பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த
த.செ.இறையன்பிற்குப் பாராட்டு!
“தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 இல்”, நாம், “தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க!” என வேண்டிக் கட்டுரை எழுதியிருந்தோம். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.
“முனைவர் மு.தமிழ்க்குடிமகன் தமிழ் ஆட்சிமொழி அமைச்சராக இருந்த பொழுது, தலைமைச் செயலர் அறை முகப்பில் பொன்னெழுத்துகளில் ஆங்கிலம் வீற்றிருக்கிறது. தலைமைச் செயலர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டு மடல் அனுப்பினேன். மூன்று நாளில் மதுரை வந்த அமைச்சர், “இப்பொழுது போய்ப்பாருங்கள். பொன்னெழுத்துகளில் தமிழைக் காணலாம்” என்றார்.
தலைமைச் செயலகம் வந்து பார்த்த நான், தலைமைச் செயலர் என்னும் பதவிப்பெயரை மட்டும் தமிழில் குறிக்கப்பட்டதைக் கண்டேன். ஆனால், பெயர் நிரல் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதை அமைச்சரிடம் தெரிவித்தேன். பின் நடவடிக்கை எடுத்த பின், அப்போதைய தலைமைச் செயலர் பெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டனர். பின் வலியுறுத்தியதும் இறுதிப்பலகையில் தமிழில் பெயர்களைக் குறித்தனர். அடுத்தும் தமிழில் பெயர்கள் எழுதப்பட்டன. பின்னர் எப்போதோ ஆங்கிலத்திற்கு மாறிவிட்டனர். நேற்று நான் தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.”
இவ் வருத்தத்தைப் போக்கும் கையில் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. நடவடிக்கை எடுத்துள்ளார். அறை முகப்பில் உள்ள பதவியாளர் நிரல் பெயர்ப்பலகையைத் தமிழிலும் வைத்துள்ளார்.
இது குறித்து “இன்று(15.05.23)முதல் தமிழிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது எனப் புதிய தலைமுறைச் செய்தி வெளியிட்ட படத்தையும் நமக்கு அனுப்பியுள்ளார். ஏன் தமிழில் மட்டும் வைக்கக்கூடாதா எனச் சிலர் எண்ணலாம். பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் அறிய ஆங்கிலத்திலும் பெயர்ப்லகை தொடர்கிறது.
தலைமைச் செயலர் தன் பெயரை மட்டும் தமிழில் ஆங்கிலப் பெயர்ப்பலகையில் குறிப்பிட்டிருந்தால் இயல்பான செயலாக இருந்திருக்கும். அடுத்து வருபவர் அல்லது சில முறை கழித்து வருபவர் அவரவர் விருப்பத்தில் பெயர்ப்பலகை இருக்கலாம் எனக் கருதி மீண்டும் ஆங்கிலத்திற்குத் தாவியிருப்பார். அல்லது இப்போதைய பெயர்ப்பலகை நிறைந்ததும் அடுத்துப் புதிய பெயர்ப்பலகையை ஆங்கிலத்தில் வைப்பர்.
அவ்வாறில்லாமல் தனியாகத் தமிழிலும பெயர்ப்பலகை வைத்துள்ளமையால் அடுத்து வருபவர் தமிழிலும் பெயர்ப்பலகை வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
எனவே, உரிய நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களை மனமாரப் பாராட்டுகிறோம். (மனமார என்றால் மனம் நிறைய எனப்பொருள். இது தெரியாமல் பலர் மனமாற எனத் தவறாக எழுதுகின்றனர்.)
மேலும் அவருக்கு மூன்று வேண்டுகோள்கள்.
1. பெயர்ப்பலகைக்குப் பொறுப்பான பிரிவிற்கு, 1) எப்பொழுதும்தமிழிலும் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்றும் 2.) மீறுவோர் மீது அரசு பணியாளர் நடத்தை விதியின் கீழ் ஒழுங்கு நடவடிககை எடுக்கப்படும் என்றும் நிலையாணை பிறப்பிக்க வேண்டும்.
2. நமது கட்டுரையில் குறிப்பிட்டவாறு, “ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆய்வு-கண்காணிப்புப் குழுவை அமர்த்தி, என்றும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்வதை நனவாக்க” வேண்டுகிறோம்.
3. தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 23 கட்டுரையில், “ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்!” எனக் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு இப்பெயர்ப் பலகையில் தமிழ் இடம் பெற்றது தொடக்கமாக இருக்கட்டும். எனவே, முன்னர் என்ன ஆணைகள் இருப்பினும் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கத்தை எல்லா நிலையிலும் கடைப்பிடிக்க வேண்டிப் புதிய ஆணைகளையும் வழங்க வேண்டுகிறோம்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.(திருவள்ளுவர், திருக்குறள் 661)
ஆம்! ஒன்றைச் செய்ய வேண்டும் என மன உறுதி இருந்தால்தான் அதனைச் செய்து முடிப்பர்! வினைத்திட்பம் கொண்ட பணிநிறைவில் மாற உள்ள முனைவர் வெ.இறையன்பு, ஆங்கிலம் இடம் பெற்றிருக்கும் இடங்கள் எல்லாம் தமிழுக்கு மாறத் தக்க நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்து வாழ்த்துகிறோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக