Ramadoss01
தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்!  – மரு.இராமதாசு
  இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பழைய வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
  2016 சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியதாகவும், இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  அதிமுகவும் திமுகவும் ஒத்திவைப்பிற்குக் காரணமான அதே வேட்பாளர்களை நிறுத்தத் தடையில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  சனநாயகத்தைப் படுகொலை செய்யும் தகுதியும், திறமையும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்குத் தான் இருக்கிறது என்று  கருத்துரைத்துள்ள மரு.இராமதாசு, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் துடிப்பது வேதனை அளிப்பதாகத் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.