(தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல் – தொடர்ச்சி)

வழக்கறிஞர் மகாதேவன் உரை

இனிய அன்பர்களே!

“வல்லிய(பாசிச)ச் சட்டங்கள் – த.எ.த. (ஊபா), என்ஐஏ” என்ற தலைப்பில் 2023 சூலை 6ஆம் நாள் வல்லிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் சேல் முருகன் தலைமையில், தோழர் அரி பரந்தாமன், ப.பா. மோகன், நெல்லை முபாரக்கு ஆகியோருடன் நானும் பேசினேன். நேரில் வர முடியாத நிலையில் ஐதராபாத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகாதேவன் அனுப்பி வைத்த ஆங்கில உரையைத் தோழர் செந்தில் தமிழில் வாசித்தார். அந்த உரையின் தமிழாக்கம் இதோ –

வழக்கறிஞர் மகாதேவன் உரை:

த.எ.த. (ஊபா), என்ஐஏ சட்டங்களைத் திரும்பப் பெறக் கோருவோம்!

என்னுடைய வழக்கறிஞர் தொழிலின் நெருக்கடி காரணமாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு, முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சூன் 19 முதல் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தில்குசு நகர் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கின் இறுதி விசாரணை நடந்துவருவதால், நான் அன்றாடம் பிற்பகல் 2:30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் முன்னிற்க வேண்டியுள்ளது. அதுபோல இன்றும்கூட 2.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

காங்கிரசு ஆட்சியின் கீழ் 1995ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ப.சீ.த. (‘தடா’) சட்டமும் 2005இல் கொண்டுவரப்பட்ட ப.த.(பொடா) சட்டமும், பெரும்பாலும் வரைமுறையற்ற வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக எழுந்த பெரிய அளவிலான விமரிசனங்கள் மற்றும் போராட்டத்தின் விளைவாக அதிக நாட்கள் நீடிக்கப்படாமல் காலாவதி ஆகி விட்டன.

அஃதாவது இந்தச் சட்டங்கள் காலாவதியாகும் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. 2005இல் 1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) திருத்தப்பட்டுக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் ப.சீ.த. (‘தடா’) மற்றும் ப.த.(பொடா)வின் கொடூரமான சட்டப் பிரிவுகளை (காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் தரப்படும் வாக்குமூலம் செல்லும் என்ற ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடூரமான ஒரு சட்டப்பிரிவைத் தவிர இதர அனைத்து சட்டப் பிரிவுகளையும்) எடுத்துக் கொண்டு (பயங்கரவாதச் சட்டம் என்பதன் விளக்கம் உட்பட), 2008ஆம் ஆண்டு கூடுதல் திருத்தம் செய்யப்பட்டு முழு வடிவம் தரப்பட்டது.

இந்தச் சட்டம் மாபெரும் காங்கிரசு அரசின் மகத்தான அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தால் கொண்டுவரப்பட்டது. இன்றைய ஒன்றிய ஆளும் கட்சியாலும் மாநில அரசுகளாலும் இப்போதும் தொடரப்படுகிறது. நமது சமூகத்தின் சிறுபான்மை இசுலாமியர்கள், தணிந்த(தலித்து) மக்கள், பழங்குடிகள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினர்கள் மீது வேண்டுமென்றே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஏவப்படுவதைத் தேர்தலில் பங்குபெறும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வெளிப்படையாக எப்போதும் எதிர்ப்பது இல்லை என்பது கெடுவாய்ப்பானது.

எதிர்க்கட்சியாக உள்ள போது, தேர்தல் சமயத்தில் தன்னை மதச்சார்பற்ற கட்சியாகவும், அதேபோல தமது வாழ்வுரிமைக்காகப் போராடும் இசுலாமிய சிறுபான்மையினர், தணிந்த(தலித்து) மக்கள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினர் மீது நடத்தப்படும் கொடுமைகளை எதிர்க்கும் கட்சியாகவும் காட்டிக் கொள்ளும் காங்கிரசு, இதே விசயத்திற்காக பல்வேறு மேடைகளில் கொடுமையான த.எ.த. (ஊபா) (UAPA) சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காகப் போராடுவது இல்லை. மையத்திலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாசக அரசானது, 1967இன் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தை பொறுத்த வரை, காங்கிரசுக் கட்சியின் அதே பிரிவுகளைத்தான் தாங்களும் நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவதன் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் ஆட்சிக்கு வருவதற்கான வாக்கைக் கவர பொதுமக்களை ஏமாற்றுகின்றது.

மையத்திலும் மாநிலத்திலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே நிலவும் வட்டார, அரசியல், இன, சாதிய, மதம் சார்ந்த மற்றும் மதவாதப் பண்பாட்டின் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு மத வேடத்தைப் பூண்டு, பொய் வாக்குறுதிகளைத் தருவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர்.

இவை தங்களது அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் இதைச் செய்கின்றன. அதேசமயம் நாட்டில் 70% உள்ள சிறுபான்மையினர், தணிந்த(தலித்து) மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒடுக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. வல்லியம்(பாசிசம்) நிலவிக் கொண்டிருக்கும் இந்தப் பின்னணியில் இருந்து மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களையும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களையும் தணிந்த(தலித்து) மக்களையும் பழங்குடிகளையும், அத்தோடுகூட ஆளும் வகுப்பு மற்றும் பல்வேறு மத மற்றும் அரசியல் அமைப்புகளின் அரசியல் எதிரிகளையும் (இவர்கள் ஆளும் கட்சியின் ஒடுக்குமுறை அரசாட்சியை எதிர்க்கின்றனர்) ஒடுக்குவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் த.எ.த. (ஊபா)வின் கொடூரச் சட்ட விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.

அண்மைக் காலமாக ஆளும் கட்சிகள் அரசியல் எதிர்ப்பாளர்களையும், மைய – மாநில ஆளும் கட்சியின் அரசியல் கொள்கைகளையும் எதிர்க்கக் கூடிய அனைத்து ஆட்கள் அல்லது அமைப்புகளையும் நசுக்கவும், உடைத்து எறியவும் நிறைவேற்று(அமலாக்க)த்துறை மற்றும் தேசியப் புலனாய்வு அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் மையத்தில் உள்ள ஆளும் கட்சி, மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியின் மீது பொய்யான சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் த.எ.த. (ஊபா) (UAPA) குற்றச்சாட்டின் கீழ்ப் பொய் வழக்குகளைப் போட்டு ஒடுக்க முயற்சிக்கும் அளவிற்குத் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. மனநிறைவின்மை அடைந்துள்ள கூட்டணிக் கட்சிகளைத் தமது கருத்தியல் மற்றும் அரசியலுக்கு அடிபணியச் செய்வதற்காகத் , தமது குதிரை பேரத்தில் பணத்தையும் அதிகாரத்தையும் பதவிகளையும் முடிந்த அளவுக்குப் பயன்படுத்துகிறது. பின்னர் மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சிகளை உடைப்பதற்கான கருவிகளாக இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் மைய ஆளுங்கட்சி அரசியல் இலாபம் பெறுகிறது. இத்தகைய அழுத்தங்களுக்குப் பணியாதவர்கள் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் த.எ.த. (ஊபா)UAPA வழக்குகள் பொய்யாகப் போடப்படுகின்றன. இதன் மூலம் அரசியல் எதிரிகளும் அரசியல் எதிர்ப்பாளர்களும் கடும் விரக்திக்குள் தள்ளப்படுகின்றனர்.

இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில், வன்முறையில் இறங்கிச் சட்டம் ஒழுங்குச் சிக்கலை உருவாக்குகின்றனர். இச்சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதற்காகப், புதிய தேர்தல்களைத் திணிக்கவும், அரசியல்வாதிகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் மனநிறைவற்றவர்களைக் குதிரை பேரம் மூலம் வென்றெடுக்கவும் முயல்கின்றனர். இறுதியாக உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில், அரசாங்கத்தின் கருவூலத்திற்குத் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் வகையில், புதிய தேர்தல்களை நடத்துவதன் மூலம் பணவீக்கத்தையும் வறுமையையும் அதிகரிக்கின்றனர்.

தேசியப் புலனாய்வு முகமையின் துவக்கம் கூட காங்கிரசு ஆட்சியில்தான் நடந்தது. தேசியப் புலனாய்வு முகமை, 2008இல் முக்கியமாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 மற்றும் 1908ஆம் ஆண்டின் வெடிகுண்டுப் பொருட்கள் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 121 முதல் 130 வரையிலான தேசத் துரோகச் சட்டங்கள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 25 (1AA)ஆகியவற்றைக் கையாள்வதற்காக முதலில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராகவுள்ள அரசியல் இயக்கங்கள் மற்றும் மத இயக்கங்கள் போன்றவற்றை ஒடுக்குவதற்காக, முக்கியமாக இசுலாமியச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு அரசியல் இயக்கங்களின் நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடக் கூடிய வழக்கறிஞர்களும் கூட, அவர்களின் மதம், சாதி, கோட்பாட்டு நம்பிக்கைகள் அல்லது பகுதிகளையும் தாண்டி த.எ.த. (ஊபா) சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இச்சட்டத்தின் மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் காரணமாக, அவர்கள் பல ஆண்டுகளாகப் பிணையின்றிச் சிறையில் வைக்கப்படுகின்றனர். இது சனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

இந்த நிலைமை தொடருமானால் அது முழுக்க குழப்பமான நிலைமைகளுக்கும், ஓர் அனாட்சிய (அராசக) அரசுக்குமே இட்டுச் செல்லும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மும்பை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள பீமா கோரேகான் வழக்கு ஆகும். இந்த வழக்கில் முக்கிய தணிந்த(தலித்து) வழக்கறிஞரான சுரேந்திர கட்லிங்கு, வழக்கறிஞர் சுதா பாரத்துவாசு, செயற் பாட்டாளர்களான அருண் பெரேரா, வெர்னான் கன்சல்வேசு மற்றும் கபீர் கலா மன்ச்சு என்ற கலை பண்பாட்டு இயக்கத்தைச் சார்ந்த இதர செயல்வீரர்கள் (கபீர் கலா மஞ்ச்சு எந்தச் சட்டத்தின் கீழும் தடை செய்யப்படவில்லை.), நாக்குபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சோமா சென் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரபலமான புரட்சிகர எழுத்தாளரான 85 அகவை வரவர ராவு (இவர் நான்காண்டுகளுக்குப் பிறகு பிணை பெற்றுள்ளார். மூன்று முறை மகுடையால்(கொரோனாவால்) பாதிக்கப்பட்டுள்ளார்.) மேலும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கும் சார்கண்டின் பழங்குடியினருக்கும் எப்போதும் பணிசெய்து வந்த, 85 அகவை இயேசு சபை அருட்தந்தை இசுடேன் சாமி (இவர் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்தார். அதுவும் மகுடையால்(கொரோனாவால்) பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது) போன்றோரும் இவ்வழக்கில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மிகவும் கெடுவாய்ப்பான விசயம் என்னவென்றால் சமூகத்தில் முக்கியமாணவரும், மாபெரும் சட்ட மேதை பாபாசாகிப்பு அம்பேத்துகரின் உறவினருமான, ஆனந்த டெல்டும்டே கூட விட்டு வைக்கப்படவில்லை என்பதுதான். அண்மையில் ஓராண்டுக்கு முன் மோதலில் கொல்லப்பட்ட இ.பொ.க.(சிபிஐ) மாவோயினரால் ஒரு தலைமறைவு தலைவராக அவரது சகோதரர் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஆனந் டெல்டும்டே மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்றுவரை குற்றப் பத்திரிகை உருவாக்கப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் வல்லிய(பாசிச) ஆளும் ஆட்சியின் அடக்குமுறை தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேச குடிமை(சிவில்) உரிமை மையம், தெலங்கானா குடிமை(சிவில்) உரிமை மையம், மனித உரிமைகள் மேடை, புரட்சிகர எழுத்தாளர் சங்கம், மகிளா சேட்டினா சங்கம் போன்ற அமைப்புகளின் செயற்பாட்டளர்களுக்கு எதிராக 11 வழக்குகள் போடப்பட்டன. நக்குசலைட்டு குழுக்கள் மற்றும் இசுலாமியச் சிறுபான்மையினருக்காக வாதாடும் பல வழக்கறிஞர்கள் மீது த.எ.த. (ஊபா)வின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

அரசின் செயல்பாட்டு முறை மிக எளிமையானது. தன்னிடம் கம்பிக் கட்டுகளை, மாவோயிச அல்லது போராட்டர்(சிகாதி) இலக்கியங்களை வைத்திருக்கும் போது கைது செய்யப்பட்டதாக ஒருவர் காட்டப்படுகிறார். அந்த முதல் தகவல் அறிக்கையிலேயே பல்வேறு வழக்குரைஞர்களினதும் இந்த அமைப்புகளின் செயல்வீரர்களதும் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. த.எ.த. (ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தால் வழக்கு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டுப், பிணையின்றி நீண்ட காலம் சிறையில் வைக்கப்படுகின்றனர். விசாகப்பட்டினத்தில் பெட்டப்பாயிலா காவல் நிலையத்தின் ஒரு வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்,212 பேர் அரசுக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் அனைத்து வழக்குரைஞர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கடந்த 19.08.2022 அன்று தெலங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் தட்டுவாய் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கில், இதே போல 152 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தப் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிகப் பிரபலமான சிலரும் அடங்கியுள்ளனர். அவர்களில் 2020இலேயே மகுடையில்(கொரோனாவில்) இறந்து போன முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எச். சுரேசும் ஒருவர் ஆவார். இவர் இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதேபோல மனித உரிமை அறிவாளியான பேராசிரியர் அர கோபால், உசுமானியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பத்மசா சா, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங்கு, அருண் பெரேரா ஆகியோரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், வழக்குரைஞர் ஆர் மகாதேவன் (உரையாளர்), வி. இரகுநாத்து, சுரேசுகுமார் மற்றும் மனித உரிமை மற்றும் பெண்கள் குழுக்களை சார்ந்த செயல்பாட்டு வீரர்கள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 257