(தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி)
ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி
ஒரு நாள் ஏஎம்கே ஏதோ உடல்நலிவுக்காகச் சிறை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் உடம்பைக் காண்பித்து, மருந்து கேட்டார். மருத்துவர் சொன்னார்:
” இதோ பாருங்கள் ஐயா. இது கறுப்புக் குல்லா சிறை. இங்கே மருந்தெல்லாம் அவ்வளவாகக் கிடைக்காது. ஏதாவது வாணாளர்(லைஃபர்) சிறைக்குப் போய்விட்டீர்கள் என்றால் நல்ல மருந்தாகக் கிடைக்கும்.”
ஆக, நோய்க்கு மருந்து கொடுப்பதில் கூட கறுப்புக் குல்லாய் என்றால் பாகுபாடு! உணவு தொடர்பாகவும் கூட இப்படித்தான்.
“இது கறுப்புக் குல்லா சிறை , இங்கு திட்ட உணவெல்லாம்(diet) எழுதினால் கேள்வி வரும்” என்பார் சிறை மருத்துவர்.
“இது கறுப்புக் குல்லா சிறை, இங்க உணவெல்லாம் சரியாகக் கேட்கக் கூடாது. எடை போட்டுக் கேட்கிறதெல்லாம் வாணாளர் சிறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என்பார் துணைச்சிறை அலுவலர்.
கறுப்புக் குல்லாய்களுக்கு எதிரான இந்தப் பாகுபாட்டை எதிர்த்து ஏ. எம். கே. பேசலானார். இந்தப் பரப்புரை பையப் பையச் சிறையெங்கும் பரவி கறுப்புக் குல்லாய்களில் சிலர் அவரைத் தேடி வரலாயினர்.
இரண்டாவதாகக், கறுப்புக் குல்லாய்களுக்கும் ‘வெள்ளைக் குல்லாய்களுக்குமான முரண்பாட்டுக்குத் தீர்வுகாண வேண்டியிருந்தது. தண்டனைக் காவலர்கள் (convict warders), மேற்பார்வையர், அனைவருமே வெள்ளைக் குல்லாய்கள். கறுப்புக் குல்லாய்கள் எப்படியும் தலைமை வேலையாள் பதவிக்கு மேல் போக முடியாது.
கைதிகளுக்கிடையிலான இந்த முரண்பாட்டைப் பாதுகாப்பதில் சிறை நிருவாகம் கவனமாய் இருக்கும். இந்தப் பிரித்தாளும் நடைமுறையை ஏ.எம். கே. அம்பலப்படுத்திப் பேசலானார்.
ஒருசில மாதங்கள் உருண்டோடின. ஏ.எம்.கே.க்கு ஒவ்வொரு தொகுதியிலும் ஓரிரு கைதிகளாவது கிடைத்து விட்டனர். அவர் களுக்கும் ஏ.எம்.கே.க்கும் அறுபடாத தொடர்பைக் காக்க சில காவலர்கள் பயன்பட்டார்கள். தண்டனைக் காவலர்களிலும் சிலர் வந்து சேர்ந்தனர். இவ்விதம் ஒரு குறைந்தபட்ச வலைப்பின்னலை ஏஎம்கே உருவாக்கிக் கொண்டார். இந்த வலைப்பின்னலைக் கொண்டு தன் கருத்துகளைப் பரப்பலானார்.
சிறையில் மஞ்சள் காமாலை நோய் பரவிய போது நோயாளிகளுக்கு உரிய மருந்து, பத்திய உணவு எதுவும் கிடைக்கவில்லை. ஒருசிலர் மட்டுமே வெளி மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். சிறை மருத்துவமனையும் நிறைந்து, எஞ்சியவர்கள் தொகுதிகளிலேயே அடைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் நோய் மென்மேலும் பரவிக் கொண்டிருந்தது.
காமாலை நோய்க்குத் தக்க சிகிச்சை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏஎம்கே தெரிவித்த யோசனையைப் பெரும்பாலான கைதிகள் ஏற்றுக் கொண்டார்கள். உண்ணாவிரதத்துக்குப் பிறகு ஓரளவுக்குக் காரியங்கள் நடந்தன. இந்த வெற்றி கைதிகளின் ஒற்றுமையையும் ஏஎம்கேயின் வழிகாட்டுதலையும் உறுதிப்படுத்தியது. சிறை அதிகாரிகளால் முன்போல் ஏஎம்கேயை அலட்சியம் செய்ய முடியவில்லை. .
“மற்றக் கைதிகளுக்காகப் பேசாதீர்கள், உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்ற வழக்கமான வசனமெல்லாம் ஏஎம்கேயிடம் எடுபடவில்லை. கைதிகளின் ஒருமித்த குரல் ஒலிப்பதற்கு ‘வரிசைப் பார்வை’(file) எனப்படும் வாரப் பார்வையையும் ஏஎம்கே பயன்படுத்திக் கொண்டார்.
கண்காணிப்பாளரும் மாவட்ட மருத்துவ அதிகாரியும் ஏனைய அதிகாரிகளும் வரிசையாக நிற்கும் கைதிகளின் குறைகேட்க வரும் போது, ஏஎம்கே. ஒரு கோரிக்கையை முன்வைத்தால், ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று கைதிகளாவது அதே கோரிக்கையை முன்வைப்பார்கள்.
ஒருமுறை சிறைத்துறையில் உயரதிகாரி ஒருவர் சிறையைப் பார்வையிட வந்தார். அவர் ஏஎம்கேயிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்.
“நீங்கள் அழித்தொழிப்பு(Annihilation)க் கொள்கையராயிற்றே! இப்போதும் அப்படித்தானா?”
“ஆமாம், ஆமாம், இப்போதும் அழித்தொழிப்புக் கொள்கைதான்.
“சிறையிலும் கூடவா?”
“ஆமாம், அதிலென்ன சந்தேகம்?”
“இங்கு யாரை அழித்தொழிப்பீர்கள்?”
“கைதிச் சொத்தைத் திருடுகிறவர்கள், கைதிகளை அடித்துத் துன்புறுத்துகிறவர்கள் இவர்களை எல்லாம் ஒழித்துக் கட்டினால்தான் சரிப்படும்.”
“யார் அவர்கள்?”
“எனக்கு எப்படித் தெரியும்? கைதிகள்தான் அதைச் சொல்ல முடியும்.”
“உங்கள் பட்டியலில் நான் உண்டா?”
“உண்மையிலேயே தெரியாது. எல்லாக் கைதிகளும் உங்களைச் சொன்னால் நீங்களும் உண்டு.”
அழித்தொழிப்புக் கொள்கை குறித்து ஏ.எம்.கே.க்கு மாறுபாடுகள் இருந்தபோதிலும், சிறையில் இந்த மிரட்டல் ஓரளவுக்குப் பலன் தரவே செய்தது. கைதிகளின் அச்சம் மறைந்து அவர்களிடம் போர்க்குணம் பரவிக் கொண்டிருந்தது.
சிறை நிருவாகத்துக்கு ஏஎம்கே பெரும் தலைவலி ஆகிவிட்டார். வழக்குகளுக்காக அவர் வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் கடலூர் சிறை அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விடலாயினர்.
சிறைக் கண்காணிப்பாளர் கைதிகளை மட்டு மல்லாமல், காவலர் களையும் முரட்டுத்தனமாக அடிப்பார். இழிவாக ஏசுவார். காவலர்களை மட்டுமல்ல, தன் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளையும் கூட அப்படித்தான் நடத்துவார்.
“அவர் சம்பளத்துக்கு அவர் வேலை செய்கிறார். உங்கள் சம்பளத்துக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள். உங்களை அடிக்கவும் திட்டவும் அவருக்கு ஏது அதிகாரம்?” என்று ஏஎம்கே செய்த பரப்புரை இளம் காவலர்களிடம் நன்கு எடுபட்டது.
ஆனால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?
“நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. அந்த ஆளங கையை ஓங்கிக் கொண்டு வந்தால், இல்லை ஏதாவது திட்டினால் எதிர்க்கவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அந்த ஆளுக்கு எதிில் நிற்கும் போது பயம் வந்து விடுகிறது!”
ஒரு முறை சிறைவாயில் அருகே முதன்மைக் காவலரைக் கண்காணிப்பாளர் ஏதோ கடிந்து பேசிக் கொண்டிருந்தார். மற்ற அதிகாரிகள் விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேச்சுக் குரல் மட்டும் கேட்கவில்லை.
திடீரென்று கண்காணிப்பாளர் தன் குறுந்தடியை ஓங்கிக் கொண்டு முதன்மைக் காவலரை அடிக்கப் போக, ஏஎம்கே ஓங்கிக் குரல் கொடுத்தார்.
“அடிக்காதே, நிறுத்து. கண்காணிப்பாளர் என்றால் யாரை வேண்டுமென்றாலும அடிக்கலாம் என்று நினைப்பா?”
கண்காணிப்பாளர் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டார். மற்ற அதிகாரிகளும் முதன்மைக் காவலரும் காவலர்களும் கைதிகளும் குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்க்க, கண்காணிப்பாளர் சட்டென்று வாயில் வழியாக வெளியே போய் விட்டார்.
முதன்மைக் காவலர் பிற்பாடு ஏ.எம். கே.யிடம் வந்து “நன்றி” என்ற போது, ஏ.எம். கே. சொன்னார்:
“அதெல்லாம் வேண்டாம். உங்களையும் மற்றவர்கள் அடிக்கக் கூடாது. நீங்களும் மற்றவர்களை அடிக்கக்கூடாது. கைதிகளை அடிக்காமல் இருந்தீர்கள் என்றால் அதுவே போதும்.”
“ஆனால் ஒன்று ஐயா. அடித்தாலும் உதைத்தாலும் துரை மிகவும் நல்லவர். என்ன ஓர் அடி அடித் திருந்தாலும் சந்தோசமாக வாங்கியிருப்பேன். ஏனென்றால் அப்புறமாகக் கூப்பிட்டு ஏதாவது நல்லது செய்திருப்பார்.”
“இப்பொழுது உன்னையில்லை, என்னைத்தான் அடிக்க வேண்டும்; செருப்பால் அடிக்க வேண்டும். இருந்திருந்தும் உனக்காகப் போய்க் கேட்டேன் பார்.”
ஏஎம்கே அப்போதைக்கு வெறுப்புற்றுப் பேசினாலும், தன் கிளர்ச்சிப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் சிறை நிலைமைகள் பெரிதும் மாற்றமடைந்தன. கைதிகளை எதற்கெடுத் தாலும் அடிக்கும் நடைமுறை பெரும்பாலும் மறைந்து போயிற்று.
ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் நெடுமாடப் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது. ஒரு கைதியை மூர்க்கமாக அடிக்கிறார்கள் என்று புரிந்தது. ஏஎம்கே. கம்பிக் கதவோரம் நின்ற போதிலும் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் சத்தம் ஓய்ந்தது.
பதற்றத்துடன் வந்த பாராக் காவலரிடம் ஏஎம்கே கேட்டார்:
“என்ன?”
“போய்விட்டான்.”
தொடரும்
தரவு: தாழி மடல் 15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக