வியாழன், 30 ஏப்ரல், 2015

பின்னக் குறியீடு பரிந்துரை ஒத்தி வைப்பு! [meetting about discrepancies found in the Tamil fractions and symbols]


முயற்சிகளுக்கு வெற்றி! பின்னக் குறியீடு தொடர்பான கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு சேர்த்தியத்திற்கு மடல்!

  பின்னங்கள், அளவைகள் ஆகியவற்றின் குறியீடுகளையும் ஒலிபெயர்ப்புகளையும் முறைப்படுத்துவது தொடர்பாக ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு அனுப்ப வேண்டிய கருத்துரைகள் குறித்த கலந்துரையாடல் தமிழக அரசு சார்பில்   சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறையின் ஏற்பாட்டின்பேரில் சென்னைப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் தாண்டவன், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன் ஆகியோர் ஒருங்கிணைப்புப்பணிகளை மேற்கொண்டு கலந்துரையாடலை நடத்தினர்.

  நிகழ்ச்சிக்கு வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் பாலாசி வரவேற்புரையாற்றினார்.
  முற்பகல் அமர்வில் துணைவேந்தர் முனைவர் தாண்டவன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் க.சேகர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் விசயராகவன், பேரகராதிப் பதிப்பாசிரியர் முனைவர் செயதேவன், ஆகியோர் முன்னிலை வகித்துத் தத்தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.  முனைவர் தாண்டவன், இன்றைய கூட்டத்தின் அடிப்படையிலான கருதுகைகள் சென்னைப் பல்கலைக்கழகத் தளத்திலும் இணையக் கல்விக்கழகத் தளத்திலும் வெளியிடப்பெற்று அவற்றின் அடிப்படையிலான கருத்துகளைப் பிறரிடமிருந்து பெற்று 1 மாத கால அளவில் அவற்றின் அடிப்படையில் வல்லுநர் குழு கூடி எடுக்கும்  முடிவு அரசிற்கு  அனுப்பப்படும் என்றார்.
 முனைவர் செயதேவன் தலைமையில் கருத்துகள் உரைக்கப்பட்டன. தொடக்கத்தில்  கணிஞர் மணி.மணிவண்ணன் ஒருங்குகுறி குறித்தும் தற்போதைய முன்மொழிவுகள் குறித்தும் விளக்கமாகத் தொகுப்புரை வழங்கினார். முனைவர் செயதேவன் விரிவுரையாற்றாமல் முன்மொழிவுகள் அடிப்படையிலான கருத்துகளைமட்டும்  தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஒரே பொருளைக்  குறிக்கும் வெவ்வேறு குறியீடுகள் உள்ளமையால் கல்வெட்டுகள் மூலம் சீர்மைப்படுத்தலாம் என அடுத்துப் பேசிய தொல்லியலாளர் முனைவர் பத்மாவதி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முனைவர் இராம.கி.  முன்மொழிவுகளில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, இதனை நிறைவேற்ற அவசரப்படத் தேவையில்லை என்பதை விளக்கினார்.  

  நண்பகல் உணவிற்குப் பின்னர் பிற்பகல் அமர்வினை முனைவர் பொன்னவைக்கோ நடத்தினார். யாரும் முன்மொழிவை எதிர்க்கவில்லை என்றும் வல்லுநர் கருத்திற்கேற்ப முடிவெடுக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர் என்றும் எனவே, ஒத்துவரக்கூடியவற்றை முதலில் அனுப்பிவிட்டுப் பிறவற்றை ஆய்ந்து முடிவெடுத்து ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு  அனுப்பலாம் என்றார்.
  கணிஞர் நாக.இளங்கோவன் முன்மொழிவில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினார். அரசின் ஆணைக்கு மாறான குறியீட்டுக்கருத்துகள் இ.க.கழகப்  பரிந்துரையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி இது குறித்துத்தான் மடல் அனுப்பி 8 மாதங்கள் கடந்த பின்னரும் எந்நடவடிக்கையும் இல்லை என வருத்தப்பட்டார். இது மிகவும் தவறான போக்கு என முனைவர் பொன்னவைக்கோ தெரிவித்ததற்கு  முனைவர் நக்கீரன், அரசு முடிவு வேறு இ.க.க.முடிவு வேறு என்பதுபோல் விளக்கினார். அரசின் சார்புநிறுவனம்தான் இக்கழகம் என்பதைக்கூறி இதுபோன்ற தவறுகள் நேரக்கூடாது எனக் கடிந்துரைத்தார்  முனைவர் பொன்னவைக்கோ.
  பழனியப்பா வெளியீட்டக உரிமையாளர் செல்லப்பன் ஒருங்குகுறி பயன்பாடு குறித்துக் கூறினார். அடுத்து உத்திராடன் புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் அடிப்படையில் பின்னங்கள் சீர்மைபற்றி விளக்கினார். தொடர்ந்து பேசிய இலக்குவனார் திருவள்ளுவன், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்குக் காரணமான தமிழக அரசிற்கும் தகவல்  தொழில்நுட்பத்துறைச் செயலர், துறையினருக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற தமிழக அரசியல், விகடன் குழுமம், அகரமுதல முதலான ஊடகங்களுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.  கசம் முதலான அயற்சொற்களை நீக்க வேண்டும் எனவும் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகள் எனக் குறிப்பிட்டுள்ளவற்றை நீக்க வேண்டும் எனவும்  கால்,
  கீழ்ப்பிறை, மேல்விலங்கு, சுழி மேல்விலங்கு முதலான பெயர்களைக் கொண்டே உயிர்க்குறியீடுகளைக் குறிக்க வேண்டும் என்றும் குறியீடுகளில் மாறுபாடு இருப்பின், இலக்கியம்,  மரபு முதலியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.  இக்கூட்டம் உலகுதழுவிய கூட்டமாக அமையவில்லை. தமிழ்நாடு தழுவியதாகவும் பிற மாநிலத் தமிழறிஞர்கள் கருத்தறியும் வகையிலும் அமையவில்லை.  தமிழ்நாட்டிற்கு அப்பாலுள்ள சிலருக்கு இக்கூட்டம் பற்றிய மின்மடல் அனுப்புவதாலேயே  இதனை உலகத் தமிழறிஞர்கள் கணித்தமிழ்வல்லுநர்கள் கருத்தறியும் கூட்டமாகக் கருத இயலாது. எனவே, இதனை இப்பொருண்மையிலான முதல் கூட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை  - கருத்துகள்தாம், முடிவுகளல்ல - அட்டவணைப்படுத்திப் பாரறியச் செய்ய வேண்டும். அதற்கிணங்கப் பெறப்டும் கருத்துகளின் அடிப்படையில் மறுபடியும் தேவைக்கேற்ற கூட்டங்கள் நடத்தி  முன் முடிவை எடுக்க வேண்டும். அதனையும் வெளிப்படையாக அறிவிக்கச் செய்து முடிவுகள் எட்ட வேண்டும்.எனவும் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தினார்.

  நிறைவாக முனைவர் இர.வாசுதேவன் பேசும்பொழுது மொழியைப் பற்றித்தான் கவலைப்படவேண்டும் என்றும் ஒருங்குகுறியைப்பற்றி அல்ல என்பதையும் வலியுறுத்தினார்.  ஒருங்குகுறிக்கு  மொழியைப்பற்றிக் கவலையில்லை எனக் கணிஞர் மணி.மணிவண்ணன் தெரிவித்த பொழுது எங்களுக்கு ஒருங்குகுறியைப்பற்றிக் கவலையில்லை என மீண்டும் கூறினார்.
  பிள்ளை என்ற குறியீடு பற்றி அவர் விளக்குகையில் பொன்னவைக்கோ   சாதிப்பட்டங்களுக்கான குறியீடுகளை நீக்க வேண்டும் என்றார். நல்லதா, கெட்டதா எனப் பார்ப்பதில்லை எனவும் ஆவணங்களில் உள்ளவற்றிற்கான குறியீடுகளைத்தான் சேர்ப்பதாகவும் மணி.மணிவண்ணன் தெரிவித்தார். அப்படியானால்,  பிற சாதிகளுக்குரிய குறியீடுகைளயும் சேர்க்க வேண்டும் என்றும் ஆனால் அது தவறாகும் என்பதால் எச்சாதிக் குறியீடும் தேவையில்லை எனப்  பொன்னவைக்கோ  தெளிவுபடுத்தினார். முனைவர் பத்மாவதி இதையே பின்பற்றிக் கசம் முதலானவற்றின் குறியீடுகளையும் நீக்க வேண்டும் என்றார்.
 முனைவர் விசயராகவன் தமிழக அரசு தமிழ் நலனில் கருத்து கொண்டுள்ளது என்றும் எனவே தமிழ்நலனுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கக்கூடாதென்றும் வலியுறுத்தினார்.

  எதையும் அன்றன்றே  முடிக்க வேண்டும் என்பதில் கருத்து கொண்ட முனைவர் பொன்னவைக்கோ,  உடனே குழுவைப் போட வேண்டும்  என்றார். அதற்கான வாய்ப்பு இல்லை என்றதும் வந்திருந்தவர்களிடம் முடிவெடுப்பிற்குத் துணைநிற்கும் வல்லுநர்கள் பெயர்களை எழுதி வாங்கினார். பின்னர் துணைக்குழுக்களுக்கான தெரிவுக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றார். அதில் மணி.மணிவண்ணன், முனைவர் செயதேவன்,  கிழக்குவாசல் பத்ரி, இராம.கி, முதலானோரைச் சேர்த்தார். நாக. இளங்கோவன் பெயரை வற்புறுத்தலுக்குப்பின்னர் சேர்த்தார்.
  சிறீ இரமணசர்மா பெயரையும்  குழுவில் சேர்த்தார்.  உடனே இலக்குவனார் திருவள்ளுவன், இக்கூட்டத்தில் பங்கேற்றுத் தன் முன்மொழிவுபற்றி விளக்க வராதவர் பெயரைச்சேர்ப்பது அரசு அவரது கருத்திற்கு ஆதரவாக இருப்பதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் இது அரசிற்கு அவப்பெயர்  ஏற்படுத்தும் என்றும் அவரது கருத்துகளைக் குழுவினர்  கேட்டறிதலில் தவறில்லை என்றும் ஆனால், அவர் குழுவில் சேர்க்கப்படக்கூடாது என்றும் வன்மையாக மறுத்தார். கணிஞர் ஆல்பர்ட்டு, புலவர்கி.த.பச்சையப்பன், புதுச்சேரி சுகுமாறன் முதலானோரும் அவரது கருத்தை வழிமொழிந்து குரல் எழுப்பினர். முன்மொழிவாளரின் முரட்டுப் பற்றர்கள்/பக்தர்கள் இருப்பினும் அவையின் எதிர்ப்பிற்குக் கட்டுப்பட்டு அவர் பெயரைக் குழுவில் சேர்க்கவில்லை. 
  துணைக்குழுக்களை உடன் அமைத்து மே 15 ஆம் நாளுக்குள் சேர்த்தியத்திற்குப் பரிந்துரை அனுப்பப்படும் என்றும் குழுவின் ஒருங்கிணைப்புப் பணிகளை முனைவர் தாண்டவன் ஆற்ற முன்வந்துள்ளார் என்றும் முனைவர் பொன்னவைக்கோ தெரிவித்தார்.  மே 15 ஆம் நாளுக்குள்  அனுப்ப முடியாமல் போனால், தவறான முடிவு சேர்த்தியத்தால் எடுக்கப்பட்டுவிடும் என்றும் எனவே, உடனே தமிழக அரசு இது குறித்து ஆராய்ந்து வருவதால் அரசின் முடிவு வரும் வரை ஒத்திவைக்குமாறுஅதற்கு மடல் அனுப்ப வேண்டும் என்றும் ஒருவேளை  உரிய காலத்திற்குள் அனுப்ப முடிந்தால் அவ்வாறு அனுப்பத்தடையில்லை என்றும் தெரிவித்தார். மணி.மணிவண்ணன், பத்(தி)ரி ஆகியோர் முன்மொழிவின் ஒரு பகுதிதான் நாம் அனுப்ப வேண்டியது  என்றும் தமிழுக்கு மட்டுமல்லாமல் பொதுவான  நடைபெறும் கூட்டம் என்றும் எனவே,  ஒத்திவைக்குமாறு வேண்ட முடியாது என்றும் தெரிவித்தனர். முனைவர் தாண்டவனும் முனைவர் விசயராகவனும் ஒத்திவைக்குமாறு வேண்டுவதே சரியாய் இருக்கும் என்றனர். இலக்குவனார் திருவள்ளுவன் காலையில் துணைவேந்தர் முனைவர் தாண்டவன் தெரிவித்த திட்டத்தின்படிக் குறைந்தது ஒருமாதமாகும் என்பதால், வீண் பிடிவாதம் பிடிக்காமல் அருள்கூர்ந்து  இப்பொருண்மை தொடர்பான முடிவைத் தமிழக அரசு மறுமொழி வந்தபின் எடுக்குமாறு உடனே சேர்த்தியத்திற்கு  மடல் அனுப்ப வேண்டும் என்றார். சேர்த்தியக் கூட்டம் மே 5 என்றும் மே 15 எனத் தவறாகக் கூறப்படுவதாகவும்  கணிஞர் நாக.இளங்கோவன்  தெரிவித்தார்.  ஆதலின் பெரும்பாலானோர் கருத்துக்கிணங்க,  முன்மொழிவாளரின்  முரட்டுப் பற்றர்/பக்தர்களின் எண்ணங்களுக்கு மாறாக ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு ஒத்திவைப்பு வேண்டும் மடலை அனுப்புவது என்றும்  கூடிய விரைவில் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து இறுதி முடிவை எடுப்பது என்றும் முனைவர் பொன்னவைக்கோ தெரிவித்தார். அனைவரும் கைதட்டி உடன்பாட்டை உறுதி செய்தனர்.
   பேராசிரியர் முனைவர் பாலா நன்றி நவின்றார்.
  நிதிச்செயலர் உதயச்சந்திரன் இ.ஆ..ப. முதலான அதிகாரிகளும் தமிழ்ச்சுற்றம்  இறைஎழிலன் முதலான தமிழ் அமைப்பினரும்

தஞ்சை கோ.கண்ணன்,  கோ.திருநாவுக்கரசு,  நூ.த.(உ)லோகசுந்தரம் முதலான கணித்தமிழ் ஆர்வலர்களும் பங்கு பெற்றனர்.

  கூட்டத்தில் இலக்கியச் சுவையும் இடம் பெற்றது. பொன்னவைக்கோ நன்றே செய்க! இன்றே செய்க! என்றார். இலக்குவனார் திருவள்ளுவன் "தூங்குக தூங்கிச் செயற்பால"  என்றார்.  உடன் பொன்னவைக்கோ, "செய்தக்க   செய்யாமையானும் கெடும்" என்றார். இலக்குவனார் திருவள்ளுவன் "செய்தக்க அல்ல செயக்கெடும்" என்றார்.   இர.வாசுதேவன், "எண்ணித்துணிக கருமம்" எனக் கூறினார்.
" முயற்சி வென்றது!  மகிழ்ந்து நின்றிடாமல் தொடர்ந்து முயன்று முழு வெற்றி காண வேண்டும்!"என எண்ணியவாறு கணித்தமிழ் ஆர்வலர்கள் கலைந்து சென்றனர்!
 ஒளிப்படங்கள் :  நூ.த.லோ & அ.மு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக