப் புகுத்தி அதனை உயர்வாகக் காட்ட முயல்கின்றனர். அதனைக் கேடயமாகக் கொண்டு சனாதனத் தீமைகளை மறைக்கின்றனர். தமிழ்நாட்டு அமைச்சராகவும் திமு.க. இளைஞர் அணிச் செயலாளராகவும் திகழும் உதயநிதி தாலின் சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று உவமையுடன் கூறியதும் அதைப் பெருமளவில் எதிர்த்துப் பரப்பி வருகின்றனர்.

சனாதனத்தின் தீங்கு குறித்து ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்பட்டாலும் சனாதன எதிர்ப்பாளர்களை விட சனாதன ஆதரவாளர்கள் குரலே ஓங்கி ஒலிக்கிறது. திருவள்ளுவர், கபிலர், தமிழ்ப்புலவர்கள், அருட்திரு வள்ளலார் இராமலிங்க அடிகள், ஐயா வைகுண்டர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அவர் பரம்பைக் கவிஞர்கள்  முதலியோர் சனாதன எதிர்ப்பை முழங்கி வருகின்றனர். காலந்தோறும் திகழ்ந்த சனாதன எதிர்ப்பின் தொடர்ச்சியாகத்தான் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரும் பிற தலைவர்களும் அவ்வப்பொழுது எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இப்பொழுதும் சனாதன எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. தி.க.தலைவர் வீரமணியார், விசிக தலைவர் தொல்  திருமாவளவன், தி.இ.த.பே. பொதுச்செயலாளர் சுப வீர பாண்டியன் ,  நா.உ. ஆ.இராசா, நா.உ. வெங்கடேசன்,  எனப் பலரும் எதிர்ப்புக் குரலைப் பதிந்து கொண்டு வருகின்றனர்.

நற்றமிழ் நெறிகளையெல்லாம் சனாதனம் எனப் புளுகி மக்களை ஏமாற்றி வருகின்றனர். சனாதனத்தில் இல்லாத நல்ல கருத்துகளையெல்லாம் இருப்பதாக எழுதி வருகின்றனர். ஆரியருக்கே உள்ள வழக்கத்தின்படி அதைத் தொன்மையானதாகக் கூறுகின்றனர். சனாதன எதிர்ப்பாளர்களை வன்சொற்களால் தாக்குகின்றனர். ஒருவர் தவறாகக் கூறுவதையே மற்றவரும் கூறி அதையே பரப்புகின்றனர்.

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே!

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலும்மே பொய் போலும்மே!

என்னும் வெற்றிவேற்கைக்கு எடுத்துக்காட்டாகச் சனாதனாதிகளின் பொய்மைப் பரப்புதலையும் எதிர்ப்பாளர்களின் அமைதியையும் கூறலாம். அத்தகைய பொய்யான கருத்துகளையும் அதற்கான மெய்யான விளக்கங்களையுமே ‘சனாதனம் – பொய்யும் மெய்யும் என்னும் தலைப்பில் வினா விடை முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வினா விடை இறுதியில் இணைப்புக் கட்டுரைகளும் தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம் திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவு படுத்தும் வகையில் 133 தெளிவுரைகள் தரப்பட்டுள்ளன. சனாதனவாதிகள் இவற்றையும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இவை இணைக்கப்பட்டுள்ளன. சனாதன ஆதரவாளர்களும் சனாதன எதிர்ப்பாளர்களும் இதனைப் படிக்க வேண்டும். சனாதனவாதிகள் மனம் மாற வேண்டும். அனைவரும் சமம் என்னும் நிலையை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

தவறான செய்திகளை மேற்கோளுக்காகக் குறிப்பிடும் பொழுது அதனை அவ்வாறு கையாண்டவரே கூறியதுபோல் பரப்பி விடுகின்றனர். எனவேதான், அத்தகைய தவறான கருத்துகளைக் குறிப்பிடுகையில் என்கிறார்களே, சொல்கிறார்களே என்பன போல் தரப்பட்டுள்ளன.

சனாதனம் நிலையானதல்ல, தொன்மையானதல்ல, வருணங்களைப் பிறப்பின் அடிப்படையில்தான் கூறுகின்றனர், சனாதனத்தைப் புகழ்பவர்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றுகின்றனர் என்பன போன்ற பல செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. மக்கள் யாவரும் சமம், உயர்வு தாழ்வு கற்பிப்போருக்கு இவ்வுலகில் இடமில்லை என்னும் உள்ளம் கொண்டோர் இந்நூலைப் பலரிடமும் அளித்து அனைவரின் உள்ளங்களிலும் தன்மான ஒளியை ஏற்ற வேண்டும்.

இந்நூலுக்கான கருத்துகளுக்குக் காரணமான நூலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், இணையத் தளத்தினர், வலைப்பூவினர், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி.

சனாதன ஆதரவாளர்கள் சனாதனத்தின் தோல் உரித்துக்காட்டுவதற்காக என் மீது சினம் கொள்ளாமல் மூல நூல் மீது சினம் கொண்டு அவற்றை எதிர்க்க முன் வரவேண்டும். சனாதன எதிர்ப்புக் கருத்துகளுக்கான பாராட்டுகள் தன்மதிப்புடன் வாழ எண்ணிப், பிறரையும் வாழச் செய்வதற்காக முயன்ற/முயலும் கருத்தாளர்களுக்கே உரியன. அவற்றைத் தொகுத்துத் தந்ததே என் பணியாகும்.

               அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

               பேசி : 98844 81652

               மின்வரி : thiru2050@gmail.com