கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது


  சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.)இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 இவ்விழாவில்,  வந்தவாசியை அடுத்த  அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ’தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது’ வழங்கப்பட்டது.
  இவ்விருது வழங்கும் விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் சி.சொக்கலிங்கம் தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் மோ. இயேம்சு அனைவரையும் வரவேற்றார். இலக்கியக் குழுச் செயலாளர் முனைவர் நா.இராமச்சந்திரன்அறிமுகவுரை நிகழ்த்தினார்.
  விழாவில், தகஇபெம பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, பு.நூ.பு.இ.(என்.சி.பிஎச்.) மேலாண்மை இயக்குநர் சண்முக சரவணன், பொதுமேலாளர் தி. இரெத்தின சபாபதி, பொருளாளர் ப.பா.இரமணி, ‘கலை’ மணிமுடி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
 நூல் விருதுப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர் மு.முருகேசுக்கு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருதி’னை வழங்க,  ஓவியர் திராட்சுகி மருது  உரூபாய் 5,000/- பரிசுத் தொகையினை வழங்கினார்.
     ’தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது’ பெற்ற கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்  அறிவுரைஞராகவும் இருந்து  குமுகாயம், கல்வி, இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 37-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை,  சிறுவர் இலக்கியம்,  திறனாய்வு நூல்களை எழுதியுள்ளார்.
 இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத்து ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார்.
 இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.
  சிறுவர்களுக்கான 9 கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் எழுதியுள்ள இவர், சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு,  6-ஆம் வகுப்புப் பாட நூல்கள் உருவாக்கத்தில்பங்களித்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல்,  தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகித், தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– வந்தை அன்பன்