(தோழர் தியாகு எழுதுகிறார் 95: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி3

தமிழ் மன்பதையைப் பொறுத்த வரைக்கும் – நமக்கிருக்கிற ஒரே சிக்கல் தில்லி அல்ல. அது சிக்கல்களில் ஒன்று. அரசியல் அதிகாரம் அங்கே இருப்பதனால் உடனடியான அரசியலில் அதை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கல் அத்தோடு முடிவதல்ல. நமக்கு இங்கே நமக்குள் இருக்கிற சிக்கல் முக்கியமானது. நமது தேசிய வளர்ச்சிக்கான தடைகள் – நமது தேசியச் சந்தை உருவாவதற்கான தடைகள் – குடிநாயக உறவுகளுக்கான தடைகள் –  மொழி வளர்ச்சிக்கான தடைகள் – அனைவரும் கல்வி கற்பதிலுள்ள தடைகள் அனைத்துமே தேசியத்திற்கான தடைகள்தாம். நாம் ஒரு தேசமாக ஒன்றுபடுவதிலுள்ள தடைகள் – முதன்மையாக இதில் சாதியத்தை நாங்கள் முன்வைக்கிறோம். இது தொடர்பாக எமது இயக்கத்தில் ஒரு விவாதம் நடந்தது. தமிழ்த் தேசியம் என்பதை அதனளவில் வலியுறுத்துவதல்ல எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் குமுக நீதி என்பதைத்தான் நாம் வலியுறுத்துகிறோம். தேசிய குடிநாயகம் அல்லது தமிழ் நிகரியம் என்று இதைச் சொல்கிறோம். எந்தத் தேசியமும் வெறுமனே புறம்நோக்கிய பார்வையிலிருந்து வளர முடியாது. அது மக்களிடமிருந்து வர வேணடும் என்றாலே  உள்ளார்ந்து பார்க்க வேண்டும். அது சிக்கல்களைத் தீர்க்கிறதோ இல்லையோ அஃது அடுத்த சிக்கல். திலகர் காலம் வரைக்கும் பேராயம்(காங்கிரசு) ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாறவில்லை. ஏனெனில் வெறுமனே புறம் நோக்கியதாக இருந்தது. உள்ளார்ந்து மோசமாக,  தீவிரமற்றதாக (conservative) இருந்தது. அதை ஒரு மக்களியக்கமாக மாற்ற காந்தி என்ன செய்ய வேண்டியிருந்ததெனில் – உள்ளார்ந்து அவரளவிலே சில சீர்திருத்தங்களை முன்வைத்துத்தான் ஒரு மக்களியக்கமாக மாற்ற முடிந்தது.

தீண்டாமை சொந்தச் சிக்கல் என்று சொன்னார்கள் இவர் வருகிற வரைக்கும். இவர்தான் தீண்டாமை குற்றம், அது குமுகப் பகைக் குற்றம், அஃது எதிர்க்கப்பட வேண்டும் என்று சொன்னார்.  ஏதோ ஒரு வகையிலான சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அது புரட்சிகரமானது அல்ல. காந்தியின் சீர்திருத்தவாதம் என்பது நிலப்பிரபுத்துவ குமுகம் தொடர்பான, சாதியக் குமுகம் தொடர்பான சீர்திருத்தவாதம். நம்மளவில் தமிழ் மன்பதை ஒன்றுபடுவதற்கான தடைகள் என்னவென்று பார்க்க வேண்டும். நாம் மார்க்குசியத்தின் அடிப்படையில் இரண்டுவிதமான தடைகளைப் பார்க்கிறோம். புறத்தடை, அகத் தடை இரண்டையும் பார்க்கிறோம். இரண்டுமே நமக்கு எதிராக இருக்கின்றன. எந்தக் கருத்தியலும் வளர்கிற போது – நாம் தேசியம் என்று வருகிற போது – தேசிய மன்பதை வளர்ச்சி என்று வருகிற போது – நமது குமுகம் வளர வேண்டும் என்கிற போது – தேசிய மன்பதையாகத்தான் வளர வேண்டும்.  காரல் மார்க்குசு சொல்கிற போது – “the working class organizes itself on a national basis and it is national in its outlook to that extent, though not in the bourgeois sense” – தொழிலாளி வருக்கம் தேசிய அடிப்படையில் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும், அந்த அளவுக்கு அது தேசியக் கண்னோட்டம் கொண்டது,  ஆனால் முதலாளித்துவப் பொருண்மையில் அல்ல. இலெனின் என்சைக்கிளோபீடியாவுக்கு மார்க்குசு தொட்பாக எழுதிய குறிப்பில்  இதை மேற்கோள் காட்டுகிறார். ஒரு  பன்னாட்டுக் கருத்தரங்கில் இலாஃபார்க்கு போன்றவர்கள் நாம் தேசியத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கிறார்கள். மார்க்குசு இது பற்றி எழுதுகிறார்:

“நேற்று பன்னாட்டுப் பேரவையில் (அகிலம்) இப்போதைய போர் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது…. ‘இளைய பிரான்சு’ பேராளர்கள் (தொழிலாளர் அல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும், தேசங்களும் கூடக் ‘காலாவதியாகி விட்ட காழ்ப்புகளே’ என்று அறிவித்தார்கள்…. தேசிய இனங்களை இல்லாமற்செய்து விட்ட நம் நண்பர் இலாஃபார்க்கும் மற்றவர்களும் நம்மிடம் ‘பிரெஞ்சு’ பேசினார்கள், அதாவது அவையில் பத்திலொரு பங்கினர்க்குப் புரியாத மொழியில் பேசினார்கள் என்று சொல்லி நான் என் உரையைத் தொடங்கிய போது ஆங்கிலேயர்கள் சிரித்து விட்டார்கள்….”

கூட்டத்தில் இருக்கிறவர்களில் பத்திலொருவருக்குப் பிரெஞ்சு மொழி தெரியாது. பிரெஞ்சு மொழி பேசிக் கொண்டு தேசிய இனத்தை ஒழிக்க வேண்டும்  என்கிறார்கள். உங்களால் பிரெஞ்சு மொழியை ஒழிக்க முடியவில்லை என்றால் பிரெஞ்சு தேசிய இனத்தையும் ஒழிக்க முடியாது என்று சொன்னார். பன்னாட்டியம் என்பது தேசியத்தை ஒழிப்பதோ அல்லது தேசியத்தை மறந்து விடுவதோ அல்ல. தேசியத்தை அங்கீகரிப்பது, அவற்றின் சமத்துவத்திற்காகப் பேராட வேண்டும் என்பதுதான்.

தேசியவாதத் தனித்தன்மை (national exclusiveness) சிக்கலுக்கு இப்போது வருவோம். எல்லாவிதமான தனித்தன்மை எதிராகவும் நாம் போராட வேண்டும். நியாயமான குமுக அடிப்படை கொண்ட காரணங்களுக்காக ஒடுக்கப்பட்டோர்(தலித்து) இயக்கத்தைத் திரட்டுகிறோம். இயக்கத்திற்குள் ஒடுக்கப்பட்டோர்(தலித்து) தனித்தன்மை வருமானால் அதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் இயக்கமானவுடன் என்ன செய்கிறார்கள் – தாம் தனியே இருக்க வேண்டும் எனப் பிறரை மறுக்கிறார்கள். இவையெல்லாம் கடந்த காலக் குமுகக் கருத்தியலின் தொடர்ச்சியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். இவ்வகையில் தேசியத்தனித்தன்மை என்பதும் வரும். அதை எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். முதலாளித்துவத் தேசியம் என்பது ஒரு போக்கு. அது மக்களைப் பற்றிக் கவலைப்படாது.. இன்னொரு போக்காக புரட்சிகர குடிநாயகத் தேசியம். நான் பாட்டாளி வருக்க தேசியத்திற்குள் போக விரும்பவில்லை. ஏனெனில் பாட்டாளி வருக்கம் முழு வளர்ச்சி பெறாத ஒரு குமுகத்தில் நீங்கள் பாட்டாளி வருக்கத்தவனாக எல்லாவற்றையும் அணுக முடியாது. 

புரட்சிகர குடிநாயகம் என்று இலெனின் குறிப்பிட்டது போல நாங்கள் புரட்சிகரக் குமுக நீதி என்று குறிப்பிடுகிறோம். தமிழ்நாட்டுச் சூழலில் அது புரட்சிகரக் குமுக(சமூக)நீதி. புரட்சிகரக் குமுகநீதிக் கண்ணோட்டத்திலான தமிழ்த் தேசியம். இந்தத் தேசியம் தேசியத தனித்தன்மைக்கு எதிரானது. குணா போன்றவர்கள் முன்வைக்கிற கெடுங்குழுவியப் போக்குள்ள தேசியத்திற்கு எதிரானது. தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் தமிழர்கள் அல்லர், அவர்களை வெளியேற்ற வேண்டும் போன்ற கருத்துகளை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வரலாற்றுப் படிநிலை வளர்ச்சி(பரிணாமம்), உருவாக்கம் (historic evolution, historic making) என்பது ஒரு நீண்ட செயல்போக்கு கொண்டது. மிகுந்த வரலாற்றுத் தன்மை கொண்டது. இந்த அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள். இரத்தத் தூய்மை அடிப்படையில் தேசிய இனம் உருவாவதில்லை. அவர்களை இணைத்துக் கொண்டுதான் தேசிய இனம் உருவாகிறது. அமெரிக்கத் தேசியத்தைப் பார்த்தோமாயின் வெளிப்படையாகத் தெரியும். நவீன எடுத்துக்காட்டு அமெரிக்கா. அவர்கள் பண்பாட்டில் மட்டுமல்ல, மொழியிலேயே இதை நாம் காணலாம். அடிப்படையில் ஆங்கிலச் சொல்வளம் (vocabulary),  கட்டமைப்பு (structure). உச்சரிப்பு எனும் வகையில், கொச்சை(slang) எனும் வகையில் அது பல வகைகளைத் தனக்குள் இணைத்துக் கொள்கிறது. ஆகவே தூயத் தமிழ்த் தேசியம், கலப்பில்லாத தமிழ்த் தேசியம் போன்ற கருத்துகள் எனக்கில்லை. நான் விரும்புகிற தமிழ்த் தேசியம் அகன்ற குடிநாயகக் கண்ணோட்டத்தோடு கூடிய, குமுக மாற்றத்துக்குத் துணை செய்யக் கூடிய, மக்கள்நலன் சார்ந்த, குமுக நீதியை நிலைநாட்டக் கூடிய தமிழ்த் தேசியமாகும்.

அப்படி இல்லாத தேசியங்கள், செருமானியக் கொடும்பேரினத்துவம்(நாசிசம்) என்று சொன்னீர்கள்.. இந்திய வகைக் கொடுங்குழுவியம் இருக்கிறது, ஒரு வரலாற்றுக் கட்டம் வரைக்கும் பிரித்தானித் தன்னாளுமைக் (ஏகாதிபத்தியத்திற்)கெதிராக இந்தியத் தேசியம் எதிர்மறையானதாக இருந்தாலும் கூட ஒரு ஆக்கப்பூர்வமான பாத்திரம் வகித்தது. உள்ளார்ந்து அதற்கு எந்த முற்போக்குப்  பாத்திரமும் இல்லை. அது சாதியத்தோடு சமரசம் செய்து கொண்டது. சாதியத்தைப் பாதுகாத்தது. ஆக்கப்பூர்வமான வரலாற்றுக் காலக்கட்டம் கடந்த பின் அது முற்றிலும் ஏதிர்ப்புரட்சித்தன்மை கொண்டதாக, பிற்போக்கானதாக ஆகியது. அது முழுக்க இந்துத்துவத்தைச் சார்ந்து நிற்கிறது. இராமன் போல் எங்களுக்கு ஒரு தேசியநாயகன் வேண்டுமென மல்கானி கேட்கிறான். பார்ப்பனியக் கருத்தியல் அரசியலாக இந்தியத் தேசிய அரசியல் இருக்கிறது. விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மதச்சார்பின்மைவாதிகள் உள்பட இந்திய தேசியத்தை முன்வைக்கிற அனைவருமே தவிர்க்க முடியாமல் இந்துத்துவத்தின் பக்கம் போய் விடுகிறார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65