தலைப்பு-இந்தத்தமிழர்களுக்காகவும்பேசுவோம் ;thalaippu_inthathamizhargalukkaakavum_pesuvoam

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்!

 

 ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது.
  மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும். எனவே, அறுபது வீடுகள். எல்லாம் அலுமினியத் தகரத்தால் ஆனவை. அனைத்தும் ஐந்து ஆறு தெருக்களில் இறுக்கமாக அமைக்கப்பட்டு, அதற்குள்ளாகவே அந்த ஊரின் எல்லையும் அம்மக்களின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது.
 அங்கு மணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற வண்ணப்பூச்சுத் தொழிலாளி(painter) எங்களை அவ்வூருக்குள் அழைத்துச் சென்றார். மணி அண்ணனுக்கு முப்பத்து ஐந்து வயது. இங்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரிடம் ஈழத்தைப் பற்றிய நினைவு எதுவும் மிஞ்சி இருக்கவில்லை. அவருக்குத் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்குச் சென்றபொழுது கூட அவரின் பெண் குழந்தைதான் எங்களுக்குக் குளிர்பானம் தந்தாள். அவள் ஈழத்தை வரைபடத்தில் தவிர வேறு எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மணி அண்ணன் பன்னிரண்டாவது வரை படித்திருந்தார். கோயம்புத்தூரில் வண்ணப்பூச்சு வேலை. நாள்தோறும் காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால், மாலை ஆறு மணிக்குள் முகாமில் இருக்க வேண்டும். ஒரு வேளை சென்னை போன்ற அயல் ஊர்களில் வேலை பார்க்க வேண்டும் என்றால், ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அலுவலர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நேர்நின்று கையொப்பமிட வேண்டும். இவர் மட்டுமில்லை, ஏதிலியர் முகாமில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் கட்டட வேலைக்கும், நிறப்பூச்சு வேலைக்கும்தான் செல்கிறார்கள்.
கண்காணிப்பின் வலி
  மணி சொன்னார், “யார் என்ன படித்திருந்தாலும் சரி, இங்கே கட்டட வேலைதான் செய்ய வேண்டும். இரகு என்று ஒருவர் இருந்தார். இரட்டை முதுகலை முடித்திருந்தார். ஆனாலும் நிறப்பூச்சு வேலைதான். அதனாலயே மனம் வெறுத்துப் போய் மனநோயாளி ஆகி விட்டார்“.
  இங்கே முகாமிலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது. பள்ளிக்கூடம் முடித்துவிட்டுக் கல்லூரிப் படிப்புக்கு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சேரலாம். ஆனால், படிப்பு முடிந்து விட்டால் மீண்டும் முகாம் வாழ்க்கைக்கே வந்துவிட வேண்டும். இலங்கை ஏதிலியர்களுக்கு அரசு வேலையும் இல்லை. தனியார் நிறுவனங்களும் இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, மிஞ்சி இருப்பது இந்தக் கூலித் தொழில்தான். இவர்களின் வீட்டை நம்மவர்கள் யாரும் அத்தனை எளிதில் வீடு என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தகரத்தைக் கோத்துச் செய்யப்பட்டவை அவை. உள்ளே புழுக்கம் மிகுதியாகவே இருந்தது.
  அங்கும் அம்மா மின்விசிறியும், கலைஞர் தொலைக்காட்சியும் இருந்தன. அங்கிருக்கும் மக்கள், எங்களைப் பார்த்தபொழுது ஒருவித மயான அமைதியுடன் புன்னகைத்தனர். “அயலவர்களைக் கண்டால் அச்சப்படுவது இம்மக்களுக்கு இயல்பே” என்றார் மணி. காரணம், யார் பொது ஆள், யார் ‘கியூ’ பிரிவு அலுவலர் என்று இவர்களால் கண்டு கொள்ள முடியாது இல்லையா? போர் முடிந்து புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்த பிறகும், இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மீது இருக்கும் ஐயக் கண்ணை நீக்கவில்லை. ஏதோ ஒரு கோலத்தில், யாரோ ஓர் ஆள் அவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு, அவர்களின் பேச்சுகள் அனைத்தையும் கேட்டு, அதைக் ‘கியூ’ பிரிவிற்கு அனுப்ப, அடிக்கடி அவர்கள் யாரையாவது அழைத்துக் கொண்டு போய் உசாவல் (விசாரணை) நடத்துவார்கள். இயக்கத்தைச் சேர்ந்தவன் / சேர்ந்தவள் என உறுதி செய்யப்பட்டால், குடும்பத்தில் இருந்து அவர்கள் என்றைக்குமாகப் பிரிக்கப்பட்டு, இயக்கத்தில் இருந்தவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் பிறரின் உலகில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடுவார்கள். எனவே, யாரைப் பார்த்தாலும் மெல்லிய ஓர் அச்சம் அவர்கள் முகத்திலும், நெஞ்சத்திலும் எதிரொலிப்பது இயல்பே. மணி அண்ணன் கூட எங்களை அவ்விடத்தில் வெகு நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் பேசியில் தொடர்பு கொண்டு பேசச் சொன்னார். இதையும் யாராவது கண்காணித்து முறையிட்டால் இதற்காகவும் உசாவல் நடத்தப்படுமாம்.
இது வேடர் குடியிருப்பு முகாமின் கதை மட்டுமில்லை
  வேடர் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டில் ஏதிலியர்களாய் இருக்கும் ஈழத்துத் தமிழர்கள் அனைவருக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இதே நிலைதான். இது ஒரு தனி மனிதனை எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆக்குகிறது. இதனால் முகாம்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
  கடந்த மார்ச்சு மாதம், மதுரையில் இருக்கும் ஒரு முகாமில், இரவீந்திரன் என்பவர் மின் கம்பத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். காரணம், உடல் நலம் சரியில்லாததால், அவர் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கணக்கெடுப்பு நேரத்தில் முகாமில் இல்லாததால், அவர் மகனின் பெயர் நீக்கப்பட இருந்தது. நீக்கப்பட்டால் ஏதிலியருக்குக் கிடைக்க வேண்டிய எந்தச் சலுகையும் கிடைக்காது. இரவீந்திரன் நிலைமையை எவ்வளவோ எடுத்துச் சொல்லிக் கெஞ்சியும், அங்கிருக்கும் அலுவலர்கள் அவரைச் சற்றும் பொருட்படுத்தாது புறந்தள்ளியதால், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கைத் தமிழர்களைத் தவிர்த்து ஆப்கானிசுதான், திபெத், மியான்மர், வங்கதேசம் எனக் கிழக்காசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் ஏதிலியர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை விடுதலையும் உரிமையும் கூட ஈழத் தமிழர்களுக்குத் தரப்படாமலிருக்கக் காரணம் இராசீவு காந்தியின் சாவு.
  1983இல் இனப்போர் தொடங்கியதிலிருந்தே ஈழத் தமிழர்கள் ஏதிலியராய் மிகுதியாகப் புலம் பெயரத் தொடங்கி, 1990களில் பெரும் எண்ணிக்கையிலான ஏதிலியர்கள் தமிழகம் வந்தனர். இப்பொழுது இங்கே 107 முகாம்களில், 60,000க்கும் மேற்பட்டோர் வாழ்கிறார்கள். இவர்கள் எல்லாரும் வந்து கால் நூற்றாண்டு ஓடி விட்டது. ஈழத்துப் பண்பாடு எதுவும் இவர்களோடு இப்பொழுது இல்லை. அழகிய ஈழத்துத் தமிழ் கூட நம் தமிழாய் மாறிவிட்டது. அடுத்த தலைமுறை இங்கே பிறந்து, வளர்ந்து, வாழக் காத்திருக்கிறது. இவர்கள் நினைவில் இலங்கையோ, அங்கிருக்கும் அவர்கள் வீடோ, தோற்றுவாயோ (பூர்வீகமோ) இல்லை. எதிர்காலம் பற்றிய அச்சம் மட்டுமே இருக்கிறது.
  ஏதிலியராய் வந்தவர்கள், யாரோ சிலர் செய்த குற்றத்திற்காகத், தலைமுறை கடந்த பின்பும் கைதியாய் வாழ்கிறார்கள். இலங்கை இனப்படுகொலையின்பொழுது இனத்தின் பேரழிவை எதிர்த்து உரக்கப் பேசியவர்கள் ஏதிலியர்களைப் பற்றிப் பேசுவதில்லை. இவர்கள் நலன் குறித்து உரையாடுவதில்லை. வெகு சிலர் இம்மக்களோடு, இவர்களின் குடி உரிமைக்காகப் போராடுகிறார்கள். ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரசேகர் போன்றோர் இவர்களை ஈழத்தில் மீண்டும் குடியிருக்க அழைக்கிறார்கள். மழை வெள்ளத்தின்பொழுது, முகாமில் இவர்கள் வாழும் வாழ்க்கை மற்ற எல்லோரையும் விடவும் கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் அதைக் கவனிக்க யாரும் இல்லை.
ந.அருண் பிரகாசு இராசு
மாணவச் செய்தியாளர், விகடன்.
தலைப்பு-கைதிவாழ்வு ;thalaippu_kaithivaazhvu
தரவு :  பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan