(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி)
திலீபன் நினைவுப் பேருரை 2/3 :
தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு
எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா?
பாதுகாப்பு என்பது சரியாகச் சொன்னால் செக்யூரிட்டி என்னும் இடர்காப்பு அமைதியான, நீதியான சமூகம் அமைவதைப் பொறுத்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம போற்றும் சமூகத்தில்தான் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க முடியும்.
அத்தகைய ஒரு பாதுகாப்பு இந்தியாவில் அடங்கியிருக்கின்ற பல்வேறு மக்களினங்களுக்கும் தேவை. என்ற படிப்பினையை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
ஈழம், என்ன தீங்கு செய்தது? இந்திய வல்லரசு எதற்காக ஈழத்தை அழிக்க முற்பட்டது? தங்களுக்குப் பகை நாடு பாக்கித்தான் என்கிறார்கள். பகை நாடு சீனம் என்கிறார்கள். ஆனால் சீனா, பாக்கித்தான் ஆகியவற்றோடு கூட்டாகச் சேர்ந்து இனவழிப்புச் செய்தது இந்தியா. அவர்களுக்கான போரை நாங்கள் நடத்தினோம் என்றார் இராசபட்சர். அதனால்தான் நாம் இந்தியாவில் அடங்கியிருக்கின்ற. பல்வேறு தேசிய இனங்களோடும் தோழமை கொள்ள வேண்டும். அரசுகளற்ற தேசங்களோடும், போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும், இந்தியப் பாட்டாளிகள், உழவர்கள், பெண்கள், சிறு வணிகர்கள் … அனைத்து மக்களோடும் தோழமை கொள்ள வேண்டும். அவர்களுடைய எதிர்காலம் பற்றிய கவலை நமக்கு இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய நீதிக்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வெறும் அரச தந்திரவுத்திகள் வாயிலாக, அரசுதந்திர உரையாடல்கள் வாயிலாகப் பாதுகாப்பை நாம் ஏற்படுத்திவிட முடியாது. கடந்த காலத்தில் தமிழீழம் என்பது தமிழ் இனத்திற்கான அந்தப் போர் என்பது புறநிலையில் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழீழப் போரையும், தலைவர் பிரபாகரன் வழிநடத்திய வீரம் செறிந்த போராட்டத்தையும் பார்த்து காசுமீர் மக்கள் ஊக்கம் பெற்றார்கள். காசுமீர் பச்சைப் புலிகள் என்ற அமைப்பு கூட நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் அரசியலுக்குத் தொடர்பு இல்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்இனவழிப்புப் போரை நிறுத்த “போரை நிறுத்து(Stop the War)” என்ற ஒற்றை முழக்கத்தின் பின்னால் திரண்டு அமைப்புகளாகத் திரண்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் ஏன் நம்மால் மிக அருகாமையில் சில காதத் தொலைவில் இருக்கிற ஈழத்தின் மக்கள் அழிக்கபடுவதைத் தடுக்க முடிய வில்லை? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்ததன் பயன் என்னவென்றால், இந்த உலகில் தமிழர்களுக்கு இறைமை இல்லை. தமிழ்நாட்டிற்கு இறைமை இல்லை, தமிழ்த் தேசம் இறைமையற்றுக் கிடக்கிறது! இந்தியச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கின்ற காரணத்தினால்தான் ஈழத்திற்கு ஆதரவாக உலக அரங்கத்தில் நம்மால் குரல் கொடுக்க முடியவில்லை என்ற உண்மை வலிக்க வலிக்க உணரப்பட்டது.
நாடுகடந்து பல்வேறு நாடுகளில், வெப்பத்திலும் குளிரிலும் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ்மக்கள் தம் பங்குக்குப் போராடினார்கள். இந்தியாவில் மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டது. தாங்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலேயே அந்தந்த அரசுகளிடம் போராடிப் பெற்ற அந்த நலன்களைக் கூடத் தமிழ்நாட்டிலே இந்தியாவிடமிருந்து பெற முடியவில்லை. அதனால்தான் தமிழ் இளைஞர்கள் தீக்குளிக்க நேரிட்டது. இந்தி எதிர்ப்புக்காகத் தீக்குளித்ததைக் காட்டிலும் ஈழத்துக்கான தீக்குளிப்புகளே அதிகம் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் எல்லாத் தரப்பட்ட மக்களும் போராடினார்கள். , வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளே வைத்துத் தாக்கப்பட்டார்கள், வணிகர்கள் போராடினார்கள், ஏழை எளிய மக்கள் போராடினார்கள். தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் போராடினார்கள். போராட்டத்தின் வாசமே தெரியாத இ.தொ.நு.(ஐ.ஐ.டி.) போன்ற நிறுவனங்களுக்கு உள்ளே போராட்டம் நடந்தது. இதன் ஒரு விளைவு என்னவென்றால், நம்மால் ஏன் இப்படி இனவழிப்புப் போரைத் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி எழுந்தது. இந்த இனஅழிப்புக்குத் துணைபோன இந்தியாவின் முகத்திரை கிழிந்தது. நாம் தெரிந்து கொண்டோம், இந்த இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று! தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் என்ற ஒரு கருத்து ஈழமண்ணில் ஏற்பட்ட அழிவின் சாம்பலில் இருந்து எழுந்து வளர்ந்தது.
தமிழ்நாட்டிலே அதற்கு முன்பும் தமிழ்த் தேசியத்துக்காக உழைத்து இருந்தோம். இதற்கு முன் எப்போதும் இல்லாத எழுச்சி இப்போது ஏற்பட்டது.1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டம் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியாகவே நடந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 1967 தேர்தலில் திமுக பதவிக்கு வந்த பிறகு மங்கிப்போன தமிழ்த் தேசிய உணர்ச்சி 1983ஆம் ஆண்டு சூலைப் படுகொலையின் போது மீண்டும் கிளர்ந்தெழுந்தது. ஆனால் அதுவும் பின்னுக்குப் போன நிலையில் 2009 இனவழிப்பு. போரின் விளைவுகள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எழுச்சியைத் தோற்றுவித்தன. தமிழ்த தேசியம் என்பதே இன்றைக்கு ஆற்றல் பொருந்திய ஒரு சக்தியாக, கணக்கில் கொள்ள வேண்டிய சக்தியாக உருப் பெறுவதற்கு ஈழ மக்கள் செய்திருக்கின்ற அந்த ஈகத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
நமமுன் இருக்கின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான். இனவழிப்பின் மூலமாகப் பகைவன் என்ன சாதித்தான்? முற்றாக அழித்து விட்டோம், இனித் தமிழர்கள் போராடவே மாட்டார்கள் என்று இறுமாந்திருப்பான். ஆனால் போராட்டம் ஈழத் தாய்மண்ணிலே மட்டுமல்ல, உலகமெங்கும் பல தலைநகரங்களில் தமிழர்கள் போராடுகிறார்கள், இன்றும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் அந்த போராட்டத்திற்குத் துணைநிற்கிறது. உலகத் தமிழர்களோடு இணைந்து நிற்கிறோம். .ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் ஒருமாநாடு நடத்தித் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தோம்.
தமிழக அரசே! எங்களுக்குத் தெரியும், தமிழ்நாட்டிலே அயலுறவுத் துறை இல்லை. தமிழ்நாட்டுக்கு என்று சட்டப்படி இறைமை கிடையாது. எல்லாமே எமக்குத் தெரியும். ஆனால் அதே நேரத்தில் தலைவர் பிரபாகரன் அன்று சொன்னது போல, ஏழுகோடித் தமிழ்மக்களின் உணர்வுகளைச் சரியாக எதிரொலிக்கும் அறப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? வடக்கு மாகாணசபை ஒரு தீர்மானம் இயற்றினால் என்ன மதிப்பு உண்டு? தமிழர்கள் சட்டப்படித் தேர்ந்தெடுத்த அமைப்பு என்ற மதிப்பு உண்டல்லவா?
தமிழகச் சட்டப் பேரவையில் அடுக்கடுக்கான தீர்மானங்கள் இயற்றப்பட்டன. போர் நடந்த போது போர்நிறுத்தம் கோரித் தீர்மானம் இயற்றினோம். பிறகு அங்கு நடந்தது இனவழிப்பு என்றும் இலங்கையைப் பகைநாடாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கைக்கு எதிராகப் பொருளியல் தடைகள் விதிக்க வேண்டும் என்றும தீர்மானங்கள் இயற்றினோம். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி எல்லாக் கட்சிகளுக்கும் இடையே ஒரு பொதுவான கருத்தொற்றுமை எதிலே உண்டு என்றால், ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டத்தை ஆதரிப்பதிலே உண்டு. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரிப் போராடுவதிலே உண்டு. தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழீழத் தேசிய இன மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதிலே உண்டு.
83 சூலை இனப் படுகொலையின் போது, இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைக்குத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் “இலங்கையில் நடப்பது இனக்கொலை, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று அறிவித்து, அயலுறவுத் துறை அமைச்சர் நரசிம்ம இராவை நேரிலே அனுப்பினார். ஆனால் இனக்கொலைக்கு ஆளாகிற மக்களுக்கு விடுதலைக்குப் போராடவும் இறைமை மீட்கவும் உரிமை உண்டு என்பதை இந்திய அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவே இல்லை. இதையும் ஓர் அரச தந்திர புவிசார் அரசியல் விளையாட்டாக மட்டுமே கருதிக் கையாண்டார்கள். அண்மையிலே இந்திய உள்துறை அமைச்சர் அமித்துசா அவர்கள் இராமநாதபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் “காங்கிரசும், திமுகவும் இனவழிப்புக்குத் துணை போனார்கள்” என்று அவர் இந்திமொழியில் பேசியிருந்தார். அவர் பேசியதை நான் வரவேற்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் சரி, அப்படிப் பேசியது நல்லது.
இனவழிப்பை அறிந்தேற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது நம் கோரிக்கை. இஃது உலகெங்கும் நம் முழக்கம். ஆனால் அதற்கு அடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனவழிப்பு என்று சொல்லி விட்டு இனஅழிப்புக்கு எதிராகப் போராடும் தமிழீழ மக்களுக்குத் துணைநிற்பீர்களா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே இனவழிப்பு ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்மானங்களை ஆதரிப்பீர்களா? நேற்றைய வரலாறு நம்பிக்கை தருவதாக இல்லை. அது மாறுமா? அவர்களைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்காக இந்த அறிவிப்பைச் செய்திருக்கலாம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக