அகவை பத்துதான். ஆனால், அறிந்தனவோ 400 மொழிகள்!
– கலக்கும் அக்கிரம்!
அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன் முறையாகத் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 அகவையுள்ள அக்கிரம் என்கிற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் திகைக்கச் செய்தார்.
அறிவுக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி?
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம்
அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ‘குழந்தைகளின் அறிவுக் கூர்மையை
மேம்படுத்துவது எப்படி’ என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு
வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
நானூறு மொழிகள்
நானூறு மொழிகள் அறிந்த பத்து அகவை மாணவர்
அக்கிரம் மாணவர்களிடம் சிறப்புரை நிகழ்த்தினார். அக்கிரம் இராமநாதபுரம்
மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வாழ்கிறார். இணையம் மூலமாக
இசுரேலில் உள்ள கல்வி முறையில் படிக்கிறார். அரசு உதவி பெறும் பள்ளியில் அவர் பயிற்சி தந்தது இதுவே முதல் முறையாகும்.
அவர் பேசும்பொழுது இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளான அரபிக்,
அச்செனிசு, ஆப்ரிக்கன்சு, அல்பேனியன், அமசைக் போன்ற நானூறு மொழிகளின்
பெயர்களை மூன்று நிமையத்தில் (நிமிடத்தில்) கூறி அனைவரையும் மலைக்கச்
செய்தார்.
40 மொழிகளில் – “நன்றாக இருக்கிறீர்களா?”
“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நான் நன்றாக இருக்கிறேன்” என்று நாற்பது மொழிகளில் பேசிக் காட்டினார். மேலும், ‘தேவகோட்டை’ என்கிற சொல்லை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதிக் காண்பித்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார். “குழந்தைகளின் அறிவுக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி?” என்பது தொடர்பாக மூளைக்குப் பயிற்சி அளிக்கும் இருபத்தைந்து பயிற்சி முறைகளைச் செய்து காண்பித்தார்.
இயற்கை உணவு கட்டாயம்
தனக்கு எந்த நோயும் இதுவரை வந்தது
கிடையாது என்றும், அதற்குக் காரணம் இயற்கை உணவுகள்தாம் என்றும், இதுவரை
தான் மருத்துவமனை சென்றது கிடையாது என்றும் தெரிவித்தார். தற்பொழுது தான்
இசுரேல்கல்வி முறையில் படிப்பதாகவும், “மொழி வல்லுநராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்றுத் தர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்றும் கூறினார். இதனைப் பார்த்து மாணவர்கள் அனைவரும் வியந்து போயினர்.
உளவியலாளர் பிரியன்
சிறுவன் அக்கிரத்தின் தந்தையும் உளவியலாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் “இயற்கை உணவு மூளை
வளர்ச்சியைக் கூட்டும். கேழ்வரகு, சாமை, சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற
சிறு தானியங்களாலான இயற்கை உணவை உண்பதால்தான் என் குழந்தைகளை எந்த நோயும்
அண்டுவதில்லை. இதுவரை அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்குச்
சென்றது கிடையாது. சருக்கரையையும் இனிப்புகளையும் தவிர்த்து இளமையுடன்
வாழப் பழகிக் கொள்ளுங்கள். சீதாப்பழம், கொய்யாப்பழம், சப்போட்டாப் பழம்
நிறையச் சாப்பிடுங்கள்” என்றார்.
மாணவர்களுக்குப் பெரும்பாலான பாடங்களைக்
கதைகளின் வழியாகக் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கும், கதைகளை நிறையக்
கேட்கச் சொல்லி மாணவர்களுக்கும் வேண்டுகோள் வைத்துப் பிரியன் பேசினார்.
தான் பதினைந்து ஆண்டுகளில், இருபத்து எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ச்சி
செய்ததன் அடிப்படையில் இதனைக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாணவர்கள்
இராசேசுவரி, தனலட்சுமி, இரஞ்சித்து, பரமேசுவரி, வித்தியா, கார்த்திகா,
சபரி, செந்தில், விக்கினேசு, சீவா, சாய் புவனேசுவரன், சஞ்சீவு, சந்தியா,
சுருதி, விசய் ஆகியோர் கேள்விகள் கேட்டு விடைகள்பெற்றனர்.
நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.
தமிழுணர்வுள்ள பன்மொழி வல்லுநராகத் திகழ்ந்து மொழித்தொண்டாற்றிடச் சிறுவன் அக்கிரத்தை வாழ்த்துகி்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக