(தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் – தொடர்ச்சி)

வல்லியத்தின்(பாசிசத்தின்) பாலியல் வன்கொடுமை அரசியல்

இனிய அன்பர்களே!

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் குமுக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது.
அந்தக் காட்சியைக் காட்ட வேண்டா என்று இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின் ஊடகங்களில் மறைப்புச் செய்து காட்டப்படுகிறது. இருப்பினும் அயல்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சிலவற்றில் அது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மே 3ஆம் நாள் மைதேயி இனத்துக்கும் குக்கி இனத்துக்குமான மோதலாகத் தொடங்கிய வன்முறை, உள்நாட்டுப் போர் என்னுமளவுக்கு முற்றி, இன்று வரை தொடர்கிறது. இரட்டை இழு பொறி (எஞ்சின்) அரசுகள் என்று பாசக பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய நடுவணரசும் மணிப்பூர் மாநில அரசும் சேர்ந்து இந்த இன மோதலை குக்கிகளுக்கு எதிரான இனவழிப்புப் போராகவே மாற்றி விட்டன. குக்கிகளில் பெரும்பாலார் கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன, அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

காணொளியாக வெளிவந்துள்ள பாலியல் வன்கொடுமை மே 4ஆம் நாள் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. கொடுமைக்கு ஆளான ஒரு பெண் மே 18ஆம் நாள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இத்துணைக் காலமும் இது குறித்துக் காவல்துறையும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்த நிகழ்ச்ச்சியை மூடி மறைத்தே வந்துள்ளன.

எதிர்க் கட்சிகள் வன்மையான கண்டனங்கள் தெரிவித்த பின், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அணியமாய் இருப்பதாக அறிவித்த பாசக அரசு உருப்படியான விவாதம் நடந்து தலைமையமைச்சர் மோதி விளக்கமளிக்க வேண்டிய நிலைமையைத் தவிர்க்கவே எல்லாத் தந்திரங்களும் செய்து வருகிறது.

முதலில் குற்றவாளி ஒருவரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்த மாநில அரசு இப்போது நால்வரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இத்துணைக் காலம் இவர்களை ஏன் கைது செய்ய வில்லை? என்ற கேள்விக்கு மாநில அரசு தரும் விடை: இரண்டு திங்களாகக் கிடைக்காத ஆதாரம் இப்போதுதான் கிடைத்ததாம். எது? இந்தக் காணொளிதான் அந்த ஆதாரமா?

இது போன்ற இன்னும் பல காணொளிகள் இருப்பதாக மாநில முதல்வர் பிரேன் சிங்கே சொல்கிறார். அப்படியானால் இன்னும் பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று பொருள். தேசிய மகளிர் ஆணையமும் தங்களுக்குப் பல முறைப்பாடுகள் வந்திருப்பதாகச் சொல்கிறது. இந்த வன்கொடுமைக் குற்றங்களைத் தண்டிக்கவும் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மாநில அரசு தானாக எதுவும் செய்யாது, காணொளிகள் வெளிவரும் வரை அது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், பிறகு ஒரு சிலரைக் கைது செய்து கணக்குக் காட்டும் என்பதுதான் இதன் பொருள்.

வன்கொடுமையால் பாதிப்புற்ற பெண்களில் ஒருவர் காவல்துறைதான் தங்களை வெறிக் கும்பலிடம் விட்டுப்போனது என்று குற்றஞ்சாட்டுகிறார். வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கணவர் – நடந்ததை நேரில் பார்த்தவர் – இந்தியப் படையில் இருந்தவராம்! கார்கில் போரில் பங்கேற்றவராம்! இலங்கையிலும் இந்தியப் படையில் இருந்தவராம்!
இந்த முன்னாள் இந்தியப் படையாள் இப்போது தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்:

“அந்த இரண்டு மூன்று பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் இந்தப் பெண்களை ஆடை களையும் படிக் கட்டாயப்படுத்தினார்கள். எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்ற போது, ஒரு பெண்ணின் தந்தையை அவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்தார்கள். காவல்துறையினர் மைதேயி கும்பலுக்குத் துணை நின்றனர். அவர்கள் இந்தக் கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.”

இப்படிப்பட்ட நிலைமையில் குக்கிகளால் மைதேயிகளுடன் சேர்ந்து வாழ முடியுமா? “நாங்கள் தனித் தனியாகத்தான் வாழ முடியும், அதுதான் சரி” என்று குக்கிகள் சொல்கிறார்கள்.

தாழி (228) மடலில் “மோதி வாயில் கொழுக்கட்டை?” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்:
“நடுவணரசிலும் பாசக, மணிப்பூர் மாநில அரசிலும் பாசக! இதற்குப் பெயர் ‘இரட்டை இழு பொறி (எஞ்சின்) சருக்கார்’! வலுமிக்க ஆட்சியாம்! பாசக ஆட்சியில் வகுப்புவெறி வன்முறைக்கு இடமிருக்காது என்ற பீற்றல் மணிப்பூரில் பிய்ந்து தொங்குகிறது. இது பற்றிய கவலை பிரேன் சிங்குக்கும் இல்லை! அமித்சாவுக்கும் இல்லை! அகன்ற மார்போடு அகிலம் சுற்றும் அசகாய சூரர் நரேந்திர மோதிக்கு இருக்க வேண்டாவா? எவன் செத்தால் எனக்கென்ன? என்று வெள்ளை மாளிகையில் விருந்துண்டு, பிதேன் இணையருக்கு வைரம் பரிசளித்து, கொசுறாக ஆய்தக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டு தேச நலன் காத்து நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார். மற்றதெல்லாம் இருக்கட்டும், குசராத்து – 2002, மணிப்பூர் – 2023 இரண்டையுமே மறந்தும் மறைத்தும் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இல்லையோ என்ற சிறு ஐயத்தையே எள்ளி நகையாடுகின்றார்.”

மே 4 வன்கொடுமைக் காணொளி வந்தது, உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது, மோதி வாயிலிருந்த கொழுக்கட்டையும் விழுந்து விட்டது. மணிப்பூர் பற்றி மோதி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்: “மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது” என்று கூறியிருக்கிறார் அப்படியென்றால், அங்கு குற்றம் இழைத்தவர்கள் மீது இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கு மீது மோதி நடவடிக்கை எடுப்பாரா?!

“மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் மோதி. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிற நாளில் இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசினாரா, இல்லையே?

காசுமீரில் அசீபா பானுவுக்கும், குசராத்தில் பில்கிசு பானுவுக்கும், உ.பி. அத்துராசில் அந்தத் தணிந்த (தலித்து) பெண்ணுக்கும், இப்படி எத்தனை எத்தனையோ பெண்களுக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகளில் பாசக உறுதியாகக் குற்றவாளிகளின் பக்கம் நின்றதைக் கண்ட யாரும் “மணிப்பூர் மகள்கள்” என்று மோதி பேசுவதில் மயங்க மாட்டார்கள். மணிப்பூர் குற்றவாளிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார் மோதி. அப்படியானால் மோதி, அமித்துசா, பிரேன் சிங்கு ஆகிய முதல் மூன்று குற்றவாளிகளையும் மன்னிப்பதற்கில்லை.

“உண்மையிலேயே மணிப்பூர் நிலை குறித்துத் தலைமையமைச்சர் மோடிக்குக் கோபம் இருந்தால், முதல்வர் என். பிரேன் சிங்கை முதலில் பதவி நீக்கம் செய்யட்டும் பார்க்கலாம்!” – என்கிறார் காங்கிரசு தலைவர் மல்லிகார்சுன கார்கே.

“மணிப்பூர் தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும, தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டு கூறியுள்ளார். அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியத்தில் எப்படி இப்படி நிகழ முடியும்? என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார். இவ்வாறான கொடுமைகள் திரும்பத் திரும்ப நிகழுமானால், இது அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியம்தானா? அல்லது இந்த அரசமைப்பே குடியாட்சிய அரசமைப்புதானா? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மணிப்பூர் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதும் பேசுபொருளாயிற்று.
இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோதி “மணிப்பூர் மகள்கள்” பற்றிப் பேசுகிறார். இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வல்லிய(பாசிச) வெறியர்களுக்குப் படுகொலையும் பாலியல் வன்மொடுமையும் அரசியல் கருவிகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் வல்லிய(பாசிச)அரசியலை முறியடிக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 256