(தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 தொடர்ச்சி)
பொருளியல் நலிவு என்ற பெயரில்
பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8
சரி, இந்தச் சமூக மற்றும் கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எந்த ஊரில் அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? அப்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பின்தங்கிய வகுப்புகள் – இதுதான் அம்பேத்துகர் பயன்படுத்திய வார்த்தை – சமூக வழியில் கல்வி வழியில் பிற்பட்ட வகுப்புகள் என்றனர். ‘கிளாசு’ என்றால் என்ன? அந்த ‘கிளாசு’க்குள் மறைந்திருப்பது ‘காசுட்டு’. நீங்கள் ‘பிசி’ என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்ன சாதி என்பதைக் கேட்டால்தான் நீங்கள் ‘பிசி’யா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். என்ன சாதி என்று கேட்டால்தான் ‘எசுசி’ அல்லது ‘எசுடி’ என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அப்போது இந்தச் சாதி என்பதை வைத்து அந்த சாதிச் சான்றிதழ் வைத்துத் தான் உங்களை ‘பிசி’யில் சேர்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்காக நாம் போய் நின்றோம் என்றால் சாதியைச் சொல்லிச் சாதிக்குக் கொடுக்கவில்லை இட ஒதுக்கீடு! ஆனால் அந்தச் சாதி என்பதை வைத்து என்ன ‘கிளாசு’ என்று பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.
அப்போது இந்த அளவுகோல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. அதாவது சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு என்பது சாதிக்குத்தான்! தாழ்த்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்குத்தான் இட ஒதுக்கீடு! இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தைப் பற்றி அவரவர் நண்பர்களின் குடும்பத்தைப் பற்றி அவரவர் உறவுக்காரர்களை பற்றி அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நம் குழந்தைகள் படிக்கிறார்கள். நம் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்கள். வடநாட்டைப் போல் இங்கு இல்லை, வங்காளத்தைப் போல் இல்லை, ஏன் இந்த இட ஒதுக்கீட்டினால்தான்!
இந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இவ்வளவு படிப்பறிவு வந்திருக்காது. இவ்வளவு வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க முடியாது. இது போதும் என்று நாம் நிறைவடையவில்லை. ஆனால் இதுவாவது வந்தது என்றால் அது இந்த இட ஒதுக்கீட்டினால்தான்! இதனால் என்ன பார்ப்பனர்களுக்குப் பங்கு குறைந்து போய் விட்டதா? அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் போய் விட்டதா? எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். ‘இரயில்வே’யில் மேலாளர்கள் யார்? வங்கிகளில் யார் உட்கார்ந்திருப்பது? ஒன்று, பார்ப்பனர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இட ஒதுக்கீட்டின் மூலமாக வந்த எசுசி எசுடியாக இருப்பார்கள். மண்டல் குழுவின் பரிந்துரையால் வந்தவர்கள் இன்னும் போதிய எண்ணிக்கையில் வரவில்லை. இவையெல்லாம் கருதித்தான் இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எசுசி எசுடி அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், அதாவது ஓபிசி-க்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது அந்தக் கோரிக்கைக்கு உருவம் கொடுப்பதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சட்டத்திலே அம்பேத்துகர் எழுதி வைத்தார். ஆனால் நேருவும் வல்லபாய் பட்டேலும் அந்த ஆணையத்தை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள் அம்பேத்துகர் பொறுத்துப் பொறுத்து பார்த்தார், இந்தப் பதவி வேண்டா என்று பதவியை விட்டு விலகி விட்டார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காகத்தான் அம்பேத்துகர் பதவி விலகினார். இரண்டு காரணம்: ஒன்று பெண்களுக்காக! இன்னொன்று பிற்படுத்தப்பட்டவர்களுக்காக! அவர் பதவியை விட்டு விலகி வந்தார் அதற்குப் பிறகு காக்கா கலேல்கர் ஆணையம் போட்டார்கள். அதைச் செயல்படுத்தவில்லை, அப்படியே கிடப்பில் கிடந்தது.
1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை ஓய்ந்து, ஒரு புதிய சனதா அரசாங்கம் வந்தது. அந்த கட்சியில் பல பேர் சோசலிசுட்கள் இருந்தார்கள் அவர்களுடைய முயற்சியினால் முதன்முதலாக மண்டல் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. யாரெல்லாம் ஏனைய பிற்படுத்தப்பட்டவர்கள்? இந்திய அளவில்? தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. அந்தக்குழு தான் இந்தப் பரிந்துரையை வழங்கியது: 27 விழுக்காடு! ஏன் வழங்கியது? தெளிவாக அந்தக் குழு கணக்கெடுத்தது. வெறுமனே தெருவில் போகிறவர் வருபவர்களைக் கொண்டு எல்லாம் முடிவு செய்யவில்லை. இந்திய அரசுப் பணிகளில் என்ன சாதிக்கு என்ன இடம் இருக்கிறது? என்று கணக்கெடுத்து அவர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்றால், 60%ஆவது இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் நாலு விழுக்காடுதான் இடம் இருக்கிறது. நூற்றுக்கு 15 பேர் எசுசி எசுடியாக இருக்கிறார்கள் நூற்றுக்கு நான்கு பேர் எம்பிசியாக இருக்கிறார்கள். ஆனால் எஞ்சிய அத்தனை பேரும் யாராக இருக்கிறார்கள்? பார்ப்பனரும் உயர் சாதியினருமாக இருக்கிறார்கள்
இவர்களுடைய வாழ்க்கை எப்போது முன்னேறும்? காலமெல்லாம் நிலத்தில் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். காலமெல்லாம் பரம்பரைத் தொழிலைச் செய்து கொண்டே இருப்பார்கள். சாதி வீராப்பு பேசி மீசையை முறுக்கிக் கொண்டு ஊருக்குள் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்கள். குடிசையைக் கொளுத்திக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவனுக்குக் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் வராது என்று, அவர்களுக்கு 27 விழுக்காடு வழங்கியது, வேலைவாய்ப்பில் வழங்கியது மண்டல் குழு. ஆனால் 27 விழுக்காடு கொடுத்தாகி விட்டது என்றால் அது நடைமுறைக்கு வந்த உடனேயே, கொடுக்கத் தொடங்கி விட்டால் 25 விழுக்காடு அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு இன்னும் 25 ஆண்டுகள் அவர்களுக்கு ஆகும் என்று மண்டல் கணக்குப் போட்டார் உடனடியாகப் போக முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டுக்குக் கொஞ்சம், ஆண்டுக்கு கொஞ்சமாகக் கொண்டு போக வேண்டும். இதை அப்படியே கிடப்பில் போட்டார்கள். சனதா ஆட்சி போனது, காங்கிரசு ஆட்சி திரும்பி வந்தது, யாரும் எதுவுமே செய்யவில்லை.
1991இல் விபி சிங்கு அறிவித்தார், நான் மண்டல் குழுவைச் செயல்படுத்துகிறேன் என்று. எங்கே மண்டல் குழு அறிக்கை என்றார். பாராளுமன்றத்தின் பரணில் கிடந்தது, ஒட்டடை படிந்து கிடந்தது. எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். இதை நான் செயல்படுத்துகிறேன் என்று அறிவித்தார். மண்டல் குழுவைச் செயல்படுத்தக் கூடாது என்று இரண்டு கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நின்றன. ஒன்று காங்கிரசு கட்சி. இராசீவு காந்தி நாடாளுமன்றத்தில் 8 மணி நேரம் பேசுகிறார். மண்டல் குழு கூடவே கூடாது என்று. மண்டலை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடியது ஆர்எசுஎசு-ம் பாசகவும். கொளுத்தினார்கள் மற்றவர்களை! தங்களைத் தாங்களே கொளுத்திக் கொண்டார்கள். மக்களைத் தூண்டி விட்டார்கள். இதற்கு எதிராக ஊருக்கு ஒரு சாதியைக் கிளப்பி விட்டார்கள். மண்டல் குழு கூடவே கூடாது என்று!
தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 153
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக