மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!

  உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர்.
கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார்.
  பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர்ஆடம் என்ற அமெரிக்க எழுத்தாளர், பிறவியில் பார்வையிழந்து பேசும் திறன் அற்ற பேராசிரியர். ஊனமுற்றோர் நலனுக்காக அரும்பாடுபட்டவர். ஆசுகர் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  மதுரையைச் சார்ந்த அமுதசாந்தி என்ற பெண் தனக்கு ஒரு கை இல்லாவிட்டாலும், மாற்றுத்திறனாளி பெண்கள் பலருக்குத் தன்னம்பிக்கையைத் தரும் ஊன்றுகோலாக விளங்குகிறார்.
  தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம், தொழில் செய்யவும் கடன் உதவி பெறவும் திட்டங்கள் தீட்டி உதவுகின்றன. ஊனமுற்றவர்களைக் குறைபாடுகள் உடையவர்களாய்க் கருதும் மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  பெற்றோர்களும் மனம் நொந்து போகாமல் தம் குழந்தைகளை ஊக்கப்படுத்தி உரிய கல்விதரும் வழிவகைகளை ஆய்ந்து அவர்களை வாழவைக்க வேண்டும். ஓர் உறுப்பு ஊனமுற்றால் மற்றைய நல்லுறுப்புகள் சிறந்த முறையில் செயலாற்றும் செயல்திறம் படைத்தவை என்பதை உணர வேண்டும்.
  மாற்றுத் திறனாளிகள் அனைவர்க்கும் அரசாங்கம் ஊர்தோறும் பல குழுக்களை அமைத்தும், தனிப்பட்ட துறையை அமைத்தும், கல்வியில் தேர்ந்த இளைஞர்கட்குத் தனிப்பயிற்சி கொடுத்தும், வேலைவாய்ப்பாகவும் மாற்றி அத்தகையோரைக் கண்காணிக்க ஏற்பாடும் செய்ய வேண்டும்.
அவர்களைக் கண்டறிந்து ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் இல்லந்தோறும் சென்று அரசின் செயற்பாடுகளை எடுத்துக் கூறலாம். தொலைக்காட்சி, அனைவரும் படிக்கும் இதழ்களில் பயனற்ற விளம்பரங்கட்கு மாற்றாக மாற்றுத் திறனாளிகட்கு உதவும் அமைப்புகள் எடுத்துரைத்தும் தன்னம்பிக்கையூட்டும் குறும்படங்கள், கதைகள் இவற்றின் மூலமாகவும் உதவ முற்படலாம்.
  ஐக்கிய நாடுகள் அவை 1981-ஆம் ஆண்டை ஊனமுற்றோர் ஆண்டாக அறிவித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
  இவ்வாண்டு பள்ளியிறுதித் தேர்வில் பார்வையற்ற பள்ளி மாணவ, மாணவியர் நன்மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்று, எதிர்காலத்தில் ஓர் இலக்கை அடைய நினைத்து மகிழ்ச்சியாய்ப் பேசுதல் வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் பங்கு இதில் மகத்தானது.
  உதவும் முகாம்கள் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பெற்று அரசு நலத்திட்டங்கள் கிடைக்கப் பதிவு செய்தும், அவர்கள் சலுகைகள் பெறுவதையும் கண்காணித்து வருகின்றனர்.
 மாற்றுத் திறனாளிகள் இத்திட்டங்கள்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்று தன்னார்வத் தொண்டு அமைப்பாளர்கள் கூறுகின்றனர். தங்கட்கு மறுவாழ்வு இருக்கிறது என்பதை உணர வைக்க இன்னும் பல முயற்சிகள் அரசு உருவாக்க வேண்டும்.
  கல்வி, உதவித் தொகை, வங்கிக் கடன், பயணச் சலுகை, ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து பயிற்சியளிக்கும் மையம், தேசிய அடையாள அட்டை, பாதுகாவலர் நியமனம் என்ற பல திட்டங்களும் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்ற பணிகள் கொடுத்து, உதவித் தொகை அளிக்கப்பட்டும், முழுமையாக அறியாது துன்புறும் அவர்கள் துயரைத் துடைக்க அனைவரும் வழிவகைகள் சொல்ல வேண்டும். உறுப்புக் கொடையபால் பலர்பயன்பெற்று வருவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
  அரசுப் பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சிக் குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகட்கு இலவசப் பயணச் சலுகைகளை அளித்து வருவது உண்மை’. ஊனம் என்பதே இயலாத் தன்மைதான்.
  உடற்குறைபாடு, புலன் குறைபாடு, அறிவுத்திறன், உளவியல், பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை ஊனமுற்றோர் நம்பிக்கையை எக்காலத்திலும் கைவிடக்கூடாது. ‘நம்பிக்கை என்ற சொல்லின் முன் துன்பங்கள் எல்லாம் பாழடைந்த வீடுபோல் சரிந்துவிடும் என்றார் நெப்போலியன் என்ற மாவீரன்.
  மாற்றுத் திறனாளிகளை அதிகாரத்தில் அமர்த்தும் மத்திய அரசு இதற்கான தேசிய விருதுகள் அளிக்க விண்ணப்பங்களை வரவேற்பது மகிழ்ச்சிக்குரியது. மாற்றுத் திறனாளிகட்கும், மறுவாழ்வு அளிக்கும் மாவட்டங்கள், அவர்கட்கு உதவி செய்பவர்கள் அனைவரும் பயனுறத்தக்க வகையில் விருதுகள் அளிக்க முன்வந்துள்ளது.
  இவ்வறிவிப்பு இந்நாள் வரை வெளிவராத ஒரு திட்டம். இஃது அனைவரையும் சென்றடைய, தேர்தல் பரப்புரை போல் நாடு முழுவதும் செய்தால்தான், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் இவ்வறிக்கையை விளம்பரப் பலகையில் இணைத்தல் நன்று. மனவுளம் குன்றியோரையும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இணைத்து உதவுதல் அரசின் கடமை.
  உரிய முறையில் அரசு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டுதாழ்வான எண்ணம்ஊக்கமற்ற சிந்தனைசிறுமையுணர்வுபொறாமை இவற்றை மனத்தைப் பாதிக்கவிடாமல் எதிர்காலத்தை மாற்றுத் திறனாளிகள் ஒளிமயமாக்கிக் கொள்ளல் வேண்டும்.







     
தி.வே. விசயலட்சுமி