எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!


 திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில்  இயற்கை எய்தினார்.
[சில நினைவுகள்:
அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன்.
அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி  கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல் முன்னால் சிரித்துக்கொண்டு பின்னால் எதிராகச் செயல்படுவார்கள்” எனக் கூறி அவர் செய்து வரும் பணிகளைக் கூறினார். நான் அதற்கு, “உங்கள் பணிகளை உலகறியும். உங்களின் மூவாண்டு முனைப்புத்திட்டம் போன்றவை சிறப்பானவை. ஆனால், களத்தில் இருந்து பொதுவாக இதற்கு முன்பிருந்த நிலைகளின் அடிப்படையில் கூறுகிறேன்” என்றேன். பிறகு என் கருத்துகளையும் கேட்டு இனி நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.
  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் ‘தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்,  ‘ஆட்சிமொழிச் செயலாக்கம்-ஓர் இனிய கனவு’ என்னும் என் கட்டுரையைப் பாராட்டினார். உடன், அவர், “உங்களுக்கு ஏன் உலகமே அழிவது போன்ற அவநம்பிக்கை உள்ளது. காலம் மாறும். கவலைப்படாதீர்கள்” என்றார்.
 ஒரு முறை கருத்தரங்க நிகழ்வு ஒன்றின் பொழுது நானும் அவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நான் அடிக்கடி வேட்டியைச் சரி செய்வது குறித்து அவர்,  “நான் ஒரு முறை வேட்டி கட்டினால் நாள் முழுவதும் அவிழாமல் இருக்கும்” என்று சொல்லி,  எவ்வாறு அவிழாமல் வேட்டி அணிய வேண்டும் என்று சொல்லித்தந்தார்.
 குமரி மாவட்டம் காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியர்சிலை அமைப்புபப்பணி நடைபெற்ற பொழுது சிற்பியின் கூடத்திற்கு நேரில் வந்து வேட்டி எவ்வாறு சிற்பத்தில் காணப்பட வேண்டும், எழுத்தாணி எவ்வாறு பிடிப்பதாக அமைய வேண்டும் என்பன போன்ற கருத்துகளைத் தெரிவித்தார்.
  இதழ்களில் வரும் என் செவ்விகள், கட்டுரைகள் குறித்து அவ்வப்பொழுது,  “எங்கள் பணிகளை நீங்கள்தான் தொடருகிறீர்கள்” எனக் கூறிப் பாராட்டுவார்.
 அவரது மருகர் செம்மல்  (முன்பே அறிமுகமாகியிருந்தாலும்) 1990 இலிருந்தே  நண்பரானவர். தினமணியில் என்னைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரை  வந்த பின்னர்,  மேலும் நெருக்கமானவர்.) அவ்வப்பொழுது அவர்மூலம்தான் நன்னன் ஐயா பற்றி அறிந்து கொள்வேன். நான் அனுப்புகம் கட்டுரைகளை அவருக்குப் படித்துக்காட்டி ஐயா கூறும்  செய்திகளையும் என்னிடம் தெரிவிப்பார்.
  இவையாவும் பழகுவதில் எளியவரான  பண்பாளர் நன்னன் ஐயா அவர்களின் நினைவை எப்பொழுதும் சுமக்கச் செய்யும். ]
 குடும்பத்தினருக்கும்  உற்றார் உறவினருக்கும் அகரமுதல மின்னிதழ் சார்பிலும் தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 அவர் பற்றிய குறிப்பபை விக்கிபீடியாவில் காண்க

மா. நன்னன்

https://ta.wikipedia.org/s/pkp