சனி, 24 மே, 2014

நரேந்திரர், இராசபக்சேவை அழைப்பதைக் கண்டித்து, போராட்டம்: வைகோ

நரேந்திரர், இராசபக்சேவை  அழைப்பதைக் கண்டித்து, தில்லியில் போராட்டம்: வைகோ 



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த கொடிய பாவி இராசபக்சே, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன். எங்கள் மனவேதனையையும் எதிர்ப்பையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும் என்பதால், இராசபக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, நாளை மறுநாள் மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தலைநகர்  தில்லியில் சந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.

மோடி அரசுக்கு மிகத் தவறான பாதையைக் காட்டி உள்ளார்கள். இந்தச் சதிச் செயலுக்குப் பின்னால், யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரையெல்லாம் இராசபக்சே பயன்படுத்துகிறான் என்பதை நான் நன்றாக அறிவேன்.

தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு இராசபக்சே புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.

இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும்;  நிலையான வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பஞ்சமா பாதகம் செய்த இராசபக்சே இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால், மே 26 ஆம்  நாள் தலைநகர் தில்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை, கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நாளில், மே 26 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னையில் வடசென்னை துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கழகத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக