(தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4. தொடர்ச்சி)

பொருளியல் நலிவு என்ற பெயரில்

பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8

இது போன்ற ஒரு தெருமுனைக் கூட்டத்தை இப்போது நடத்த வேண்டிய தேவை என்ன?  இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் இலாவணிகளுக்கு நடுவே, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே, கொள்கை சார்ந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

ஒன்று, இந்தித் திணிப்பை எதிர்ப்போம், தமிழ் மொழி காப்போம்! இரண்டு, பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம், சமூக நீதி காப்போம்! என்ற இரண்டு முழக்கங்களையும் அடிப்படையாக வைத்துத் தமிழ்நாட்டு மக்களிடம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  ஒரு கருத்துப் பரப்புரையை  மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான் இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு முன்னால் இன்றைக்கு இரண்டு ஆபத்துகள் வந்திருக்கின்றன. இந்த இரண்டு ஆபத்துகளுக்கும் மூல ஊற்றாக இருப்பது மத்தியில் ஆளுகிற நரேந்திர மோதியின் தலைமையிலான பாசக ஆட்சி. இந்த பாசக ஆட்சியினுடைய ஒரு பெரிய வேலைத்திட்டம், அந்தத் திட்டத்தின் இரண்டு முனைகள்தான் இந்த இரண்டும்.  ஒரு ஆபத்து வருகிறது, அதை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிற போதே இன்னொரு ஆபத்தும் வருகிறது. கடைசியாக வந்திருக்கிற ஆபத்துதான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிற ஒரு தீர்ப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26இல் இயற்றப்பட்டு 1950 சனவரி 26 முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் வந்து விட்டன. 2019ஆம் ஆண்டு ஒரு திருத்தம் வந்தது. அதுதான் 103ஆவது திருத்தம். இந்தத் திருத்தம் செல்லுமா செல்லாதா என்று மூன்றாண்டுகளாக ஒரு சர்ச்சை இருந்தது. அதற்கு ஒரு முடிவு கட்டி இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்

அந்தத் தீர்ப்பு என்ன  சொல்கிறது?

பொருளியலில் நலிந்த பிரிவினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சொல்கிறது. இது ஒரு புதிய திட்டம். சுருக்கமாகச் சொன்னால், ஏழைகளுக்கு வழங்கலாம். யார் அந்த ஏழைகள்? அட்டவணைச் சாதி எனப்படுகிற பறையர் பள்ளர் சக்கிலியர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனப்படுகிற வன்னியர் முக்குலத்தோர் மற்றச்  சாதிகள் அல்ல. வேறு யார் இப்படி வந்திருக்கிறார்கள்? இந்த இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறாத, எசுசி, எசுடி அல்லாத, ஓபிசி அல்லாத, அதாவது பிசி, எம்பிசி அல்லாத மற்றவர்கள்! அவர்கள் எஃப்.சி. (forward communities) அல்லது ஓசி (other communities). 

இதில் யார் யார் இருக்கிறார்கள்? தமிழ்நாட்டில் மிக முக்கியமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள். ஐயர்கள், ஐயங்கார்கள், இவர்களைத் தவிர சின்னச் சின்னப் பிரிவினர்கள் இருக்கிறார்கள். சைவ முதலியார், சைவ வேளாளர் இன்னும் சில சாதியினர் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இவர்கள் மொத்தத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 10%க்குக் குறைவு, 100 சதவீதத்தில் பத்திற்கும் குறைவு. அட்டவணைச் சாதிகள், அட்டவணைப் பழங்குடிகள் 20 விழுக்காட்டிற்கு மேல். பிற்படுத்தப்பட்டவர்கள் 60%க்கு மேலே ஆனால் முன்னேறிய சாதியினர் இருப்பது வெறும் பத்து விழுக்காடு. இவர்களுக்கு இந்திய அரசு ஒரு இட ஒதுக்கீடுத் திட்டம் கொண்டுவருகிறது. என்ன சொல்லிக் கொண்டுவருகிறது? ஏழைகளுக்கு என்று சொல்லி!

சரி, அது ஏழைகளுக்கு என்றால், அவர்கள் எந்த வகையில் ஏழைகள்?

வீடில்லாதவர்கள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள், மாற்று உடையில்லாதவர்கள், வங்கிக் கணக்கில்லாதவர்கள்… இவர்களெல்லாம் ஏழைகளாக இருக்கலாம் அரசாங்கத்திலேயே ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார்கள். வறுமைக் கோடு என்று ஒரு கோடு இருக்கிறது நிலநடுக்கோடு போல் வறுமைக் கோடு, அந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்காகச் சிலபல திட்டங்கள்!

வறுமைக்கோடு என்றால் என்ன? ஒரு நாள் வருமானம் ஊர்ப்புறம் என்றால் 27 உரூபாய், நகர்ப்புறம் என்றால் 33 உரூபாய்… இதுதான் அரசாங்கக் கணக்கு. 33 உரூபாய்க்கு மேலே சென்றால் அவர்கள் பணக்காரர்கள் என்று பொருளில்லை. ஆனால் அவர்கள் பரம ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லை என்று பொருள். இந்த 33 உரூபாயை வைத்துக் கொண்டு நகரத்தில் யார் வாழ்கிறார்களோ அவர்கள் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள். ஊர்ப்புறத்தில் 27 உரூபாய்க்கு உள்ளேதான் வருமானம் என்றால் அவர்கள் வறுமைக்கோடு.

இவர்களுக்கு அரசு பார்த்து ஒரு நன்மை செய்தால் யார் வேண்டா என்று சொல்லப் போகிறோம்? தாராளமாகச் செய்யலாம்? எந்தச் சாதியாக இருந்தாலும் செய்யலாம். பசியோடு இருப்பதில் சாதி இருக்கிறதா? தாகம் தவிப்பதில் சாதி இருக்கிறதா? இல்லை, என்ன சாதியாக இருந்தாலும் ஏழைச் சாதி, அவ்வளவுதான். இவர்களுக்குத்தான் இந்த இடஒதுக்கீட்டுத் திட்டமா என்று கேட்டால் இல்லை.

அல்லது, அடுத்தாற் போல் வருமான வரி என்று ஒரு வரி இருக்கிறது. நாம் யாரும் வருமான வரி கட்டுவதில்லை, அவ்வளவு வருமானமே இல்லை. இருந்தால் வந்து எடுத்துக் கொண்டு போகலாம். அவ்வளவு வருமானம் நமக்கில்லை. இந்திய அரசாங்கம் வருமான வரிக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறார்கள். 27 ஆயிரம் உரூபாய்க்கு மேல் மாத வருமானம் இருக்க வேண்டும் நீங்கள் கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம் அல்லது வணிக நிறுவனம் வைத்து இருக்கலாம். 27 ஆயிரம் உரூபாய்க்கு மேலே இருந்தால் அவர்கள் வருமான வரி கட்டுகிறார்கள். வருமான வரி கட்டுபவர்களுக்கு ஏழை என்று பெயர் உண்டா? அரசாங்கம் சலுகை கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய ஏழைகளா அவர்கள்?

நம் நடிகர்கள் எல்லாம் வருமான வரி கட்டுகிறார்கள் அல்லது கட்டாமல் ஏய்க்கிறார்கள். திரைப்படம் எடுப்பவர்கள் கட்டுகிறார்கள் அல்லது ஏய்க்கிறார்கள். தொலைக்காட்சி நடத்துபவர்கள் கட்டுகிறார்கள் அல்லது ஏய்க்கிறார்கள். அவர்களெல்லாம் ஏழை இல்லை. அவர்களெல்லாம் வருமான வரி கட்டுபவர்கள், அதற்கு வரம்பு என்ன? 27 ஆயிரம் உரூபாய். சரி, வருமான வரி கட்டாதவர்களையெல்லாம் அரசாங்கம் ஏழைகளாகக் கருதுகிறது. அவர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கிறது என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஏன் கொடுக்க வேண்டும் என்று கூட நாம் கேட்கவில்லை.

ஆனால் இந்த ஏழைகளுக்கு இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசாங்கம் கொண்டுவந்திருக்கிற திட்டம் இருக்கிறதே… இந்தத் திட்டம்  வருடம் 8 இலட்சம் உரூபாய், அதற்குக் கீழே இருந்தால் ஏழைகளாம்!

  • தெருமுனைக் கூட்டம், கீழ்க்கட்டளை, 2022 நவம்பர் 22

 தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 153