(தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி – தொடர்ச்சி)

கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம்

1) வேண்டாம் பொதுத்தேர்வு(நீட்டு)!

அனிதா முதல் செகதீசன், அவருடைய தந்தை வரை தமிழ்நாட்டில் 2017 தொடக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் 17 உயிர்கள் நீட்டு தற்கொலைக்குப் பலியாகியுள்ளன.

பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் 1200க்கு 1176. அனிதாவின் மருத்துவக் கல்விக் கனவு மெய்ப்பட இந்த மதிப்பெண் போதும். ஆனால் நாடுதழுவிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு என்னும் நீட்டு அவரது கல்வி வாய்ப்பையும் உயிரையும் பறித்துக் கொண்டது.

பொதுத்தேர்வு(நீட்டு) மருத்துவக் கல்வியின் தகைமையை உயர்த்தும் என்ற மாயை இந்த ஆறு ஆண்டுகளில் சுக்குநூறாக உடைந்து கிடக்கிறது. செகதீசனின் தற்கொலைக்குக் காரணம் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதன்று, கிடைத்த மதிப்பெண் அரசுக் கல்லூரியில் குறைந்த கட்டணம் செலுத்திச் சேருவதற்குப் போதவில்லை, தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரலாம், ஆனால் அதற்குக் கொட்டிக் கொடுக்கப் பெரும்பணம் இல்லை என்பதே. தொடக்கத்தில் தவறாகப் புரிந்து கொண்டு பொதுத்தேர்வை(நீட்டை) ஆதரித்த பலரும் இப்போது பொதுத்தேர்வை(நீட்டை)த் தெளிவாக எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள்.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்விக் கட்டணமாக மட்டுமல்ல, பொது(நீட்டு) தேர்வுக்கான பயிற்சி மையக் கட்டணமாகவும் இலட்சக் கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பெரும்பணம் தேவைப்படும் செய்தியை சில காலம் முன்பு ஆளுநர் ஆர்.என். இரவியின் எதிரிலேயே, பொதுத்தேர்வில்(நீட்டில்) வென்ற ஒரு மாணவனின் தந்தை அம்மாசியப்பன் போட்டு உடைத்தார்.

பொதுத்தேர்வு(நீட்டு) இல்லாமலே ஏராளமான மருத்துவர்களையும் சிறந்த ஒரு மருத்துவக் கட்டமைப்பையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. இதை எல்லாம் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதே பொதுத்தேர்வு(நீட்டு) செய்யும் வேலை.

கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமர்த்திய நீதியர் ஏ.கே. இராசன் ஆய்வுக் குழு பொதுத்தேர்வினால்(நீட்டினால்) ஏற்படும் தீங்குகளைப் பற்றித் தெளிவான அறிக்கை தந்துள்ளது. பொதுத்தேர்வு(நீட்டு) ஏழை எளிய மாணவர்களுக்கும், சிற்றூர்ப்புற மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஒடுக்குண்ட சமூகப் பிரிவு மாணவர்களுக்கும், தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கும் எப்படியெல்லாம் கேடு செய்யக் கூடியது என்பதை இந்த அறிக்கை சான்றுகளுடன் நிறுவியுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் இயற்றிய பொதுத்தேர்வு(நீட்டு) ஒழிப்புச் சட்டத்தை நீண்ட காலம் கீழே போட்டு ஏறி உட்கார்ந்திருந்த ஆளுநர் கடைசியில் திருப்பி அனுப்பி விட்டார். இப்போது இந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்துள்ளது. எவ்வளவு காலம் காத்திருக்கும்? என்று யாருக்கும் தெரியாது. காத்திருந்தாலும் ஒப்புதல் பெறும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதாவது மிகப் பெரும்பாலான தமிழக மக்கள் விரும்பாத பொது(நீட்டு)த் தேர்வைத் தமிழ்நாட்டின் மீது திணிப்பதில் மோதியாட்சி குறியாக உள்ளது. இது மருத்துவக் கல்வி தொடர்பான சிக்கல் மட்டுமன்று, தமிழ்நாட்டு மக்களின் கல்வியுரிமை, மாநில உரிமை தொடர்பானதும் ஆகும்.

பொதுத்தேர்விற்கு(நீட்டுக்கு) எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவதற்குக் கல்விச் செயற்பாட்டாளர்கள் வழிகாட்ட வேண்டும்.

2) வேண்டாம் புதிய தேசியக் கல்விக் கொள்கை!

பொதுத்தேர்வு(நீட்டு) ஆனாலும் உயர் கல்விக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளானாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை ஆகும். 2020ஆம் ஆண்டு கத்தூரிரெங்கன் தலைமையிலான குழுவினர் வரைந்து கொடுத்த தேசியக் கல்விக் கொள்கை.

புதிய தேசியக் கல்விக் கொள்கை எனப்படும் இந்தக் கொள்கையை 2023 முதல் இந்திய ஒன்றிய அரசு செயலாக்கி வருகிறது. உரிய வயதடைந்த அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது போன்ற பெரும் பெரும் இலக்குகளை எல்லாம் அறிவித்து விட்டு, அவற்றை அடைவதற்கான நிதிவளத்துக்கு இந்த அறிக்கை வழிவகை ஏதும் செய்யவில்லை. மாறாகக், கல்வியை மென்மேலும் வணிகப் பொருளாக்கி, தனியார் கல்வி வணிகத்துக்கான கதவுகளை அகலத் திறந்து விடுவதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை நெருங்க விடாமல் செய்கிறது. சமூக வழியிலும் கல்வி வழியிலும் பிற்பட்ட மக்களும், வசதி வாய்ப்பற்ற வறியோரும் கல்வி பெறும் உரிமையை வழிமறிப்பதாக உள்ளது.

அகவை 14க்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவயக் கல்வி வழங்க அரசுகுள்ள பொறுப்பைத் திசைநெறியாகக் குறிப்பிடும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 45, கல்வியை அடிப்படை உரிமையாகப் பொறித்திடும் உறுப்பு 21அ, கல்வியை அடிப்படை உரிமையாக வலியுறுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகள் இவற்றில் எதையும் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை கண்டுகொள்ளவே இல்லை.

உயர்சிறப்புக் கல்விக்கு மட்டுமல்ல, எல்லாக் கல்வி நிலைகளிலும் தேர்வுகளை நுழைத்துப் பெரும்பாலான மாணவர்கள் தொடர்ந்து படிக்க விடாமல் வெளியேற்றுவது, அவர்களைக் குலக் கல்வியின் பக்கம் திருப்பி விடுவது என்பதே இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் திட்டம்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவது போன்ற மாயை தோற்றுவிக்கபடுகிறது. தொடக்கக் கல்வியில் இயன்றவிடத்து தாய்மொழியில் கல்வி என்று ஒப்புக்குச் சொல்லி விட்டு, ஆங்கிலவழிக் கல்வியின் இடத்தில் தாய்மொழிவழிக் கல்வியை அமர்த்தும் வழிவகை ஏதும் செய்யப்படவில்லை. அயல்மொழிகளுக்குக், குறிப்பாகச் சமற்கிருதத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் கல்வித்துறையில் பார்ப்பனியம் கோலோச்சுவதற்கே வழிகோலும்.

பொதுவாகச் சொன்னால் பார்ப்பனர்களுக்கும் பணக்கரர்களுக்கும் ‘தரமான’ கல்வி, மற்றவர்களுக்கு இயன்ற வரைக் கல்வி மறுப்பு என்பதே புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நிகர விளைவாக இருக்கும்.

நம் மக்களின் கல்வியுரிமை மீது வணிகமயம், இந்திய மயம், இந்துத்துவ மயம் ஆகிய மும்முனைத் தாக்குதலே மோதியாட்சியின் தேசியக் கல்விக் கொள்கை ஆகும். இந்தக் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாடு, கருநாடகம் ஆகிய மாநில அரசுகள் அறிவிப்புச் செய்துள்ளன. ஆனால் இந்த எதிர்ப்பை ஒன்றிய அரசு கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை.

தமிழ் மக்களின் கல்வியுரிமையைக் காக்கவும் மீட்கவும் மோதியரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை முறியடிக்கக் கிளர்ந்தெழுந்து போராடுவது தவிர வேறு வழியில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மூட்டி வளர்க்கும் கடமை கல்விச் செயற்பாட்டாளர்களுக்கு உள்ளது.

3) வேண்டும் தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மையான கல்விக் கொள்கை!

இந்திய ஒன்றிய அரசு அதன் பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கையை நியாயப்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில அரசு அதே அளவு முனைப்புடன் செயல்படவில்லை என்பது மட்டுமன்று, புதிய தேசியக் கல்விக் கொள்கையின் பல கூறுகளைத் தமிழ்நாட்டில் செயலாக்கவும் முற்பட்டுள்ளது என்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கல்வி தொடர்பான மெய்யியலில் தமிழ்நாடு மாநில அரசுக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் அடிப்படை மாறுபாடு இல்லை. சான்றாகக், கல்வியை வணிகமயமாக்குவதில் இரு அரசுகளுக்கும் வேறுபாடு எதுவுமில்லை.

தமிழ்நாட்டுக்கென்று தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தக் கல்விக் கொள்கையை வகுக்க நீதியர் முருகேசன் தலைமையில் 13 உறுப்பினர் குழு அமைக்கபட்டிருப்பதாகவும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. தாலின் சென்ற 2022 ஏப்பிரல் 5ஆம் நாள் அறிவித்தார். ஓராண்டு காலத்தில் இந்தக் குழு அறிக்கை தரும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இவ்வகையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் இருந்த கல்வியாளர் எல். சவகர்நேசன் இக்குழுவிலிருந்து விலகியுள்ளார். அதிகார வருக்கத்தினர் தலையிட்டு ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அடியொற்றி ஒரு மாநிலக் கல்விக் கொள்கையைத் திணிக்க முற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கென்று தனித் தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் ஒரு விரிவான அறிக்கையும் தந்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கென்று சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படையிலான முற்போக்குக் கல்விக் கொள்கை வகுக்கும் படி தமிழக அரசை மக்கள் கோருவதற்கும் கல்விச் செயற்பட்டளர்கள் வழிகாட்ட வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 320