திட்டச்சேரிப் பகுதியில் மருத்துவக்கழிவுகளால்
தொற்றுநோய் பரவும் கண்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரிப் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது.
திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில்
தனியார் மருத்துவமனைகள், தனியார் இரத்த ஆய்வு நிலையங்கள் ஏராளமாக உள்ளன.
இங்குப் பண்டுவத்திற்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான துணிகளையும்,
இரத்தக்கறை படிந்த பஞ்சுகளையும் சாலைஓரத்திலும், திட்டச்சேரி பேருந்து
நிலையம் பின்புறத்திலும் கொட்டி விடுகின்றனர்.
திட்டச்சேரி பேருந்து நிலையத்தின்
அருகில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள
அரசு / தனியார் மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் உள்ள மருத்துவக்
கழிவுகளைச் சாலை ஓரத்தில் தூக்கி எறிந்துவிடுகின்றனர்.
மேலும் இரத்த ஆய்வு வங்கிகளில்
எடுக்கப்படும் இரத்த மாதிரிகளையும், பால்வினை தொடர்பான நோய்களைக்
கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், பஞ்சுகள், மகப்பேறு
மருத்துவத் துணிகள், கட்டுத்துணிகள் ஆகியவற்றையும் சாலைஓரத்தில்
கொட்டிவிடுகின்றனர்.
இவற்றால், அப்பகுதியில் நோய்களை பரப்பும் கொசுக்கள், ஈக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் கண்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிருவாகம்
மருத்துவக்கழிவுகளைச் சாலைஓரத்தில் கொட்டும் மருத்துவமனைகள், இரத்த ஆய்வு
நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக
ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக