திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9
திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

9

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 306)
தீப்பிழம்பில் முக்கி எடுததாற்போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர்.
நெருப்பு குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.
நெருப்பு அல்லது ‘தீ’ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயல்,  ‘தீ’ என்பது, பொருட்களில் விரைவான உயிர்வளியேற்றம்(oxidation) நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.
திருவள்ளுவர், ‘தீ’ என்னும் சொல்லை 13 இடங்களில் கையாண்டுள்ளார். எனினும் இவற்றுள் ஒரு பாதி ‘தீய’ என்னும் பொருளில்தான் பயன்படுத்தியுள்ளார். தீய (7), தீயவும் (1), தீயவை (5) எனவும் பயன்படுத்தி உள்ளார்.தீயில் (1), தீயினால் (1), தீயினும் (1) எனவும் தீ என்பதைக் குறிக்கின்றார். ஒரு குறளில் நெருப்பு என்பதைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் அன்றாடப்பயன்பாட்டில் உள்ள தீயைக் கொண்டு திருவள்ளுவர் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள குறளில் மட்டும்தான் ‘இணர் எரி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘இணர்’ என்பது நெருக்கமாக இருப்பதைக் குறிக்கிறது. எனவே, பூக்களை நெருக்கமாகக் கட்டி அமைக்கும் பூங்கொத்து(bouquet) ‘இணர்’ எனப்படுகிறது. திருவள்ளுவர் அடர்த்தியாக நெருங்கி இருக்கும் தீச்சுடர்களை ‘இணர்எரி’ என்கிறார்.
அத்தகைய கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் தொகுப்பில் தோய்த்து எடுப்பதுபோன்ற துன்பத்தை ஒருவன் செய்தாலும் கூடுமானவரை அவன்மீது சினம் கொள்ளாதிருத்தல் நன்று என்பதாக ஏறத்தாழ அனைவரும் பொருள் கொள்கின்றனர்.  புணர் என்பதற்கு இணங்குதல், கலத்தல், கிட்டுதல், சந்தித்தல், சேர்தல், அணைதல் முதலான பல பொருள்கள் உள்ளன. சிவயோகி சிவக்குமார் ‘புணரின்’ என்பதற்கு ‘இணக்கம் கொள்ள வந்தால்’  எனப் பொருள் தந்து விளக்குகிறார். அஃதாவது இணர் எரிதோய்வன்ன கொடுந் துன்பம் இழைத்தவனும் சேர வந்தால் சினம் கொள்ளாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.  இது சரியாகவே உள்ளது.
‘தீ’ என்பது உயிர்வளியேற்றத்தால் நிகழும் ஓர் அறிவியல் வினையாகும். தீச்சுடர் நெருக்கமாக அமைந்து அனலைக் கக்குவதைக்  கொதிகலன், உலைக்களன் போன்றவற்றில் காணலாம்.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும்”(திருக்குறள் 129) எனத் தீயினால் உண்டாகும் புண்ணை முதலில் கூறினார் திருவள்ளுவர். இயல்பான ஒன்றாக அஃது இருக்கும் என்பதால், எரிதல் தொடர்பான அறிவியல் வினையை இங்கே குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின்னரும் தீயின் வெம்மையைத் திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்ததுஊடி நிற்போம் எனல் (திருக்குறள் 1260)
“கொழுப்பைத் தீயில் இட்டால்போன்ற உருகும் நெஞ்சினை என்னைப்போன்றவர்க்குத் தலைவன் அருகில் வந்தால்  ஊடல் எண்ணமும் வருமோ” எனத் தலைவி கூறுவதாக உரைக்கிறார். திருவள்ளுவர் இங்கே நிணம்(cholesterol) என்னும் அறிவியல் கலைச்சொல்லைக் கையாளுகிறார்.
இந்தக் குறளில் தீயில் இடப்படும் நிணம் கரையும் என்பதை உவமையாகக் கூறிய திருவள்ளுவர், அதனையும் மீறிய அறிவியல் உண்மையைக் கூறி சினத்தைத் தவிர்க்க அறிவுரை கூறுகிறார்.
சினத்தைத் தவிர்க்கக் கூறும் இத்திருக்குறளை நாம் நினைத்தால் ஆணவக் கொலைகளும் பிற கொலைகளும் நேராது அல்லவா?

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 30.07.2019