சனி, 3 டிசம்பர், 2016

தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்





பேச்சுப்போட்டி, துபாய் ; dubai_peachpoatti

 துபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான +

அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016

தொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது.
மலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள்  உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன.
எதிர்வரும்  கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில்  சே.எசு.எசு. (JSS Private School)  தனியார் அனைத்துலகப் பள்ளியில் காலை 8.00 மணிக்குத் தொடங்கி மாலை 6.00 மணிவரையில் நடைபெறவிருக்கிறது.
இந்த இறுதிச் சுற்றுப் பேச்சுப் போட்டியில் பல நாடுகள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் தனிச் சிறப்புமிக்க பட்டிமன்றப் பேச்சாளரும் நடுவருமான ‘நகைச் சுவைத் தென்றல்’ பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் இதன் சிறப்பு நடுவராக வீற்றிருப்பார்.
   இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரிட்டன், குவைத்து, ஐஅ.நாடு ஆகியவற்றில் இருந்து மும்மூன்று இளம் மாணவப் பேச்சாளர்கள் இந்த அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில் களமிறங்குகிறார்கள்.
தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் ஓர் உந்துதளமாக உருவெடுத்திருக்கிறது இந்த மாணவர் முழக்கம்.
முதலாவது மாணவர் முழக்கம் அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2014 ஆம் ஆண்டில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டதன் வழி ஒரு புதிய வரலாறு பிறந்தது.
அடுத்து இரண்டாவது அனைத்துலக மாணவர் முழக்கம் தமிழகத்தின் சென்னை மாநகரில் சிறப்புடன் அரங்கேறியது.
    பீடுநடையுடன் இந்த வரலாற்றுப் பயணம் தொடரும் வண்ணமாக, மூன்றாவது மாணவர் முழக்கம் அனைத்துலகப் பேச்சுப் போட்டி, இம்முறை துபாயில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  இளம் மாணவப் பேச்சாளர்களின் உணர்ச்சிமிகு பேச்சுத் திறனின் எழுச்சியில் இன்புற துபாய் வாழ் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.
மேல் விபரங்களுக்கு +971 50 586 5375 என்ற தொலைபேசி எண்ணில் 
இரமேசு விசுவநாதனுடன் தொடர்பு கொள்ளலாம்.
தெள்ளுதமிழ்த் தேன் பருக, திறன்மிகு பேச்சு அரங்கிற்குத் திரண்டு வாரீர்!
தரவு : முதுவை இதாயத்து
[MUDUVAI HIDAYATH
DUBAI – UAE
00971 50 51 96 433]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக