வெள்ளி, 17 ஜூன், 2016

ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்!
தலைப்பு-ஆங்கிலக்கல்விமோகம்மாறும் : thalaippu_aangilavazhikalvi_maarum

ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்!

தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும்.

பள்ளித் தாளாளர் பேச்சு

  தேவகோட்டை:  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமைப் பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி   அகோமு (AGM) அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  மனோகரன்  பங்கேற்றார்.  இவர்,தமிழ்வழிக் கல்விப்பள்ளிகளில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறும் என்று பேசினார்.
   முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.
  திருச்சி மாவட்டம் இறகுடி  அகோமு (AGM) அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மனோகரன் பேசுகையில்,”நாம் வாழ்வில் இலட்சியத்தை வரையறுப்போம். அன்பை ஆயுதமாக எடுத்துக் கொள்வோம். உண்மையைப் பாதையாக அமைத்துக் கொள்வோம். தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு போராடுவோம். வருங்காலப்பரம்பரைக்கு வழிகாட்டியாகத் திகழ்வோம்” என மாணவர்களிடம்  உரையாற்றினார். “பொய் சொல்லுதல் கூடாது, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும், இலக்கு  வரையறுத்துக் கொள்ள வேண்டும், இலக்கை அடையாவிட்டாலும் அடுத்த இலக்கு அமைத்து அதனை அடையத் தொடர்ந்து முயல வேண்டும்” எனப் பல்வேறு கதைகளின் வழியாக மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் விளக்கிக் கூறினார்.
  மேலும் ஆசிரியர்கள் அனைவரும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களிடம் பெற்றோர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். ஒரு நிமிட இலக்கை அடைவது எவ்வாறு? நாம் நம்மை இன்றைய வாழ்க்கை முறையோடு எவ்வாறு இணைத்து கொண்டு சமுதாயத்துக்கு உதவும் வகையில், சமுதாய முன்னேற்றம் அடையும் வகையில் பள்ளி மாணவர்களுக்குப் போதிப்பது என்பதைப் பல்வேறு நடைமுறை நிகழ்வுகளோடு விளக்கி கூறினார். “ஆங்கில வழிக் கல்வி என்பது மோகம்தான். விரைவில் அரசு, அரசு உதவி பெறும் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக வந்து சேரும்.” இவ்வாறு பேசினார்.
மாணவிகள் பரமேசுவரி, இராசேசுவரி, கார்த்திகா, தனலெட்சுமி, முத்தழகி, விசய்,செந்தில்குமார், பிரவீனா,சங்கீதா, சுருதி, செனிபர், பார்கவிஇலலிதா, மாணவர்கள் செகதீசுவரன், சாய் புவனேசுவரன், சீவா, பரத்குமார்  முதலான பலர் கேள்விகள் கேட்டு  மறுமொழி பெற்றனர்.
முகாம் நிறைவில் ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.