அகரமுதல 203, ஆவணி 25, 2048 / செட்டம்பர் 10, 2017
கல்விக் கற்றலில்
தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்)
முன்னுரை
நம் நாடான மலேசியா, கல்வித்துறையில்
அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில் புது உத்தி(வியூகங்)களை
மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின்
கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு
மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்..
ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்
என்பது காலத்தின் விதியாகும்.
கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள்
பள்ளி ஒளிபரப்பு (School broadcast)
பள்ளியில்
நடத்தப்படும், நடக்கும், நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை நேரலையாகவும்,
பின்னரும் ஒலிபரப்பு செய்யக்கூடிய செயல்பாட்டினைக் கொண்டுள்ளது இந்தப்
பள்ளி ஒலிபரப்புக் கூறு. எடுத்துக்காட்டிற்கு பள்ளியில் நடக்கும் ஆண்டு
விழாவினை நேரடியாக ஒளிபரப்புச் செய்யலாம் (சித்தியவான் மகா.org)
இவ்வகையான ஒளிபரப்பின் மூலம் பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளை
பெற்றோர்களும் மற்றவர்களும் கண்டு களிக்கலாம். இதற்கான இணையத்தளத்தைப்
பள்ளிகள் கொண்டிருக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் குறுந்தகடுகள்
(பயன்பாடு), காலை நேர பாடல் ஒலிபரப்பு, அறிவிப்புகள் (பாடம், வகுப்புகள்,
நிகழ்வுகள், புறப்பாட நடவடிக்கைகள்) ஆகியனவும் இதில் அடங்கும்.
கல்விச் செயற்கைக் கோள்கள் (Educational Satellites)
செயற்கைக்
கோள்களின் பயன்பாடு பல துறைகளுக்கு உதவினாலும், கல்வித்துறையில் அதன்
பயன்பாடு அளப்பரியதாகும். இந்த விண்வெளித் திட்டத்தின் ஊடே நாட்டின்
பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்தில்
பங்குக் கொள்ளும் மன்பதையும்(சமுதாயமும்) இத்திட்டச் செயற்பாட்டில்
முதன்மையாக அமைகிறது. எனவே கல்வி என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் கல்விச்
செயற்கைக் கோள்கள் முழுமையடைகின்றன.
அகத்தொலைக்காட்சி (சுற்றுப் பூர்த்தியான தொலைக்காட்சி) (CCTV)
அகத்தொலைக்காட்சி (சுற்றுப் பூர்த்தியான தொலைக்காட்சி) என்பது வகுப்பறைச்
சூழலைக் கடந்து கற்றல் ஆற்றலை வளர்க்கிறது. இந்தத் தொழில் நுட்பத்தின்
மூலம் தேவையான செய்திகளை மட்டும் மாணவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களின்
சிந்தனையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. மாணவர்கள் எளிய முறையில் ஆய்வுகள்
மேற்கொள்ளவும் ஆசிரியர்கள் மாணவர்களின் விடைகளை மதிப்பீடு செய்யவும் வழி
வகுக்கிறது. பல வகுப்புகளைக் கொண்டிருக்கும் ஒரே படிநிலை பள்ளிகளில் இந்த
முறை இணைப்பு கற்றலை உயர்த்துகிறது. ஆகவே அகத்தொலைக்காட்சிப் பயன்பாடு
வெளியிடங்களிலுள்ள கல்விச் சாலைகளயும் இணைக்கிறது. ஆசிரியர்களின்
இடபெயர்ச்சி இல்லாமல் ஓரிடத்திலிருந்தே தேவைக்கேற்ற பள்ளி மாணவர்களுக்குக்
கற்பித்தலை வழங்க முடியும்.
ஒலிநாடாப் பெட்டி (Tape Recorder)
ஒலிநாடாப்
பெட்டிப் பயன்பாடு பல காலமாக புழக்கத்தில் உள்ளது. மாணவர்களுக்கு ஏற்ற
பாடங்களைப் பதிவு செய்து பாட நேரத்தில் அதனை மீண்டும் ஒலிக்கச் செய்து
பாடம் கற்றுக் கொடுக்கலாம். வானொலி, தொலைக்காட்சி, மனிதர்களின் உரையாடல்
போன்றவற்றையும் ஒலிப்பதிவு செய்து மாணவர்களுக்கு வழங்கலாம். சுருக்கமாகச்
சொன்னால் விரும்பிய நேரத்தில் மீண்டும் பதிவு செய்ததைக் கேட்டறிய உதவுவதே
ஒலிநாடாப் பெட்டி.
கணிணியின் பயன்பாடு (Computer Application)
கணிணி பயன்பாடு என்பது வன்பொருள், மென்பொருள்
கருத்து, இயங்கு அறிவுறுத்தல்கள் ஆகியனவற்றை அடக்கிய ஓர் ஆய்வாகும்.
இப்பயன்பாடானது தொழில்முறையில் விரிந்த நோக்கத்தினைக் கொண்டு தனியாள்
பயன்படுத்தும் உத்தியாகும். கணிணிப் பயன்பாட்டில் நிறைய வணிகவியல் பாடங்கள்
வழங்கப்படுகின்றன. இப்பாடம் மாணவர்களை ஈர்க்கிறது என்பது திண்ணம்.
மாணவர்கள் ஆர்வத்தோடு பயில்வதால் கணினி பயன்பாடு வழங்கும் கல்வி
நிலையங்களின் தரம் உயர்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளான பிரிட்டன், கனடா,
நெதர்லாந்து, செருமனி ஆகியன (கணிணி பயன்பாடு அதிகம்) இதற்குச் சான்றுகளாக
அமைகின்றன.
இணையத்தளப் பயன்பாடுகள் (Internet in Education)
இணையத்தின் மூலம் கல்வி நிலையங்களுக்குச் செல்லாமலே படிக்கலாம். நமக்குத்
தேவையான நேரத்தில் கல்வியைத் தொடங்கலாம். பாடத்திட்டம் முழுமை பெற்றதும்,
அதற்குரிய தேர்வினை எழுதலாம். எனவே இணையத்தளப் பயன்பாடுகள் மாணவர்களுக்குக்
கல்வி கற்க உதவுவதில் பெறும் பங்காற்றுகின்றன. (இனிய, எளிய தமிழில் கணிணி தகவல்.html)
கல்வியில் தொலைத்தகவல் பயன்பாடு (Educational Useful in Telematics)
‘தொலைத்தகவல்’(Telematics) என்பது
தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு சொற்களின் ஒரு கலவையாகும். தொலைத்தகவல்,
பரந்த அளவில், தகவல், தொடர்பு தொழில் நுட்பத்துடன் தொலைத்தொடர்புகளின்
ஒருங்கிணைந்த பயன்பாடாகும். தொலைத்தொடர்பு கருவிகள் வழியாகத் தொலைதூரப்
பொருட்கள் – வாகனங்கள் போன்றவை அனுப்பும், பெறும் சேமிப்பதற்கான
தொழில்நுட்பமாகும் (What Is Telematics & Telematics Technology _ Fleetmatics.html).
இதன் பயன்பாடு தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினாலும்
வகுப்பறைப் பயன்பாட்டில் குறைவான பங்கினையே வழங்குகிறது. பள்ளிகளில்
அதிகமாக புத்தகப் பயன்பாட்டே கற்றலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
டெலிமேடிக்ஸின் பயன்பாடு அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது
குன்றின் மேல் இட்ட விளக்குபோல் சுடர்விட்டாலும் தமிழ்ப்பள்ளிகளில் இதன்
தாக்கம் குறைவே.
காணொளி உரையாடல் (Video Conferencing)
வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்களோடு
மாணவர்கள் தொழில் நுட்பத்தின் மூலம் கல்வி கற்கலாம். உள்நாட்டிலும்
வெளிநாட்டிலும் நடைபெறும் விரிவுரையினைக் கேட்டுப் பயன் பெறலாம்.
இந்தியாவில் பல்கலைக்கழக அளவில் நடைபெறும் ஆராய்ச்சிப் பட்டத்திற்கான
வாய்மொழித் தேர்வு இதன் வாயிலாக நடத்தப்படுகிறது (கங்காதரன், 2017).
மின்- கற்றல் (E- Learning)
கணிணியின் உதவியுடன் கல்வியை கற்பதே மின்-கற்றல் (E-Learning)
எனப்படும். கற்றலின் அடிப்படை நோக்கமாகப் பாட வடிவமைப்பு, பாடத் தேர்வு,
கற்றல் நிர்வகிப்பு ஆகிய நடவடிக்கைகள் அமைகின்றன. இ-கற்றலை மூன்றாக
வகைப்படுத்தலாம். அவை முறையே குறுந்தகடுகளைக் கொண்டு கற்றல் (CD /DVD based
Education), வகுப்பறைகளில் கற்றல் (Classroom based Education), இணைய
வழியில் கற்றல் (Web based Education) ஆகியனவாகும்.
கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு
கல்வியில் தகவல் தொடர்பு முதன்மைப்
பங்கை ஆற்றுகிறது. உலகளவில் தொழில் நுட்பப் பயன்பாடு பின்வரும்
தலைப்புகளிலே வலம் வருகின்றன. அவை முறையே பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்,
கல்வித்தொலைக்காட்சி / வானொலி, இணையத்தளம், நூலக ஆராய்ச்சி, அறிவியல்
தொழில்நுட்பம், ஊடகங்களின் பயன்பாடு, மன்பதைய(சமுதாய) ஆராய்ச்சி, ஆசிரியர்
பயிற்சி, கொள்கைத் திட்டங்கள் ஆகியனவாகும்.
இன்றைய தகவல் தொழில் நுட்பங்கள்
கல்வி கற்றலுக்குப் பயன்படும் தகவல் தொழில் நுட்பங்கள் குறித்த ஆய்வின் மரபில், அடங்கும் தொழில் நுட்பங்கள்
- கல்வி கற்பிக்கும் துணைக்கருவிகள்
- கேட்பொலி, காணொளி (ஆடியோ, வீடியோ) இணைய வடிவிலான பயன்பாட்டுக் கருவிகள்
- கணியம் (மென்பொருள்), பொருளடக்கம்
- இணைக்கும் முறைகள்
- ஊடகம்
- கல்வி தொடர்பான இணையத்தளங்கள்.
கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு
21ஆம் நூற்றாண்டில் கல்வித்துறை
மாற்றத்தில், தகவல் தொழில் நுட்பம் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இத்திட்டம்
முறையாகவும் முழுமையாகவும் தமிழ்ப்பள்ளிகளில் செயல்படுத்தப்படுமேயானால்,
மாணவர்கள் எளிதாக தகவல் தொழில் நுட்பம் குறித்த அறிவைப் பெறுவர். கணிணி,
இணையத்தளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்களும் ஆசிரியர்களும்
பயன்பெறுவர்.
பாடம் கற்பித்தலில் மாணவர் மையக் கற்பித்தல்
மாணவர்கள் ஆர்வத்துடன் பயிலுதல்:
- பல புதிய முறைகளில் தகவல் பயன்பாடு
- மனப்பாடத்தைக் குறைத்து வாழ்க்கைச்சிக்கல்களை எதிர்கொள்ள ஆயத்தமாதல்.
- கற்றல் எளிமை
- வாழ்க்கை சூழலுக்கேற்ற கல்வி
மாணவர்கள் கூட்டாகப் பயிலுதல்
- தகவல் தொழில் நுட்பப் பயன்பாடு
- கலந்துரையாடல் ஊக்குவிப்பு
- பலவிதமான பண்பாட்டுப் பிரிவினரிடையே பழக வாய்ப்பு
- கருத்துப் பரிமாற்றம்
- தகவல் பரிமாறிக் கொள்ளும் திறன் வளர்ச்சி
- வாழ்நாள் கல்வி
அரசாங்க / அரசாங்க சாரா அமைப்புகள் சேவை
இன்று நாட்டில் சில அரசாங்க / அரசாங்க
சாரா அமைப்புகள் மாணவர்களுக்காகவும் மக்களுக்காகவும் தத்தம் சேவையை வழங்கி
வருகின்றன. அவற்றில் இ.ம.க.பொ.மே. எனப்படும் செடிக்(SEDIC),
உத்தமம், தித்தியான் எண்மத் திட்டம், மணி மன்றங்கள், உலகத் தமிழ் இணைய
மாநாடு 2017 போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனவே தமிழ்ப்பள்ளிகள் இன்னும்
காலத்தைக் கடக்காமல் தகவல் தொழில் நுட்பத்தின் தேவையை உணர்ந்து முன்னேற
முயல வேண்டும்
முடிவுரை
இன்று தகவல் தொழில் நுட்ப
வளர்ச்சியில் ஒரு புதிய படிநிலையில் உள்ளோம். ஆம்! இதுவரை தட்டச்சு வழி
தமிழில் உள்ளீடு செய்த நாம் இனிக் குரல் வழி உள்ளீடு செய்ய புதிய
நுட்பத்தைக் ‘கூகிள்’ உருவாக்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து செல்லினமும்
குரல் வழி உள்ளீடு செய்ய புதிய நுட்பத்தைக் கையாள்கிறது. இதைத்தான்
வள்ளுவரும் இப்படிப் பகர்கின்றார்.
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
- குறள் 481
மேற்கோள் நூல்கள்
1.கங்காதரன்.சி. (2017). தமிழில் புதுத்தடங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.
2.கற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்.(2017). சி- டாக் நிறுவனம், ஐதராபாத்து.
3.கூகுள் நிறுவனம்.(2017).
4.செல்லினம். (2017).
5.பண்டார் ஊற்றுமலை(ஃச்பிரிங்குஃகில்)
தமிழ்ப்பள்ளியில் 21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் (2016) தாய்மொழி
நாளிதழ் ; தாய்மொழி நிறுவனம்.
- இனிய, எளிய தமிழில் கணினி தகவல்.html
- What Is Telematics & Telematics Technology _ Fleetmatics.html
பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)
மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி
32000 சித்தியாவான், பேராக்கு.
தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரை, 2017, மலேசியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக