ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்!

நீதி கோரிப் போராடுவோம்!

 வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை 

   மாலை 5மணி 

நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன்

[Hyde Park, London W2 2UH,  Marble Arch]

  தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே  நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு, தோட்டம், உடைமை அனைத்தையும் சிங்களத் தேசம் எம்மிடமிருந்து கையகப்படுத்தி விட்டது. மிகுதியாய் இருப்பனவற்றையும் காவு கொள்ளும் செயல்திட்டங்களை அமைதியாக நடைமுறைப்படுத்துகின்றது.
  ஆயினும் எம் உணர்வுகளை மட்டும் அவர்களால் சூறையாட முடியவில்லை. உலகப் பந்தின் எந்த மூலையில் நாம் நின்றாலும் என்றோ ஒரு நாள் எம் மண்ணிற்கு நாம் மீண்டும் செல்வோம், எம் மண்ணை மீட்டெடுப்போம் என்ற உறுதியையும் அவர்களால் சிதைக்க முடியவில்லை.
  வருடங்கள் உருண்டோடிச் செல்ல தமிழர்கள் தம் புண்ணிய பூமியை மறந்து விடுவார்கள், தாம் அடைக்கலம் தேடிய நாடுகளில் தம் நாளாந்த வாழ்க்கையின் தேவைகளுக்கள் தம் மண்ணை மறந்து கரைந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போடுகின்றது சிங்களத் தேசம். எம் அடுத்த தலைமுறை நாம் எந்த விழுமியங்களைக் காக்க அறவழியிலும் பின்னர் ஆயுதமேந்தியும் போராடினோம், அளப்பரிய உயிர்த் ஈகங்களை(தியாகங்களை)ப் புரிந்தோம், அங்கங்களை இழந்தோம், மாறா வடுக்களை உடலெங்கும் சுமந்தோம், உறவுகளைப் பிரிந்தோம், அவமானப்படுத்தப்பட்டோம் என்பதனை மறந்து விடுவார்கள் என்று கனவு காண்கின்றது சிங்களத் தேசம். எம் கலை, பண்பாடு, மொழி, விழுமியங்கள் சிதைந்து போய் விடும் என்று மனப்பால் குடிக்கின்றது.   
  இவையெல்லாம் சாத்தியமே! நாம் கடந்து வந்த பாதையை மறக்கும் போது, எம் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்கும் போது, நாம் போராடியதற்கான அடிப்படைகளை மறக்கும் போது, எம் மீது மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கெதிரான வன்கொடுமைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கான நீதிக்காகப் போராடத்  தயங்கும் போது, சிங்களத் தேசம் நினைப்பது கை கூடுதல் சாத்தியமே!
  1000 வருடங்களுக்கு மேலாக தம் மண்ணைப் பிரிந்து உலகெங்கும் சிதறி ஓடிய இனங்கள் கூடத் தம் மண்ணை மீட்டெடுத்தற்கான காரணம், அவர்கள் எத்தனைக் காலம் உருண்டோடினாலும் தம் தேசத்தை மனதிலிருந்து அகற்றாததும் தமக்கான நீதி கிடைக்க அனைத்துநாடுகளின் கடமையை வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றதும் ஆகும்.
  உலக நாடுகள் எம் பக்கம் திருப்பப்பட வேண்டும், எம் இன அழிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும், அதனைத் தடுத்து நிறுத்தும் சரியான காத்திரமான நடவடிக்கைளை எடுக்க வைக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் நிலைப்பாடு.
  இந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் ஒவ்வொரு வருடமும் உலகின் மனச்சாட்சியைத் தட்டிக் கேட்க வேண்டும். அழியும் எம் இனத்திற்கான ஆதரவுத் தளத்தினை உலகளாவிய அளவில் விரிவாக்க வேண்டும்.
  உணர்வுடன் திரளும் தமிழ் மக்கள் தம் இனத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த உறுதி எடுக்க வேண்டும். பரிகார நீதி கிடைக்கும் வரை ஓய்வின்றிச் செயல்பட வேண்டும். விலைமதிப்பற்ற உயிர் ஈகங்களுக்கு(தியாகங்களுக்கு)ச் செய்யும் தருமம் இதுவேயாகும்.

தொடர்புகளுக்கு:
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)