பட்டியல் சாதியர் நலன்காக்கக்
கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி
மததிய பாசக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற்பட்டோர், சிறுபான்மையர் நலனுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்துவது. அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வகையில் தரப்பட்ட இவ்வுதவித்தொகையை நரேந்திர(மோடி) அரசு கடந்த ஆண்டு நிறுத்தி விட்டது. எனினும் தமிழ்நாடுஅரசு நிறுத்தவில்லை. இவ்வாண்டு கண்டிப்பாகக் கல்விக்கட்டணத்தைத் திரும்பத் தரக்கூடாது என நரேந்திர(மோடி) அரசு கூறிவிட்டது. அஃதாவது கல்வி உதவித்தொகை தரபபடமாட்டாது என்று சொல்லிவிட்டது. இதுவரை தமிழ்நாடு அரசிற்கு இதற்காகத் திரும்பத் தர வேண்டிய ஆயிரத்து 803 கோடியே 50 இலட்சம் தொகையையும் தரவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணத்துடன் படிக்கும் வசதி உள்ள இவர்களுக்கு எதற்கு உதவித்தொகை என்பதுதான் நரேந்திர(மோடி) அரசின் கேள்வி. பணக்கொழுப்பில் யாரும் தனியார் நிறுவனங்களில் கல்வி கற்க சேருவதில்லை. சிலர் புகழ்மிகு நிறுவனங்களில் சேருவதைப் பெருமையாகக் கருதி சேரலாம். ஆனால், பலரும் அரசு கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பில்லாமலதான் தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர். அப்படியானால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்காத அரசுகளே குற்றவாளிகள். மேலும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு கட்டண வரையறை செய்தும் பிற வகைகளில் உதவியும் வருவதால் இங்கே பயில்வோரை வேறுவகையாகக் கருதக் கூடாது. கட்டணமின்றிக் கல்வியை அரசுகள் தராக்காரணத்தால் கடன்வாங்கியோ சொத்துகைள விற்றோ கூடுதல் கட்டணங்கள் செலுததிப் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். அவ்வாறிருக்கும் பொழுது கூடுதல் கட்டணம் செலுத்திப் படிக்க வாய்ப்பு இருக்கும் பொழுது உதவித்தொகை தேவையில்லை என்பது சரியல்ல.
“எல்லாருடனும் சேர்வோம்! எல்லாருக்குமான மேம்பாடு!” என்பதே அரசின் கொள்கை எனக் கூறும் நரேந்திர(மோடி) குறிப்பிட்ட சமயத்தினர், குறிப்பிட்ட மொழியினர், குறிப்பிட்ட சாதியினர் நலனுக்காக மட்டுமே செயல்பாட்டால் போதும என எண்ணுகிறது போலும்!
“கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை” (வெறிபாடிய காமக்கண்ணியார், குறுந்தொகை 8) போல் பாசக அரசின் ஆட்டத்திற்கேற்பத்தான் தமிழ்நாடு அரசு ஆடுகிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகள் பாசகவால் கட்டப்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். பதவி நலன்களுக்காகத் தன்மானத்தை விட்டுக் கட்டுண்டு கிடந்தாலும் முதல்வர் பழனிச்சாமி துணிந்து இது குறிததுத் தலைமையர் நரேந்திர(மோடி)க்கு மடல் எழுதியுள்ளார். தணிந்தசாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எதிரான இத்திட்டத்தைக் கைவிட்டு உதவித் தொகையைத் தொடர்ந்து தருமாறும் 60:40 விழுக்காட்டில் மத்திய அரசு உதவி வழங்குமாறும் வேண்டியுள்ளார். கைகள் கட்டப்பட்டாலும் வாயிதழ்கள் ஒட்டப்பட்டாலும் துணிந்து எழுதிய முதல்வர் பழனிச்சாமிக்குப் பாராட்டுகள்! பிற மாநில முதல்வர்களுடன் இணைந்து பாசக அரசைப் பணியச் செய்து தணிந்த சாதியினர் நலன் காக்க அவரை வேண்டுகிறோம்.
தலைமையர் நரேந்திர( மோடிக்கு), முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய மடலில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிருவாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்பிரல் மாதத்தில் இருந்து திரும்பப் பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக அளவில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘தகுதி’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை ப் பெற முடியாது. தன் நிதிக் கல்லூரிகளில் நிருவாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்விச் சேர்க்கை விகிதம், 45 விழுக்காட்டைத் தாண்ட இந்தத் திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது.
எனவே, புதிய விதிகளை வகுத்து, நிருவாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது பட்டியல் சாதியினர், பட்டியல் இனத்தவர் மத்தியில் மன நிறைவின்மையை உருவாக்கும்.
சமூக நீதி, பட்டியல் சாதியினர், பட்டியல் இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போகச் செய்து விடும். மத்திய நிதிநிலை ஒதுக்கீட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாகத் தேக்க நிலையில் உள்ளது. அந்த வகையில் மார்ச்சு மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50 இலட்சம் ஆகும்.
ஏற்கெனவே இருக்கும் பயன்களைக் குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மாற்றாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசுத் திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40 விகிதம் என்றளவில் இருக்க வேண்டும்.
எனவே இதில் நீங்கள் தலையிட்டுப், பட்டியல் சாதியினர், பட்டியல் இனத்தவர் மாணவர்களைப் பாதிக்கும் விதிகளை திரும்பப் பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிருவாக ஒதுக்கீட்டில் பயிலும் பட்டியல் சாதியினர், பட்டியல் இனத்தவர் மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசுக்குத் தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 511)
நிதி இழப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் மக்கள் மேம்பாடு என்னும் நன்மை கருதி தவறாகத் திருத்தப்பட்ட விதிகளை நீக்கி வழங்கி வந்த உதவித்தொகையைத் தொடர்ந்து வழஙகுக!
உதவித்தொகைக்கான தேவையின்றி அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி கிடைக்கச் செய்க!
– இலக்குவனார் திருவள்ளுவ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக