வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே   மன்பதையையும் மாற்றும்  ஆற்றல் படைத்தது!

– கவிஞர் மு.முருகேசு


 வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,  எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம்ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும்  நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசுபேசினார்.
  இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம்வரவேற்றார்.
 வந்தை வட்டக்  கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன், எசு.ஆர்.எம். இன்போடெக்கு முதல்வர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  விழாவில், ஆசிரியர் சசிகலா உதயகுமார் எழுதிய ‘இது எங்கள் வகுப்பறை’ என்னும் கல்வி நூலினை பாரத  அரசு வங்கி வந்தவாசிக் கிளை முதன்மை மேலாளர் பி.மகேந்திரவர்மன் வெளியிட, இராமலிங்கம்  குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார்பெற்றுக்கொண்டார்.
   விழாவிற்குத் தலைமையேற்ற  நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது,
   “ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவென்பது நட்பு முறையாக  இருக்கும்போது, அங்கு கற்றல் என்பதே மிகவும் இனிப்பான ஒன்றாக மாறிவிடும். இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் அறிவியல் கருவிகளைச் சிறப்பாக கையாள்பவர்களாவும் இருக்கிறார்கள்.
  அவர்களிடம் ஆசிரியர்கள் அன்பாக பழகும்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி என்பதே இல்லாமல் போகிறது. ஓர் ஆசிரியரின் வகுப்பறை  பட்டறிவுகள் அவ்வப்போது முகநூலில் இடம்பெற்று, அஃது இன்று ஒரு நூலாகவும் வெளிவருவது, அறிவியல் தொழில்நுட்பத்தை ஆக்கச் செயல்பாடுகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
   ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியர், தன்னை மாணவர்கள் விரும்பும்  ஓர் ஆசிரியராக ஆக்கிக் கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நூலாசிரியர் சசிகலா, வெகுஎளிமையாகப் பதிவு செய்துள்ளார். குமுகாய(சமூக) மாற்றத்திற்கு வித்திடுபவர்களாக ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நூலும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பல விளைவுகளை உண்டாக்குமென்று உறுதியாக நம்புகின்றேன். வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே, நாளைய குமுகாயத்தையும் மாற்றும் ஆற்றல் படைத்தது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்படும்போது, குமுகாயம் இன்னும் மேம்பட்ட குமுகாயமாக மாறுவது உறுதி.”
என்று குறிப்பிட்டார்.
  விழாவில், உரூ.10,500/- மதிப்புள்ள இரும்பு நெடும் பேழை ஒன்று வந்தவாசி  அரசு வங்கியின் சார்பாக நூலகத்திற்கு  இலவசமாக வழங்கப்பட்டது.  உரூ.1,000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த ஆசிரியர் சி.துரை, வந்தவாசி வட்டத்திலுள்ள அரசு- தனியார் பள்ளிகளைச் சேர்ந்த  2598 மாணவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்த்த பள்ளியினர்  பாராட்டப் பெற்றனர்.
  விழாவில், அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பெ.வேதபிரகாசு,  ஆசிரியர்கள் மீனாட்சி,  செ.திவாகர் ஆகியோரும் ஏராளமான பள்ளி மாணவ- மாணவியரும் கலந்துகொண்டனர்.
           நிறைவாக, ஊர்ப்புற நூலகர்  சா.தமீம் நன்றி கூறினார்.
  • வந்தை அன்பன்