தமிழ் நாட்டு வரலாறு – நூலாய்வு
பக்.352; உரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; 044-2526 7543.
மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள
இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு
அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம்
தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம்,
இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம்,
ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது.
தொன்மையும் பழைமையும் உடைய தமிழ்நாட்டு வரலாற்றை அறிய உதவும் வரலாற்று மூலங்களைப் பன்னிரண்டு வகையாக
வகைப்படுத்தியுள்ள நூலாசிரியர், தமிழ்நாட்டு வரலாற்றைக் கால அடிப்படையில்
எட்டாகப் பகுக்கலாம் என்கிறார். அவ்வெட்டு வகையின் அடிப்படையிலேயே
“தமிழ்நாட்டு வரலாறு’ என்ற இந்நூல் விளக்கப்பட்டுள்ளது.
திருமுருகாற்றுப்படை நக்கீரர் வேறு;
நெடுநல்வாடை நக்கீரர் வேறா? பத்துப்பாட்டு ஓலைச் சுவடிகள் பலவற்றில்
திருமுருகாற்றுப்படை இல்லையே, பின்னர் சேர்க்கப்பட்டதா? திராவிடர் என்பவர்
யார்? திருவள்ளுவர், தொல்காப்பியரின் காலம் என்ன? கலித்தொகையில் உள்ள ஐந்து
கலிகளையும் பாடியவர் ஐவரா? ஒருவரா? சங்கம் இருந்ததா? இல்லையா? – இவ்வாறு
பல்வேறு கேள்விகளுக்கும், தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் முன்மொழிவுச்
சான்றுகள், இலக்கியச் சான்றுகள், மொழிநூல் சான்றுகள், அறிவியல் சான்றுகள்
முதலியவற்றின் துணைகொண்டு இந்நூல் விளக்கமளிக்கிறது. வரலாறு படைக்க
விரும்புவோர் இவ்வரலாற்றை அவசியம் படிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக