(தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 8

யமுனா ராசேந்திரன் அன்பர் விசுவுடன் என்னை நேர்கண்டு எடுத்த செவ்வியின் மூன்றாம் இறுதிப் பகுதி இதோ:

யமுனா:

தமிழ்த் தேசியப் இனப் போராட்டத்தினூடே  தென்னிந்தியத் தேசிய இனங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய அரசியல் என்ன நிலைபாடு எடுக்கும்?

தியாகு:

தேசிய இனங்களில் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன.  கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலையாளத் தேசியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது இந்திய எதிர்ப்புத் தன்மையயை விட அதிகமாகத் தமிழ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கன்னடத்திலும். அவர்களுக்குத் தமிழ் எதிர்ப்புதான் இந்திய தேசிய எதிர்ப்பை விடவும் முதன்மையாக இருக்கிறது. இது தற்காலிமான ஒரு போக்குதான். இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அனுபவம் அவர்களுக்கு உணர்த்தும்.

யமுனா:

தேசியஇனச் சிக்கலில் உலகமயமான சில கூறுகள் இருக்கின்றன. (உ)யுகோசுலாவியாவில் செருபியர்களுக்கும் பிற தேசிய இனங்களுக்குமான கோளாறாக இருந்த சிக்கல் கொசவா பொசுனியா போன்ற நாடுகளின் பிரிவினைக்குப் பிறகு – விடுதலையடைந்த பிறகான கொசவா பொசுனியாவில் உள் இருக்கும் சிறுபான்மையினத்தவர்க்கும் தற்போது ஒப்பீட்டளவில் பேரினமாகி விட்டவர்களுக்குமான ஆயுத மோதல்களாக வெடித்திருக்கிறது. இவை தேசிய இனத்துக்குள் இருக்கிற சிறு சிறு இனக் குழுக்களின் உரிமைகளுக்கான சிக்கல்களாகியிருக்கின்றன. கேரளாவில், கருநாடகாவில் தமிழர் எதிர்ப்புணர்வு இருக்கிறது போலவே தமிழகத்திலும் மலையாளி எதிர்ப்புணர்வுக்கான, தெலுங்கர் எதிர்ப்புணர்வுக்கான சான்றுகள் இருக்கின்றன. ஆகவே ஒருவருக்கொருவர் வெறுப்பின் பொருட்டு இந்தத் தேசிய இனப் பிரதேசங்களில் நடக்கிற கலவரங்கள் அல்லது சிக்கல்கள் ஒன்றுக்கொன்று தேசிய இனங்களின் அரசியலின் மீது தாக்கம் தொடுக்கும். ஆகவே நீங்கள் இலட்சியப்படுத்திக் கொள்கிற மாதிரி இந்தப் போராட்டங்கள் கலவரம் தவிர்ந்ததாகவோ இன வெறுப்பு தவிர்ந்ததாகவோ இருக்க முடியாது.

தியாகு:

பெரியார் அணைச் சிக்கலில் நாம் கேரள தேசியத்தை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே போல காவிரிச் சிக்கலில் நாம் கர்நாடகத்தோடுதான் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் ஐனநாயகபூர்வமான தேசிய இயக்கத்தை நடத்தக் கூடிய தலைமை அந்த மககளுக்கெதிரான விரோதவுணர்வு கொண்டதாக இப்போராட்டத்தைக் கொணடுபோகக் கூடாது. கொண்டு போகவும் முடியாது. இந்தியத் தேசியத்தின் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்பதை இருவருமே உணர்வார்கள். இன்று கன்னட தேசியம் பேசுகிறவர்கள்  பால் தாக்கரே பேசுகிற மராட்டிய தேசியம் போல இந்தியத் தேசியத்தின் ஒரு பகுதியாகத்தான் அதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

யமுனா:

தென்னிந்தியத் தேசிய இனங்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகள் ஒரு வன்முறையிலான முரண்பாடாக உருவாவதற்கான எல்லாச் சாத்தியங்களும் இருக்கிறது. தேசியவாதத்தை குடிநாயக நிலையாகவோ இலட்சியவாத நிலையாகவோ எல்லாத் தேசியஇனவாதிகளும் பார்க்க அவசியமில்லை. மற்ற மாநிலங்களில் தேசியத்தின் வளர்ச்சி நிலைமைகளைப் பொறுத்து குணா போன்றவர்கள் முன்வைக்கிற கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் கை ஓங்கலாம் – இவ்வாறான சூழலில் இனங்களுக்கிடையில் இரத்தக்களறியான கலவரம் தோன்றுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இது இவ்வாறிருக்க நான் ஜரோப்பாவின் தேசியப் போர் தொடர்பான பட்டறிவுகளுக்குப் போகிறேன். ஜரோப்பாவில் தேசியம் ஒரு குடினநாயகத்துக்கான அவா எனும் அளவில் தேசியத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஐரோப்பாவில் அண்மையில் நிறைய  தேசங்கள் தோன்றியுள்ளன. செக்கோசுலாவாகியா இரண்டாகியிருக்கிறது. பொசுனியா கொசவா மெசடோனியர் மோண்டிநிக்குரோ போன்றன பழைய (உ)யுகோசுலாவியாவில் இருந்து உருவாகியிருக்கின்றன. சமவேளையில் ஐரோப்பிய ஒன்றியன் எனும் பெயரில் தேசிய இன அடிப்படைகளை மறுத்து பொருளியல் ஒருமைக்கான அரசியல் நிருவாக ஒருமைக்கான கூட்டமைப்பு உருவாகிவருகிறது. இன்னும் பிரிந்த தேசங்கள் ஜரோப்பிய ஒன்றியன் உறுப்பினராவதற்கும் விண்ணப்பித்து வருகின்றன. பொருளாதாரம் மட்டுமல்ல, இவர்களை இணைக்கிற விடயங்களாக வெள்ளை நிறம், பண்பாடு போன்றவையும் இருக்கின்றன. இவ்வாறான சூழலில் இந்திய நிலைமைகளை எடுத்துக் கொணடு பாரக்கிற போது இந்தியாவில் தேசிய இனச் சிக்கல் தோன்றுவதற்கான காரணங்களாக என்னால் இரண்டு தலையாய சிக்கல்களைப் பார்க்க முடிகிறது. ஒன்று பொருளியல் முறையிலானது. அடுத்தது பண்பாட்டு முறையிலானது. பொருளியல் முறையிலானது என்கிற போது இந்திய மாநிலங்களுக்கிடையில் நிறையப் பொருளாதாரச் சமனின்மை நிலவுகிறது. மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலின் காரணங்களால் வடகிழக்கு மாநிலங்கள் அநியாயமான முறையில் பின்தங்கியிருக்கின்றன. பண்பாட்டு முறையிலான சிக்கல் என்று வருகிற போது இந்தி மொழி வளர்ச்சிக்காக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்குகிறது. இந்திக்கு அளிக்கும் முதன்மைத்துவம் இநதியாவின் பிற மொழிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. புழக்கத்தில் இல்லாத சமற்கிருத மொழி வளர்ச்சி பிராமணிய ஆதிக்கத்தோடு பிணைக்கப்பட்டு, அரசின் நிதி அதனது வளர்ச்சிக்குப் பயன்பத்தப்படுகிறது. இந்தப் பண்பாட்டு, பொருளியல் சமனின்மையிலிருந்துதான் இந்தியத் தேசிய இனச் சிக்கல் என்பதும் தேசிய உணர்வு என்பதுவும் உருவாவதாகக் கருத முடிகிறது. தமிழர்கள் இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி வாழ்கிறார்கள். நாகாலாந்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள். தில்லியிலும் இருக்கிறார்கள் கல்கத்தாவிலும்  இருக்கிறார்கள். திருவனந்தபுரத்திலும் இருக்கிறார்கள். இவ்வாறாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை எடுத்துக் கொண்டு தேசியத்தை வரையறுப்பதில் நிறையப் பாரதூரமான எதிர்மறையான போக்குகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவ்வகையில் நிலவிவரும் ஐரோப்பிய ஒன்றியன் பட்டறிவுகளை எடுத்துக் கொண்டு  குடிநாயகத்துக்கான, தேசியப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு, ஏன் ஒரு இந்தியக் கூட்டாளுமைக்கான முறைக்கான முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது? ஏனெனில் இந்தியாவில் நம்மைப் பிரிக்கிற தன்மைகள் இருக்கின்றமை போலவே இணைக்கிற தன்மைகளும் நிறைய இருக்கின்றன. தென்னிந்தியத் தேசிய இனங்களுக்கிடையில் பண்பாட்டு முறையில் நிற அடிப்படையில் உணவு உடை உறையுள் போன்ற பழக்கங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஞானி போன்றவர்கள் திராவிடப் பண்பாட்டுக் கூறுகள் இந்தியாவெங்கிலும் பரந்து கிடக்கின்றன என்கிறார்கள்.  எனில் ஏன் இரத்தக்களறியை, இன இரண்டகத்தைத் தவிர்க்கிற மாதிரியான அரசியலை முன்னெடுக்கக் கூடாது? இன்னும் ஒடுக்கப்பட்டோர் சிக்கல் என்பது இந்தியத் தேசம் தழுவிய சிக்கலே ஒழிய தமிழ்த் தேசியம் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல என்பதையும் நினைவில் கொண்டு ஏன் அவ்வாறான ஓர் அரசியலை மாற்றரசியலாகத் தேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது?

தியாகு

ஐரோப்பாவில் ஏற்கெனவே தேசிய அரசுகள் உருவாகி விட்டன. குடிநாயக அரசியல் என்பது தேசங்களுக்கிடையில் உருவாகி விட்டது. அந்தத் தேசிய அரசுகள் நெருங்கி வருகின்றன. அவற்றுக்கிடையில் ஒற்றுமையைப் பேசுகின்றன. தேசிய அரசுகள் உருவாகி வளர்ந்த பிறகுதான் பொதுவான சந்தையை உருவாக்குவது நிருவாக அலகுகளை உருவாக்குவது போன்ற வளர்ச்சிகள் வந்திருக்கின்றன. அயர்லாந்து பற்றி மார்க்குசு குறிப்பிடுகிறபோது முதலில் அயர்லாந்து பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். பிற்பாடு அவர்கள் ஒரு கூட்டமைப்பாகக் கூட இணையலாம் என்கிறார். கூட்டமைப்பு என்று சொல்கிற போது தன்னுரிமையாக(சுதந்திரமாக) இருக்கிற தேசிய அரசுகள் தம் விருப்பில் இணைகிற ஒரு முறை அது. கூட்டமைப்பிற்கான முன் நிபந்தனையே தேசியத் தன்னுரிமைதான்.  தேசிய ஒடுக்குமுறை என்று ஒன்று இருந்தால் அந்த ஒடுக்குமுறைக்கெதிரான தீர்வு என்பது தேசிய விடுதலைதான்.  விடுதலை பெற்ற பின்னால் ஒரு கூட்டமைப்புக்குள் வருவதில் சிக்கலில்லை. நான் ஆந்திரா போகும் போது அடிக்கடி எண்ணுவதுண்டு. வாயைத் திறந்து பேசினால் மட்டும்தான் நமக்கிடையில் வேறுபாடு உண்டு. மற்றபடி வீடு உணவு உடை- இன்னும் திரைப்படக் கவர்ச்சி கூட ஆந்திராவைச் சேர்ந்தவனுக்கும் தமிழகத்தைச் சேர்நதவனுக்கும் வேறுபாடில்லை. தமிழகத்துக்கு எம்ஞ்சிஆர். ஆந்திராவுக்கு என்.டி.ஆர். மொழி தவிர ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் நிபந்தனை யாதெனில் விடுதலை பெறுவோம். பிற்பாடு கூட்டரசுபற்றிக் கருதிப் பார்க்கலாம்.

தென்னிந்திய மாநிலங்களிடையில் இருக்கிற குறிப்பான சில சிக்கல்களால் இனத் தூய்மை போன்றவை நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. எம்ஞ்சியார். எதிர்ப்புக்காகவே கருணாநிதி தமிழர் படை என்று ஒன்றை உருவாக்கி மலையாளி எதிர்ப்பை வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் எம்ஞ்சியாரை ஒரு போதும் அன்னியனாகவோ மலையாளியாகவோ பார்க்கவில்லை. இன்னும் மலையாளியாக இருந்தது அவருக்கு நேர்மறையாக இருந்தது. காரணம் இந்தத் தமிழ் நாட்டிலிருக்கும் எந்தச் சாதியாகவும் அவர் பார்க்கப்படவில்லை. இது அவருக்கு ரொம்பவும் சாதகமான தன்மையாக இருந்தது. எம்ஞ்சிஆருக்குக் கிடைத்த புகழுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. அவர் எந்த சாதிக்காரரும் கிடையாது – எல்லாருக்கும் பொதுவான மனிதர் அவர் என்று இந்த மக்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதார அடிப்படையை வைத்த போதும் பிற்பாடு இட ஒதுக்கீட்டை ஐம்பது விழுக்காடாக உயர்த்திய போதும் அவருக்குச் சாதிய உள்நோக்கம் கற்பிக்க முடியவில்லை. தமிழகத்தில் இவ்வாறான வன்முறைகள் எதுவும் பிற இனத்தவர் மீது நடைபெறவில்லை. அபபடித் தூண்டியவர்களும் மக்களிடம் இருந்து அன்னியமாகிப்  போனார்கள். காவிரிச் சிக்கலில் கூடத் தமிழர்கள் கன்னடர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடவில்லை. தமிழக மக்கள் அந்த மரபில்தான் வந்திருக்கிறார்கள். கேரள மக்கள்  பற்றியும் நான் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறேன்.

மூலம்: பதிவுகள் மே 2003; இதழ் 41.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 67