அகரமுதல 223
தை 15 – 21, 2049, சனவரி 28-பிப்.3, 2018
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே
சென்னையில் பிப்பிரவரி 3 அன்று மாநாடு
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், வரும் தை 21 / பிப்பிரவரி 3 / சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துத், தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், ஊர் நிருவாக அலுவலர்கள் (VAO) முதலான மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018 அன்று நடத்துகிறது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களும், நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத்து, மியான்மர், இலங்கை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிக்கையில் (14.11.2017) அழைத்துள்ளது.
இதுவரை இல்லாத புதிய மாற்றமாக இவ்வறிவிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தகுதி பெற்ற 90 இலட்சம் பேர் வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்திய நாடு முழுவதும் உள்ளவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வு எழுதினால் தமிழ்நாட்டின் குடிமக்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காத அவலம் ஏற்படும். மண்ணின் மக்களாகிய இளம் ஆண்கள், பெண்களின் எதிர்காலம் என்னவாகும்?
இதற்குமுன், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்களுக்கான தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களைச் சேர்த்ததால் பல நூறு பணி இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடைத்தன. அதில் தேர்வுத்தாள் திருத்துவதில் ஊழல் செய்தவர்கள் இப்போது பிடிபட்டு வருகிறார்கள். அம்முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான பாரத மிகு மின் நிறுவனம்(BHEL), நெய்வேலி அனல் மின் நிலையம், இருப்பூர்தித் துறை, படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், வருமான வரி அலுவலகங்கள் , உற்பத்தி வரி அலுவலகங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் அண்மைக்காலமாக 100க்கு 80 பேர் என்ற அளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்கினால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு விடும்!
தமிழ்நாட்டு தொழில், வணிகம், அதிகார இனம்(வருக்கம்) அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி, கல்வி, பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக 1956இல் மொழியின மாநிலமாக, உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு! அரசமைப்புச் சட்டப்படி உள்ள தமிழர் உரிமைகளை மறுக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வேலை வாய்ப்புகளில் கொண்டு வருவது மிகமிகத் தவறு!
மகாராட்டிரம், கருநாடகம், குசராத்து, மேற்கு வங்கம், சத்தீசுகட்டு போன்ற பல மாநிலங்களில், அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வேலை ஒதுக்கீடுகளுக்கான சட்டங்களும், அரசு ஆணைகளும் இருக்கின்றன.
எனவே, தமிழ்நாட்டிலும் அதுபோல் அரசுத்துறை வேலைகளில் 100 விழுக்காடும், நடுவண் அரசு வேலைகளில் – தனியார் வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான மாதிரிச் சட்ட வரைவு 03.02.2018 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” மாநாட்டில் நிறைவேற்றப்படும்!
இதற்கான சட்டத்தை நிறைவேற்றும்படி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தொடர் மக்கள் திரள் இயக்கம் நடத்தப்படும். வரும் 11.02.2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. மு. தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், இயக்குநர் மு. களஞ்சியம், இயக்குநர் வ. கௌதமன், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் மாநாட்டில் உரையாற்றுகின்றனர். கலை நிகழ்ச்சிகள், ஒளிப்படக் கண்காட்சி, பா வீச்சு என காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இம்மாநாடு நடக்கிறது.
தமிழர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள அனைவரும், இம்மாநாட்டில் அவசியம் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்!”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக