அடையாறு காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ்க் குறும்பா நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கவிஞரும் இதழாளருமான மு.முருகேசுதலைமையேற்றார்.
வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார்.
நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேசுகுமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் முதலரன 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை (ஐக்கூ)வாசித்தனர்.
தமிழின் மூத்த குறும்பாக் கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது குறும்பாக் கவிதைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
விழாவிற்குத் தலைமையேற்ற கவிஞர் மு.முருகேசு பேசும்போது, ”தமிழில் அறிமுகமான சப்பானியக் குறும்பாக் கவிதைகள்இன்றைக்குப் பலநூறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. வாசகனையும் கூட்டுப் படைப்பாளியாக எழுதத் தூண்டும் குறும்பாக் கவிதைகளைப் பல இளைய கவிஞர்களும் ஆர்வத்தோடு எழுதி வருகிறார்கள். சப்பானிய மரபுகளைப் பின்பற்றாமல், தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வியலையும் இணைத்து எழுதப்படுவதால்தான் தமிழில் குறும்பாக் கவிதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறும்பா இதழ்கள், குறும்பாக் கவியரங்கம், குறும்பாக் கண்காட்சி, குறும்பா ஆய்வரங்கம், குறும்பா மொழிபெயர்ப்பு எனத் தமிழ்க் குறும்பா பல தளங்களிலும் இன்றைக்குப் புதுத்தடம் பதித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.
விழாவில், ‘சந்தியா பதிப்பகம்’ நடராசன், எழுத்தாளர் பாரதிபாலன், முனைவர். ஆனந்த மூர்த்தி, ‘இலக்கிய வேல்’ சந்தர் சுப்பிரமணியன், ’மேன்மை’ ஆசிரியர் மு.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகாசி, அறந்தாங்கி, செங்கல்பட்டு, அரக்கோணம், புதுக்கோட்டை, வாலாசாபேட்டை முதலான தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை வாசித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கவிதைப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
விழா நிகழ்வுகளை எழுத்தாளர் குடந்தை பாலுஒருங்கிணைக்க, முனைவர் அரிக்குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக