செவ்வாய், 3 ஜூன், 2014

சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவை

சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல் எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்
-- கலாநிதி இராம் சிவலிங்கம் 
 
ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போரட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது. ஆனால். ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்லவல்ல பலர் எம்மிடையே இருந்தும்,  தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருந்தும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போரட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?

சிங்கள அரசின் அடிதடிகளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திடலிலே,  காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடாத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல்களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போர் என்னும் சொல்லுக்கான  பொருளையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத்தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்?

இனஅழிப்பை, கொள்கையாகவும், மகாவம்சத்தை  வழிமுறையாகவும் கொண்டு  மக்களாடசி என்ற போர்வையிலே  வல்லாண்மை(சர்வாதிகார ஆட்சி) புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காக போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே ஈடு செய்யவேண்டும். இதனால்தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடாத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசியத் தலைவர் அதனை வாய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார்.

எமது அரசியல்போரை முன்னெடுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு,  அனைத்துநாட்டு அறிந்தேற்பு தேவை. இல்லையேல், அவர்கள் ஆதரவை,  பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்? ஐந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அறிந்தேற்பை - அங்கீகாரத்தைப் - பெறமுடியாதது,  உலகநாடுகளில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பையும், அதிலும் மேலாக இவர்கள் திறமையையும் எமக்கு எடுத்துக் காட்டவில்லையா. இந்த அறிந்தேற்பு, பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதிவாய்ந்த அணிக்கு  உலக நாடுகள் வழங்கும் நன்மதிப்பு. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன், அந்தக் கொடிய நாட்களில், எம் உறவுகளுக்காக,  கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெலாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள்மீது நாம் கொண்ட அன்பும் பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையானால்; வலிமை மிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மையமாகக் கொண்டு, தேசியத்தலைவரின் இலட்சியப்  பாதையில் பயணிக்க வல்ல ஓர் அணி, தகுதிவாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக்கும் விதத்தில், உருவாக்கப்பட வேண்டும்.

ஆண்டுக்கு ஓர் மாநாடும், வருடத்திற்கு ஓர்  இரவு விருந்தும் நடாத்துவதை இலட்சியமாகக் கொண்டு, ஐ.நா மனித உரிமைஅவை மாநாட்டிற்கு, பார்வையாளர்களாகச் செல்வதை, தேசமீட்பின் உச்க்கட்டமென  சாலம் புரியும் இப்புலம்பெயர் அணிகள்; எமது போராட்டத்தின் திசையை மாற்றி, சிங்கள அரசின் விருப்பைப் பூர்த்தி செய்வதை நிறுத்தி, திறமைக்கும் பற்றுறுதிக்கும் முதயலிடம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புதுஅணியில் இணைவதே மேல். தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்தசங்கரி அபகரித்து  தமிழரைத் தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழினம்; தமிழர் தேசிய கூட்டமைப்பை(TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில்லையா?

அறவழிப்போராட்டத்தை வழிநடாத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்தியச் சிக்கலாக்கிய தந்தை செல்வாவின் சிற்ந்த தலைமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்குக் கொண்டு சென்று  இலங்கை- இந்தியச் சிக்கலை  உலக நாடுகளின் பொருண்மையாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் தலைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து  எம் தேசத்தை மீட்கவல்ல ஓர் திறமைமிக்க தலைமையும் எமக்கு வேண்டும்.

எம் இனத்தின் வெற்றியும் தோல்வியும், எமது எதிரியான சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது.

அமைப்புகள், சங்கங்கள், தனியார் அழைக்க
தொ.இ: கனடா 416 829 1362. 
sivalingham@sympatico.ca

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக