தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5
(தோழர் தியாகு எழுதுகிறார் 97: பதிவுகள் தளத்தில் செவ்வி 4- தொடர்ச்சி)
பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 5
தமிழ்த் தேசியத்தின் ஓர்மையும் பன்மையும்
யமுனா:
நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசியம் ஒரு பலப்பண்பாட்டு(மல்ட்டி கல்ச்சுரல்) மன்பதையாக இருக்குமா?
தியாகு:
இல்லை – ஒரு பகுதி, சிறுபான்மையர் இருப்பர். ஆனால் முதன்மை மன்பதை (main stream) ஒன்று இருக்கும். பலப்பண்பாட்டு குமுகத்தில் முதன்மை மன்பதை (main stream) என்ற ஒன்று இருக்காது. அப்படிப் பார்ப்பது தமிழர் தாயகத்தை மறுப்பதாகும். தமிழர்களின் தாயகம்தான் தமிழ்நாடு தமிழ் இனத்தின் வாழ்விடம் இது. நமது எல்லைதான் இது. இதில் சிறுபான்மையினர்க்கு இடம் உண்டு. சிறுபான்மையினர்க்கான உரிமை வேறு. தேசியத்தின் உரிமைகள் வேறு. இரண்டையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. சிறுபான்மையினர்களின் உரிமைகள் அங்கிகரிக்க்ப்பட்டு மதிக்கப்படும். அதே நேரத்தில் இது தமிழர்களின் தேசியத் தாயகம்.
யமுனா:
இப்போது சிறுபான்மையினர் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
தியாகு:
மொழிவழிச் சிறுபான்மையினர் எல்லையோரங்களில் இருப்பவர்கள். கன்னடர்கள் இருக்கிறார்கள். மலையாளிகள் இருக்கிறார்கள்.
யமுனா:
தமிழ்ப்பண்பாடு(கலாச்சாரம்) என்று சொல்கிற போது நீங்கள் பொது மொழி, பொதுப் பண்பாடு போன்றவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். இவ்வகையில் மதம் இங்கு எந்தவிடத்தில் பொருந்துகிறது?
தியாகு:
தேசம் என்கிற அமைவில் பல்வேறு கூறுகள் இடம்பெறுகின்றன. அகக்கூறுகள் மற்றும் புறக்கூறுகள். புறக்கூறுகள் என்கிற போது அவர்கள் பேசும் மொழி, அவர்கள் வாழக் கூடிய நிலப்பரப்பு. இதில் அவர்களின் தெரிவென்று ஏதுமில்லை. இனச் சிறுபான்மையினர் என்பது சரியான சொல்லாட்சி இல்லை. மொழிச் சிறுபான்மையினர் என்று சொல்லலாம். நாம் மதம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மதம் ஒடுக்குமுறைக்கான கருவியாகிற போது – பல்வேறு மொழி பேசும் பல தேசிய இனங்களைச் சார்ந்தவராயினும் யூதர்களை மதத்தின் பெயரில் ஒடுக்கியதால் அதுவே அவர்களை இணைக்கக் கூடிய காரணியாயிற்று. ஒரே மதத்தில் கூட ஒடுக்கப்பட்டவர்களும் ஒடுக்குபவர்களும் இருப்பர். தென் ஆப்பிரிக்க எடுத்துக்காட்டைப் பாரக்கலாம். கறுப்பர்களின் கிறித்துவப் பிரிவு என்பது வேறு. வெள்ளையர்களின் கிறித்துவம் என்பது வேறு. அயர்லாந்து சிக்கலில் கத்தோலிக்கமும் திருத்த அவையினர்(protestant) சிக்கலும் தலையாய சிக்கலாக இருக்கிறது. நமது சிக்கலில் மதம் ஒரு காரணமாக வைத்து ஒடுக்குமுறை அமையவில்லை. இங்கு நமக்கிடையிலுள்ள சிக்கல் சாதிய வேறுபாடுதான். அது நமக்கு வெளியிலிருந்து வருவது அல்ல.
யமுனா:
மதம் தொடர்பாகப் பார்க்கிற போது மொழியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மொழி சார்ந்த பண்பாட்டை நாம் பேசுகிற போது மொழி மதச்சார்பற்றதாக இல்லாதிருக்கிறதை நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. மொழி தொடர்பான ஆய்வுகளிலிருந்து பாரக்கிற போது மதம் தொடர்பான சார்புநிலையினின்று மொழியைப் பிரித்துப் பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக ஈழத்தில் சைவத்திலிருந்து தமிழ் மொழியைப் பிரித்துப் பார்ப்பது கடினம். அம்மொழி மதச்சார்பற்ற மொழியாகவில்லை. அதைப் போலவே மொழி நாம் பேசுகிற மன்பதைச் சூழலில் சாதி ஆதிக்கத்தினுடைய கருவியாக இருக்கிறது. அவ்வகையில் மொழி மத ஆதிக்கத்தினுடைய கருவியாக இருக்கிறது. ஜரோப்பிய மொழிகளுக்கும் நமது மொழிகளுக்கும் இருக்கிற மிகப் பெரிய வேறுபாடுகளில் ஒன்று மேற்கில் மொழிக்குள் மதச்சார்பற்ற மற்றும் பாலாதிக்கநீக்க மொழிக்கான நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது மொழிகளில் அவ்வகையிலான முயற்சிகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை. கலைஞர் கருணாநிதி பேசுகிற தமிழும் கிருபானந்தவாரியார் பேசுகிற தமிழும் ஒடுக்கப்பட்ட ஒருவர்(தலித்து) பேசுகிற தமிழும் பல்வேறு வகைகளில் வேறுபாடானது. மொழி மதநீக்கம் அடையாத போது எவ்வாறு மொழியைத் தேசியத்தின் பொது அலகாக நீங்கள் வரையறுக்கிறீர்கள்?
தியாகு:
உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். தமிழ் மொழி முழுக்க மதநீக்கம் பெற்ற மொழிதான். மொழி அதனளவில் ஒரு வருக்கக் கருவியோ சாதியக் கருவியோ மதக் கருவியோ அல்ல. மொழியை எதற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தமிழ்ப் பண்பாடு என்பது சமயப் பண்பாடு அல்ல. இன்னும் சமயப் பண்பாடு வெறும் ஆதிக்கப் பண்பாடு கிடையாது. சாதியச் சிந்தனைகள் வைதிகக் கருத்துகள், இலக்கியங்கள் எந்த மொழியில் வந்தனவோ அதே மொழியில்தான் சித்தர் பாடல்களும் வள்ளலார் பாடல்களும் வந்தன. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குறள். திருக்குறள் போன்ற மதநீக்கம் பெற்ற இலக்கியம் சாதிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு சமத்துவக் கருத்துகள் நிறைந்த இலக்கியமென்று வேறொன்று இல்லை. குறளியம் என்பதோர் அமைப்பு, ஒரு முறைமை. நமது தமிழ் மன்பதையின் நடந்திருக்கக் கூடிய சமூக நீதிக்கான, சமத்துவத்துக்கான போராட்டத்துக்கான மிகப் பெரிய வரலாற்றுப் பதிவு திருக்குறள்தான். தமிழில் திருக்குறளுக்குப் பிற்பாடுதான் பிற இலக்கியங்களைச் சொல்லலாம். மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழிகளோடு ஒபபிட்டுப் பார்ப்போமானால் தமிழ் அதிக அளவில் மதநீக்கம் கொண்டது. அதிக அளவில் முற்போக்கு சக்திகளின் பக்கம் நிற்பதாகும். என்னளவில் தமிழ் அனைத்து மக்களுக்குமான மொழிதான்.
விசு:
நாம் வரையறுத்திருக்கிற பொதுவான தமிழ்த் தேசியத்திற்கு மொழி, பண்பாடு, குறிப்பிட்ட எல்லை இம்மாதிரியான ஒரு வரையறைக்குள் தமிழ்ப் பண்பாடு என்பது ஒரு பொதுவான பண்பாடு இருக்கிறதா? தமிழ்ப் பண்பாடு என்பதையும், தமிழ் வாழ்முறை என்பதையும் நீங்கள் எப்படி வரையறுக்கிறிர்கள்?
தியாகு:
வருக்க மன்பதையில் பண்பாடு என்பது இரண்டு முனைகளின் போராட்டமாகத்தான் இருக்கும். சமூக நீதிக்கான சக்திகளும் அதற்கு எதிரான சக்திகளும் காலங்காலமாகப் போராடி வருகிற ஒரு சமூகத்தில் தமிழ்ப் பண்பாடு என்பதும் போராடுகிற இரண்டு முனைகளைக் கொண்ட ஒரு பண்பாடுதான். இந்தத் தமிழ் பண்பாட்டில் சாதியத்திற்கு இடமில்லை. இந்தத் தமிழ்ப் பண்பாட்டில் பார்ப்பனியத்திற்கு இடமில்லை. இந்தத் தமிழ்ப் பண்பாட்டில் மானுடச் சமத்துவத்தை மறுக்கும் கடவுள் கொள்கைக்கு இடம் கிடையாது. ஆத்திகம் ஒரு கூறாக இருந்தால் நாத்திகம் ஒரு கூறாக இருக்கும். இதைத்தான் நாம் தமிழ்த் தேசத்தின் பண்பாடு என வரையறுக்கிறோம்.
விசு:
பலப் பண்பாடு, பன்முக வரலாறு என்கிற வகையில் இங்கு பல விடயங்கள் முன்வந்திருக்கின்றன. உயர் சாதி தாழ்ந்த சாதி பிற்பட்ட ஒடுக்கப்பட்பட மக்கள் போன்றவர்களின் பண்பாடு என்பது தமிழ்ப்பண்பாட்டுக்குள் வருகிறதா?
தியாகு:
அமெரிக்கத் தேசிய வளர்ச்சியிலும் அமெரிக்க ப் பண்பாட்டு வளர்ச்சியிலும் கறுப்பர்களுக்கு ஒரு பங்கு உண்டு. அமெரிக்கத் தேசிய வரலாறு என்பது வெள்ளையர்கள் சென்று செவ்விந்தியர்களை அழித்தது மட்டுமல்லவே? அவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டிலும் நீங்கள் குறிப்பிடுகிற அனைவரும் உள்ளடங்குவர். ஆபிரகாம் இலிங்கனுடைய போராட்டத்துக்கும் கறுப்பின மக்களின் போராட்டத்துக்கும் எவ்வாறாக அமெரிக்க வரலாற்றிலும் பண்பாட்டிலும் இடமிருக்கிறதோ அவ்வாறே தமிழ்ப் பண்பாட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பங்கிருக்கிறது. பண்பாடு என்பதை ஓர் இறுகிய நிலையாகப் பார்க்க முடியாது. அதை இயங்கியல் முரண்களுக்கிடையிலான போராட்டமாக (டைனமிக்காக)ப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்த அளவில் எதுவெல்லாம் குமுக மாற்றத்துக்குத் துணை நிற்கக் கூடியதோ, எது தேசியத்தனிநிலைக்கும் சாதியத்தனிநிலைக்கும் எதிரானதோ அதுவெல்லாம் தமிழ் தேசியப் பண்பாட்டுக்குள் இயங்கும். இதைத்தான் தமிழ் வரலாறாக நாம் பாரக்கிறோம்.
விசு:
இவ்வாறாகப் பொதுமைப்படுத்தும் போது ஒடுக்கப்பட்டவர்களுடைய வரலாற்றில் எந்தவிதமான கூறுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் – எதனை விலக்குகிறோம்?
தியாகு:
திருக்குறள் என்பது ஒடுக்கப்பட்டோர் இலக்கியம். யார் கடைக்கோடியில் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவர்களது விடுதலைக்கான இலக்கியம்தான் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம். எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது ஒடுக்கியம். சித்தர்களிடம் இந்த வேகத்தைப் பார்க்கலாம். பாரதியின் சாதிய எதிர்ப்பில் அதைப் பாரக்கலாம். இந்தியத் தேசியப் பண்பாட்டில் எஞ்சி நிற்பது ஆதிக்கப் பண்பாடு மட்டும்தான். முருகன் குறத்தியை மணந்து கொள்கிற தமிழ்க் கடவுளாகத்தான் இருக்கிறான். தேவயானியைக் கொண்டுவந்து அவனோடு இணைக்கும் போதுதான் நமக்குச் சிக்கல் வருகிறது. இவ்வகையில் தமிழ்த் தேசியப் பண்பாடு என்பது அனைத்து வகையான ஆதிக்கப் பண்பாடுகளுக்கும் எதிரானதாகிறது.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக