(தோழர் தியாகு எழுதுகிறார் 15 : வறுமையும் அடிமைமுறையும்-தொடர்ச்சி)
ஏ. எம். கே. நினைவாக (1)
20.11.2022: ஏஎம்கே என்று நாமறிந்த தோழர் ஏ.எம். கோதண்ட ராமன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள். தோழர் ஏஎம்கே மறைந்த சில நாளில் அவர் குறித்து முகநூலில் எழுதிய இடுகைத் தொடரைத் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நான் ஏற்கெனவே அவரது சிறை வாழ்க்கை குறித்து கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியதை (தேவையான சில திருத்தங்களோடு) ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.]
கைதி செத்தால்…
கறுப்புத் திரைகள்
திருவோணம் அழித்தொழிப்பை ஒட்டிய கொலைவழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் தோழர் ஏ.எம். கோதண்டராமன் — சுருக்கமாக ஏ.எம்.கே. எங்களை வழிநடத்திய ‘பெரியவர்’ அவர்தான்.
எங்கள் மீதான வழக்கு நடந்து முடியும் வரை ஏ.எம்.கே பிடிபடவில்லை. 1973 ஏப்பிரல் கடைசியில் நானும் இலெனினும் குருவும் எங்களோடு புலவர் கலியபெருமாளும் மரணத் தண்டனைக் கைதிகளாக திருச்சி மத்தியச் சிறையின் பழைய கண்டத்தில் அடைபட்டிருந்த நேரத்தில், ஏஎம்கே கைது செய்யப்பட்ட செய்தி வந்தது. ஆனால், உண்மையில் அதற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள் முன்னதாகவே திருவில்லிபுத்தூரில் காவல்துறை அவரைப் பிடித்து விட்டது.
சாதாரண வழக்கில் சாமானியர் ஒருவரைப் பிடித்தாலே ஓரிரு நாட்களாவது கணக்கில் காட்டாமல் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்து, பிறகு முறைப்படி ‘கைது’ செய்வதுதான் காவல்துறை வழக்கம். இப்படியிருக்க, ஒரு ‘பயங்கரமான தீவிரவாதி’யைப் பிடித்தவுடனே ‘கைது’ செய்து நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்த காவல்துறைக்கு எப்படி மனம் வரும்?
சந்தேகத்துக்குரிய ஒருவரைப் பிடித்துச் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சட்டவிரோதமாய்த் துன்புறுத்துவது சாதாரண காவல்துறையினருக்கு நொறுக்குத் தீனி என்றால், ‘கியூ’ பிரிவு போன்ற சிறப்புக் காவல்துறையினருக்கு அடிப்படை உணவே அதுதான்.
ஏஎம்கே-யைப் பொறுத்த வரை மற்றொரு ‘பெரிய’ காரணமும் இருந்தது. 1970 அட்டோபரில் தோழர் அப்பு பிடிபட்டு… காவல்துறையால் மருமமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பின், தமிழகத்தில் ஏஎம்கேதான் இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்திக் கொண்டிருந்தார். அப்புவைப் போலவே ஏ.எம்.கே.யையும் ‘முடிப்பதா’ இல்லையா என்று காவல்துறையார் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
ஏஎம்கே பிடிபட்டவுடனே அவரிடம் ஒரு ‘கியூ’ பிரிவு அதிகாரி சொன்னார்:
“எங்களுக்குச் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் தெளிவாகப் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
ஏஎம்கே கோபமாகப் பதில் சொன்னார்:
“இதோ பார், உனக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அதுவெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் ஒன்று கூடச் சொல்ல மாட்டேன். உன்னால் என்ன முடியுமோ, பண்ணிக்கொள்.”
அதன் பிறகு அவரிடம் யாரும் எதுவும் பேசவில்லை . காவல்துறை மூடுந்து ஒன்றில் அவரை ஏற்றி, எங்கோ கொண்டு போனார்கள். மூடுந்தின் சல்லடைச் சாளரங்கள் கறுப்புத் துணியால் மூடப்பட்டிருந்தன. உள்ளிருந்து வெளியே அல்லது வெளியிலிருந்து உள்ளே எதையும் பார்க்க முடியாது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். செவிப்புலன் கொண்டு வழியை அனுமானம் செய்ய ஏஎம்கே முயன்று கொண்டிருந்தார். இடையிடையே சில நகரங்களைக் கடந்து செல்வது புரிந்தாலும் என்ன ஊர் என்று ஊகிக்க முடியவில்லை .
என்ன இது பேரிரைச்சல்? ஒலிபெருக்கிச் சத்தம் வேறு? வண்டி ஒரு பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சமாளித்து நகர்ந்து கொண்டிருப்பது புரிந்தது.
ஆ! தெரிந்து விட்டது. சித்திரை மாதம்! திருவிழாக் காலம்! மதுரையேதான்! வைகையாற்றுப் பாலத்தில்தான் இவ்வளவு நெரிசலாய் இருக்க வேண்டும். கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளாய் இருக்கலாம்!
தன்னை எங்கே எதற்காகக் கொண்டுபோய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏஎம்கேக்குத் தெரியாது.
“அப்புவைப் போலவே நம்மையும்..?” இருக்கட்டுமே, அதனால் என்ன?’
எதற்கும் அஞ்சக் கூடியவரல்ல அவர். இப்போது முகத்தில் சற்றே அலட்சியம் கலந்தாற்போல் ஒரு புன்முறுவல்! ‘’கறுப்புத் திரைகளையும் கட்டுக்காவலையும் மீறி எனக்குத் தெரிந்து விட்டது பார்த்தாயா..?”
சுற்றியிருந்த காவலர்களையும் அந்தப் புன்னகை தொற்றிக் கொண்டது. தோல்வியை ஒப்புக்கொள்வதன் அறிகுறியோ? தங்கள் மேலதிகாரிகளின் முயற்சி முழுமையாகப் பலிக்காமற்போனதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் அறிகுறியோ?
இந்தப் புன்னகை தவிர, வண்டிக்குள் கப்பியிருந்த மௌனம் கலையவே இல்லை, அடுத்த சில நிமிடங்களில் அந்தக் காவல்துறைமூடுந்து மேலூர் காவல் நிலையம் போய்ச் சேர்ந்தது. அங்குதான் ஏஎம்கேயை ஒரு வாரத்துக்கு மேல் திருட்டுக் காவலில் வைத்திருந்தார்கள்.
திருவில்லிப்புத்தூரில் பிடிபட்ட நேரத்திலேயே ஏஎம்கே. முழக்கங்கள் எழுப்பியிருந்தார். அவர் பிடிபட்டது அப்போதே சில நண்பர்களுக்குத் தெரிந்து, அவர்கள் சென்னைக்குத் தகவல் அனுப்பி விட்டார்கள். சென்னையில் குடிமை உரிமை ஆர்வலர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். ஒரு காலத்தில் ஏஎம்கே தலைமையில் இயங்கி வந்த தொழிற்சங்கங்களின் ஊழியர்களும் தொழிலாளர்களும் “ஏஎம்கேயை விடுதலை செய்” என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்பு பிடிபட்ட செய்தியை மறைத்தது போல் ஏ.எம்.கே, பிடிபட்ட செய்தியைக்காவல்துறையால் மறைக்க முடியவில்லை.
[தோழர் குசேலர் தரும் கூடுதல் தகவல்: தோழர் ஏஎம்கே பிடிபட்ட செய்தியை ‘அலை ஓசை ‘ஏடு பெரிய தலைப்புச் செய்தியாக்கி விட்டது. இதற்காக அந்த ஏட்டின் ஆசிரியர் வேலூர் நாராயணன் மீது அன்றைய ஆட்சியாளர்கள் சினமுற்றார்களாம்!]
ஏஎம்கே மீது எங்கள் வழக்கு உட்படப் பல்வேறு வழக்குகள் இருந்தன. ஏப்பிரல் கடைசியில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, காவலில் வைத்து (remand) கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
கடலூர் சிறைக்குள் நுழைந்தவுடனே பழைய கைதிகளிடமிருந்தும் காவலர்களிடமிருந்தும் ஏஎம்கே கேட்டறிந்த தகவல் — 1971-72இல் இதே கடலூர் சிறையில் மேற்கு வங்கத் தோழர்கள் கொடுந்தாக்குதலுக்கு ஆளானது பற்றித்தான்.
அப்போது கடலூர் சிறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் ஏஎம்கேயை முன்பே நன்கறிந்தவர். மோகன் குமாரமங்கலம், கே.வி.சங்கரன் ஆகியோரிடம் இளவராக ஏ.எம்.கே. சிறிது காலம் சட்டப் பணி ஆற்றிய போது அங்கு அடிக்கடி போய் வந்து அவரோடு இந்தக் கண்காணிப்பாளருக்கு அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது.
ஏ.எம்.கே.-யைச் சிறைக் கண்காணிப்பாளர் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். படித்தவர், அரசியலுக்காகச் சிறைப்பட்டவர் என்பதைக் காட்டிலும் நண்பர் என்பதே முதன்மைக் காரணமாயிற்று.
ஏ.எம்.கே.க்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. சிறையில் புகையிலைக்கு அனுமதி உண்டே தவிர, வெற்றிலை சீவலுக்கு அனுமதி இல்லை. வெற்றிலைக்கு நெருக்கமான சுவை வேறு எந்த இலைக்காவது உண்டா என்று ஏஎம்கே ஓர் ஆராய்ச்சியே செய்து கொண்டிருந்தார். இதையறிந்த கண்காணிப்பாளர் வெற்றிலை சீவல் வாங்கித் தர முன்வந்த போது ஏஎம்கே. மறுத்து விட்டார்.
நீதிமன்றத்துக்குப் போய்வரும் போதும் நேர்காணலிலும் வெற்றிலை சீவல் வாங்கிக் கொள்ள அனுமதித்த போது அதை ஏற்றுக் கொண்டார்.
கண்காணிப்பாளர் அலுவலகப் பணி இல்லாத நேரமெல்லாம் ஏஎம்கேயின் கொட்டடிக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார். ஏஎம்கேக்கே இது பெரும் சங்கடமாயிற்று.
காவலர்களிலும் கைதிகளிலும் சிலர் ஏஎம்கே குறித்து இப்படிக் கேட்கலாயினர்: “இவர் பெரிய தொழிற்சங்கத் தலைவர், நக்சலைட்டு, தீவிரப் பொதுவுடைமையாளர் என்றெல்லாம் சொன்னார்கள்! இவரோ கண்காணிப்பாளருக்கு இவ்வளவு நெருக்கமாய் இருக்கிறாரே?”
வெகுவிரைவில் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது – செயல் வடிவில்! அப்போது அந்தக் காவலர்களும் கைதிகளும் மட்டுமல்ல, நட்பு பாராட்டிய அந்தக் கண்காணிப்பாளரும் கூடத் தெரிந்து கொண்டார் – ஏஎம்கே யார் என்று.
(தொடரும்)
தரவு: தாழி மடல் (14)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக