பிற கருவூலம்
அனலும் புனலும் :
வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்
காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.
சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.
சட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம்.
அரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.
கடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா?
பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம்என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். புதுச்சேரியில் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினார். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]
இனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.
நாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. ஸமத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)]. குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
கருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
ஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தானே அவர் கவலைப்படுவார்! எனவே, இதன் மூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.
தமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்திலும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.
காலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறைவன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.
சுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.
குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில் கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.
சுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.
திருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சங்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.
சங்கர மடத்தினரே! இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சிறப்பை உணருங்கள்! தமிழுக்குத் தொண்டாற்றுங்கள்! இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.
குவியாடி
இ.எ.தமிழ் / ietamil நாள் சனவரி 27, 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக