ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா
நம்மை விட்டுப் பிரிந்தார்!
உண்ணச் சிறிது போதும்!
உறங்கப் படுக்கைத் தேடேன்!
எண்ணப் பொழுது வேண்டும்!
எழுத உரிமை வேண்டும்!
என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக் காலன் முடித்து விட்டான்.
இளங்குமரனார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் படிக்கராமர் – வாழவந்தம்மையார் இணையருக்கு எட்டாம் திருமகனாகப் பிறந்தார். அதனால் கிருட்டிணன் எனப் பெயர் சூட்டப்பட்டார். பின்னர் இப்பெயரை அகற்றி இளங்குமரன் என்னும் தமிழ்ப்பெயரைச் சூட்டிக் கொண்டார். அவர் பிறந்தநாள் வெவ்வேறு வகையாக அவர் குறித்த கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஐயா, தம்முடைய ‘ஒரு புல்’ என்னும் தன் வரலாற்று நூலில் 30.01.1930 எனக் குறித்துள்ளார். எனினும் இந்நாள் பள்ளியில் சேர்க்கும்பொழுது ஆசிரியர் தந்த நாள் என்றும் குறித்துள்ளார்.
பள்ளிப்பருவத்திலேயே, தம் 15-ஆம் அகவையிலேயே சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றுச் சிறப்புற்றிருந்தார். தம் 18-ஆம் அகவையிலேயே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இவரது நூல்கள் ஏறத்தாழ 400. 2004இல் வெளிவந்த இவரின் தன்வரலாற்று நூலில் 232 நூற்பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சொல் வளமே 80 தொகுதிகள் வந்தன. மேலும் பல தொகுப்பு நூல்கள் வந்துள்ளன. “செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்” நூல் மட்டுமே நாலாயிரத்துத் தொண்ணூறு பக்கங்களைக் கொண்டதாகும். ‘காக்கைபாடினியம்’ என்னும் இலக்கண நூலை மீட்டுருவாக்கம் செய்து தமிழுலகிற்கு அளித்தது காலத்தால் அழியாத பணியாகும். திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு(10) என்னும் இவரது நூலை 1963 ஆம் ஆண்டு நேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது நூலை 2003 ஆம் ஆண்டு அபுதுல் கலாம் வெளியிட்டார்.
2012 ஆம் ஆண்டு வாணாள் அருவினையாளருக்கான பச்சமுத்து பைந்தமிழ் விருது இவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் குறிக்கத்தக்கது. அதுபோல் பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர் (D.Lit.) பட்டம் வழங்கியுள்ளதும் சிறப்பான செய்தியாகும்..
இவர் வகித்த தமிழ் அமைப்புகளின் பொறுப்புகளில் குறிப்பிடத்தகுந்தது, தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார் தலைவராகச் செயல்பட்ட தமிழ்க்காப்புக்கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியாகும். தமிழ்க்காப்புக்கழகம்தான் இந்திஎதிர்ப்புப் பாசறையாக விளங்கியது என்பதும் இதன் முன்னெடுப்புப்பணிகளாலும் வழிகாட்டுதலாலும் இந்தி எதிர்ப்புப் போர் தீவிரமடைந்து இந்தி விரட்டப்படவும் பேராயக்(காங்கிரசு)கட்சி ஆட்சி அகன்று இன்றுவரை மீள இயலவில்லை என்பதையும் வரலாறு அறிந்தோரும் கடந்த நூற்றாண்டுத் தமிழார்வலர்களும் அறிவர்.
ஒரு முறை புலவர்மணியார் (அவ்வாறுதான் இளங்குமரனாரைப் பேரா.சி.இலக்குவனார் குறிப்பிடுவார்.) விருதுநகரில் பணியாற்ற வந்து பேரா.சி.இலக்குவனாரைச் சந்தித்தார். அவர் வந்த உடனே பேராசிரியர் நகராட்சியில் இருந்து ஆணை வந்ததா என்று கேட்டதும் வியப்படைந்தார். இவர் விண்ணப்பம் குறித்து நகராட்சியில் கேட்ட பொழுது “தக்கவர், பணி யாணை வழங்குக” எனத் தெரிவித்ததும், இவர் வரும் முன்னரே இவர் குடிபுக வீடு பார்த்து வைத்ததும் அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் உற்றார்; “ஐயா, எங்கள் ஊர் அருகேயே எனக்கு வேலை கிடைத்துள்ளது. தங்கள் தொடர்பு வேண்டும் என்றுதான் இங்கே வந்தேன். நீங்கள் இங்கேதானே இருப்பீர்கள்” என்றார். பேராசிரியர் இலக்குவனார் புன்முறுவல் பூத்தார். உடனிருந்த நண்பர், பேராசிரியர் கல்லூரியில் இருந்து விலகி வேறிடம் செல்கிறார் எனக் கூறியதும் தன் எண்ணம் சுக்கல் நூறாக உடைந்தது எனக் குறிப்பிடுகிறார் இளங்குமரனார். இலக்குவனார் இல்லாத ஊரில் தனக்கு வேலை தேவையில்லை என அவ்வேலையில் சேராமல் திரும்பி விட்டார் (பக்கம் 96, ஒரு புல்)
ஆனால், பின்னர் இளங்குமரன் ஐயா, மதுரையில் திருப்பரங்குன்றம் (இருப்பு) திருநகர் மு.மு.உயர்நிலைப்பள்ளிக்கு வேலைக்கு வந்ததும் பேராசிரியர் இலக்குவனார் திருநகரில்தான் உள்ளார் என அறிந்ததும் பெரு மகிழ்வுற்றார். பேராசிரியருடன் இணைந்து தமிழ்ப்பணி யாற்றினார் புலவர்மணியார்.
திருநகரில் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் அமைத்தார்(1983). திருச்சிராப்பள்ளி அருகே அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவிய பொழுது இந்நூலகத்தை அங்கு மாற்றினார். அப்பொழுது ஏறத்தாழ 17000 நூல்கள் அங்கே நிறைந்திருந்தன. திருநகருக்கு நிலையாக மீளக் குடி புகுந்ததும் நூலகமும் இடம் மாறிற்று.
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் தமிழ் உரிமைப்பெருநடைப்பயணம் மேற்கொண்டமையாலேயே இந்தியப் பாதுகாப்புச்சட்டத்தின்படித் தளையிடப்பட்டவர். எனவே, அவர் நினைவாகத் தவச்சாலையில் தமிழ் உரிமைப்பெருநடைப்பயண மேடையையும் அமைத்தார்.
தமிழ் உறவர்களையே குடும்ப உறவர்களாகக் கருதுபவர் பேரா.சி.இலக்குவனார். திருநகரிலேயே குடிபுகுந்து நாளும் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற தமிழாசிரியர் இளங்குமரனார் எங்கள் உறவினரானதில் வியப்பில்லை. இரண்டாவது அண்ணன் பேரா.மறைமலை இலக்குவனார், அடுத்தவர் புலவர் திருவேங்கடம், அடுத்த நான்(இலக்குவனார் திருவள்ளுவன்) தம்பி இ.நல்லபெருமாள், தம்பி அம்பலவாணன் ஆகியோர் அவரின் மாணாக்கர்களே என்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி.
இளங்குமரன் ஐயா, பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்தாலும் திருநகர், ஆர்விப்பட்டி, திருப்பரங்குன்றம் மாணாக்கர்களும் இளைஞர்களும் இணைந்து நடத்திய தமிழ்த்தொண்டர் குழுவின் நெறியாளராக இருப்பதை மகிழ்வாகக் கருதுவார். இதன் சார்பில் மாதந்தோறும் பட்டிமன்றங்களும் நடத்துவோம். ஐயாதான் நடுவர். ஓர் அணிக்கு நான் தலைவராகவும் மற்றோர் அணிக்கு நண்பர் பொன்.மனோகரன் தலைவராகவும் இருப் போம். இந்த மூன்றிலும் எப்போதும் மாற்றம் இல்லை. வெற்று நகைச்சுவைத் துணுக்குகள் நிறைந்திராமல் கருத்தாழம் மிக்க செய்திகளைச் சுவைபடக் கூறுவோம். ஐயா, மதிப்பெண் போட்டு யாருடைய அணி சிறப்பாக வாதிட்டது என்பார். முடிவிற்கு மக்களின் வாக்கெடுப்பிற்கும் விடுவார். மதுவிலக்கு நீக்கியது, இலங்கை-ஈழச் சிக்கல், தமிழ்ப்பயிற்றுமொழி நிறைவேற்றப்படாமை போன்ற சூடான செய்திகளே பட்டிமன்றக் கருவாக இருக்கும். திருமண மண்டபங்கள், திரையரங்கு முதலியவற்றில் நடைபெறும் நிகழ்விற்கு மக்கள் அரங்கு நிறைய வந்திருப்பர். ஒருமுறை நூலகம் தொடர்பான பட்டி மன்றத்திற்கு நடுவராக அழைத்தோம். “வறண்ட தலைப்பாக உள்ளது. மக்கள் வர மாட்டார்கள். வேறு சுவையான தலைப்பாக வையுங்கள்” என்றார் ஐயா. நான், “ஐயா, உங்கள் உரையைக் கேட்க என்று பெருங்கூட்டமே உள்ளது. நீங்கள் என்ன பேசினாலும் ஆர்வமுடன் கேட்பார்கள். எங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதுதான் நம் கடமை. தலைப்பை மாற்ற இயலாது” என்றேன். “இல்லை, இல்லை, ஆளில்லாக் கூட்டத்தில் பட்டிமன்றம் நடத்தி என்ன பயன்?” என்றார். “நீங்கள் கூட்டத்திற்கு வாருங்கள். அவ்வாறு வராவிட்டால் தலைமை தாங்க வேண்டா” என்றேன். “சரி” என்றார். உடன் வந்த நண்பர்கள் அவர் இல்லத்தை விட்டு வெளியே வந்ததும் “என்ன ஐயாவை எதிர்த்துப் பேசுகிறீர்கள். அவரிடம் வேறு தலைப்பைக் கேட்டு நடத்தலாமே” என்றனர். “இல்லை. இப்பொழுதுதான் அவருக்கு நம் மீது நம்பிக்கை வரும். நல்ல கருத்துகளைக் கேட்கும் அவையை ஏற்படுத்தி வைத்துள்ளோம்.அவரது உரைக்கு மக்கள்ஆதரவு இருக்கிறது எனப் புரிந்து கொள்வார். என் மீது சினம் கொள்ளமாட்டார்” என்றேன். உண்மையில் பிற பட்டிமன்றங்களை விட இதற்கு மிகுதியாகக் கூட்டம் வந்து கட்டடத்திற்கு வெளியேயும் நின்று கொண்டு உரைகளைக் கேட்டனர். தம் பேச்சைக் கேட்க வில்லை எனச் சினம் அடையாமல் துடிப்பான இளைஞர்கள் உணர்வையும் கருத்தையும் மதிப்போம் என்னும் பெருமிதப்பண்பு கொண்டு அவர் நடந்து கொண்டார். விழாவிலும் இது குறித்துக் குறிப்பிட்டார். மாணாக்கர்களையும் இளைஞர்களையும் தோழமை உணர்வுடன் நடத்தினார் என்பதற்கு இது சான்றாகும்.
புலவர்மணி இளங்குமரன் ஐயா 4000 இற்கு மேற்பட்ட மணவிழா,மணிவிழா, பிறந்தநாள் பெருமங்கலம், காதணி விழா, புதுமனை புகுவிழா முதலியவற்றைத் தமிழ் முறையில் நடத்தி உள்ளார். எங்கள் மகள் பொறி தி.ஈழமலர்-பொறி வா.பாலாசி, மகன் பொறி தி.ஈழக்கதிர்-ஞா.செயலக்குமி ஆகியோர் திருமணங்களையும் சிறப்பாக நடத்தி எங்களை மகிழ்வித்தார்.
1977 இல் தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் உயரிய இலக்கிய விருது ஒன்றை அறிமுகப்படுத்தி வழங்க இருந்தனர். இளங்குமரன் ஐயா பெயரை நான் குறிப்பிட்டதும் கலைபண்பாட்டுத் துறைத்தலைவரும் அரசு செயலரும் ஏற்றுக் கொண்டனர். எனவே, நான் இளங்குமரன் ஐயாவிடம் விவரத்தைத் தெரிவித்து அவ்விருதை ஏற்க ஒப்புக்கொள்ளுமாறும் அவர் குறித்த குறிப்புகளைத் தருமாறும் கேட்டேன். “அன்பிற்கு நன்றி. புலமையை மதிக்கும் அரசு இல்லை. ஆள்வோரின் அன்பர்களுக்கே விருதுகள் வழங்கப்படும். எனவே, என் பெயரைக் குறிப்பிடாதீர்கள்” என்றார். நான், “நான் தெரிவிக்கும் கருத்தைத் துறைத்தலைவரும் செயலரும் மறுக்காமல் ஏற்பர். இப்பொழுதும் அவர்களின் ஏற்பு பெற்றதும்தான் உங்களிடம் பேசுகிறேன். ஆளுநரைத் தலைவராகக் கொண்ட தென்னகப்பண்பாட்டு மைய இயக்குநரும் எங்கள் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொள்வார். அவரிடமும் நான் பேசி விடுவேன். அமைச்சர்களின் குறுக்கீடோ, அரசுகளின் குறுக்கீடோ இருக்காது. எனவே, இதனைத் தமிழுக்குக் கிடைக்கும் சிறப்பாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றேன். “எனக்கு நம்பிக்கையில்லை. உங்கள் அன்பைத் தட்டமுடியாமல் இசைகிறேன்” என்றார். அவருக்கு இலக்கியத்திற்கான உயரிய விருது கொடுக்கவும் முடிவாகி விழா நாளும் உறுதியானது. ஐதராபாத்தில் விழா நடப்பதாக இருந்தது. ஆனால், விருது வழங்க இருந்த அப்போதைய குடியரசுத்தலைவர் சங்கர்தயாள் (சருமா) எதிர்பாராமல் மரணம் உற்றதால் விழா ஒத்திவைக்கப்பட்டுப் பின்னர் வேறு சூழல்களால் விருது வழங்கும் திட்டமே கைவிடப்பட்டது. இளங்குமரன் ஐயா கருதியவாறு, வேறு காரணத்தால் அவருக்கு விருது வழங்கப்படாமையும் நான் எண்ணியவாறு விருது வழங்கப்படுவது நின்று போனமையும் எனக்கு இன்றளவும் பெரிதும் வருத்தமாக உள்ளது.
நான் சில மாதங்களுக்கு முன்னர், என்னுடைய ‘வெருளி அறிவியல்’ நூல் 5 தொகுதிகள், ‘அறிவியல் சொற்கள் ஆயிரம்’ முதலான அறிவியல் நூல்களையும் வேறு நூல்களையும் அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதுபோழ்து நடமாடும் அகராதிக் களஞ்சியமான புலவர் மணி இளங்குமரன் ஐயா, அவராகப் பேசி வாழ்த்தியது கிடைத்தற்கரிய பேறு. “நான் அறிவியல் தமிழ் வளத்தை வெளிப்படுத்தி நூல்கள் எழுதி வருகிறேன். ஆனால், தங்கள் நூல் தமிழில் உள்ள புத்தறிவியல் வளத்தை உணர்த்துவதாக உள்ளது. அகராதி அறிஞர்கள் தொடாத பணிகளை உங்களின் அறிவியல் சொல்லாக்கம் சிறப்பாக முடித்துள்ளது. இப்பணி சிறக்க நூறாண்டு வாழ்வாங்கு வாழ்க!” எனப் பலவாறாக வாழ்த்தினார். அவரது உயரிய நிலைக்கு அவரே பேசி வாழ்த்தியது அவரது எளிய பண்பையும் மாணாக்கனை மதிக்கும் உணர்வையும் விளக்கும் சான்றாகும்.
இளங்குமரன் ஐயா தம் உரைகளில் நிறைவாகத் தெரிவிக்கும் விழைவுகளை நாம் நிறைவேற்றுவது அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும். எனவே, அப்பாடலுடன் இதனை முடிக்கின்றேன்.
வள்ளுவம் பரவ வேண்டும்
வாழ்வியல் துலங்க வேண்டும்
உள்ளுவது உயர்வு வேண்டும்
உரையெலாம் செயலில் வேண்டும்
எள்ளுவ தவிர்க்க வேண்டும்
ஏதிலார் பொறுக்க வேண்டும்
கொள்ளுவது அறமாய் வேண்டும்
கொடை வளம் வேண்டும் வேண்டும்
வாழிய நலனே! வாழிய நிலனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக