தலைப்பு-பாட்டின் இயல்பு, மறைமலையடிகள் ; thalaippu_paatin_iyalbu_maraimalaiadigal

பாட்டின் இயல்பு என்ன?

2/3

   சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப் புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.
  அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந் தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.
  இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.
  இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பான்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், “பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்”1 என்று உரை கூறினார். இது நிற்க.
மறைமலையடிகள் : முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum


Maraimalai_adigal05