(தோழர் தியாகு எழுதுகிறார் : குறள்நெறி – தொடர்ச்சி)
சிறு தெய்வ வழிபாடும் மொழிக் கொள்கையும்
தமிழ்த் தேசியவாதிகள் ஆரியமயமாகிவிட்ட சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிப்பது குறித்து?
ஒரு சமூகம் என்பது ஒரு தனிமனிதனோ, சில மனிதர்கள் இணைந்தோ, அரசனோ திட்டம் போட்டு உருவாக்குகிற செயல் அல்ல. ஒரு தேசியச் சமூகம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்து, நிலைத்து நிற்பது. இருக்கிற எதார்த்தங்களில் இருந்துதான் ஓர் இயக்கம் தோன்ற வேண்டியிருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு ஏன் தோன்றியது? எப்படி வளர்ந்தது? என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய செய்தி.
முருக வழிபாடு எப்படித் தோன்றியது? குலத் தலைவர்கள் எப்படித் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள்? என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரியது. இப்போதைய சூழ்நிலையில் இன்றைய அரசியல் தலைவர்கள் நாளை கடவுளாக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? என்று வேண்டுமானால் நாம் யோசிக்கலாம். இந்த வழிபாட்டு முறைகள், அதில் வெளிப்படுகிற மெய்யியல் சிந்தனைகள், அதில் வெளிப்படுகிற போராட்டப் பதிவுகள் இவையெல்லாம் ஒரு தேசிய இனத்தினுடைய வரலாற்று ஆழங்களிலிருந்து வளர்ந்து வருபவை.
மார்க்குசியம், தத்துவம் என எல்லாவற்றிலும் மாவோ தேர்ச்சி பெற்றவராய் இருந்தாலும் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் சீனாவின் வரலாற்றை மிகத் தெளிவாக அவர் புரிந்து வைத்திருந்ததுதான். இலெனினும் இரசியாவின் வரலாற்றில் அதிக தேர்ச்சி பெற்றிருந்தார். இங்குள்ள தலைவர்களுக்கு அந்தப் புரிதல் இல்லை என்பது வருத்தமான செய்திதான்.
நம்முடைய வரலாறு என்பதை திருவள்ளுவரில் தொடங்கி முருகவழிபாடு, வள்ளலார் என எல்லாவற்றில் இருந்தும்தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக முருகனை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்று சொல்லவில்லை. சிறுதெய்வ வழிபாடு குறித்து விவாதிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம் ஆனால் அதுவே சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருந்து விடாது.
மாவோ குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. இங்குள்ள நக்குசலைட்டுகள் நம் சமூகச் சூழ்நிலையை உள்வாங்காமல் செயல்படுவதாக ஏற்கெனவே குறிப்பிட்டீர்கள். இப்போதைய நக்குசலைட்டுகளின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நம் இந்தியச் சமூகம் பற்றிய, தமிழ்ச் சமூகம் பற்றிய, ஆளும் வருக்கம் பற்றிய பார்வைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக உள்ளது. எனவே நக்குசலைட்டுகள் என்ற ஒரே வார்த்தையின் கீழ் எல்லாரையும் கொண்டுவர முடியாது. இப்போதைய நக்குசலைட்டுகள் மரபுவழிக் கட்சியின் பார்வையில் இருந்து தங்களை முறித்துக்கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
ஆரம்பத்தில் சாரு மசூம்தார் சீனாவை அப்படியே படிஎடுத்தார்(காப்பியடித்தார்). மாவோ சீன முதலாளிகளைத் தரகு முதலாளிகள் என்றார். இவரும் அதே வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் சீனா ஓர் அரைக்குடியேற்ற(காலனிய) நாடு என்றார், சாருவும் இந்தியாவை அரைக்குடியேற்ற(காலனிய) நாடு என்றார். மாவோ விவசாயப் புரட்சியைச் சிற்றூர்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார். இவரும் அதையே சொன்னார். சீனா அப்போது தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது அதனால் அங்குத் தொழிற்சங்கங்கள் இல்லை. இங்கிருந்த தொழிற்சங்கங்களையும் சாரு மசூம்தார் கலைக்கச் சொன்னார். அங்கு நாடாளுமன்றம் இல்லை, அதனால் மாவோ தேர்தலில் போட்டியிடவில்லை. இங்கு நாடாளுமன்றம் இருந்தும் இவர்கள் போட்டியிடவில்லை.
இந்தப் பார்வையில் இருந்து முழுமையாக இப்போதைய இயக்கவாதிகள் விடுபட்டு விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நான் ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தொடர் எழுதும் போது மா.இலெ.(எம்-எல்.) தோழர்கள் சிலர் ‘நக்குசலைட்டுகள் பற்றி எழுத வேண்டா, அது எதிர்வினையை ஏற்படுத்தி விடும்’ என்று கூறினார்கள். ‘அப்படி எதிர்வினை ஏற்பட்டால் மகிழ்ச்சிதான், ஏனெனில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் போது, பல்லாயிரம் பேர் ஓர் இயக்கத்தை நம்பி எல்லாவற்றையும் துறந்து அந்த இயக்கத்தில் சேரும் போது அதன் தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கக் கூடாது, பொறுப்புணர்வோடு அந்தப் போராட்டத்தை நடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஓர் இயக்கத்தைத் தவறாக வழிநடத்துபவர்களை அவசரக் குடுக்கைகள் என்று சொல்வதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை’ எனக் கூறினேன்.
நக்குசலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிச வாழ்க்கை அதை அங்கீகரிக்காத போது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி.
சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும் போது, அந்த மாற்றத்தைச் செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும் போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வுநிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது. இதுபோன்ற செயல்களை இலெனின் ‘செயலற்ற தீவிரவாதம்’ என்று குறிப்பிடுவார். அந்தச் செயலற்ற நிலையைத்தான் இப்போதைய நக்குசலைட்டுகளிடம் நான் பார்க்கிறேன்.
சமீபத்தில் தமிழ்த் தேசியவாதிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது வழங்கிச் சிறப்பித்தது. அதே மேடையில் மகாலிங்கம் சமற்கிருதத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து…
மகாலிங்கத்திற்கு விருது கொடுத்தது மிகப்பெரிய தவறு. அதில் என் பங்கு எதுவும் இல்லை. நெடுமாறனுடைய முடிவு அது. எனக்கு அதில் உடன்பாடு இல்லா விட்டால் நான் அங்குச் சென்றிருக்கவே கூடாது அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். சென்ற பிறகு அந்த மேடையில் அழைத்தவர்களையே தாக்கிப் பேசுவது நாகரிகமாக இருக்காது. சமற்கிருதத்தின் முதன்மை பற்றி பொள்ளாச்சி மகாலிங்கம் பேசியதை வைகோ அந்த மேடையிலேயே மறுத்துப் பேசினார்.
மொழிக்கொள்கை குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருமொழிக் கொள்கைதான் சரி என்றும், இருமொழிக் கொள்கையால் ஆபத்து இல்லை என்றும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
தேசிய இனம் என்பதே ஒருமொழி அடிப்படையிலானது. எனவே தம்மொழி முதன்மை பெற வேண்டும் என்கிற போதே ஒருமொழிக்கொள்கை தான் சரி. ஆங்கிலத்தைத் தேவை கருதி பயன்படுத்துவதில் தவறே இல்லை. ஆனால் அதற்கு இருமொழிக் கொள்கை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? இருமொழிக்கொள்கை என்று வரும்போதே தமிழையும் ஆங்கிலத்தையும் சம இடத்தில் வைக்கிறோம் என்றுதானே அர்த்தம்?
காங்கிரசுகாரர்கள் சொல்லும் மும்மொழிக்கொள்கை என்பது இந்தி ஆதிக்கம்தான். அதேபோல் இருமொழிக் கொள்கை என்பது ஆங்கில ஆதிக்கக் கொள்கைதான். அதாவது மும்மொழிக்கொள்கை என்பது இந்தி என்கிற ஒருமொழிக் கொள்கை. இருமொழிக்கொள்கை என்பது ஆங்கிலம் என்கிற ஒருமொழிக் கொள்கை.
எல்லாப் பாடத்திட்டங்களும் தமிழில் இல்லாத நிலையில் நாம் ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டால் தமிழ் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறதே?
ஆங்கிலத்தில் இருக்கும் போது அதை அப்படியே படிப்பதில் தவறில்லை. அதைத் தமிழில் மாற்றுவதற்கு இங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பொறியியல், மருத்துவ படிப்புகள் இப்போது ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அதைத் தமிழில் கொண்டுவரும் வரை அந்தக் கல்லூரிகளை மூடி விடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதைத் தமிழில் கொண்டுவருவதற்கு என்ன தடை? என்றுதான் கேட்கிறோம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக