வியாழன், 29 மே, 2014

மகிழ்ச்சியான செய்தி : தமிழ் படித்தால்தான் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும்:

வரும் கல்வியாண்டில் இருந்து தமிழ் படித்தால்தான் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு


விருதுநகர்: அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் எனக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில், பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் பூசா குல்கர்னி, பதின்நிலைப்பள்ளி இயக்குநர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், பதின்நிலைப்பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, +  2, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு, அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது முதலானவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16) முதல், பதின்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10 ஆம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென, முன்னர் நடை முறைப்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பில்  நுடை முறைப்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம் முதலானவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்கப் படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில நிலை தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்துப் பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என்றார்.


1 கருத்து:

  1. மகிழ்ச்சியான செய்திதான்!
    மேலும், இக்கட்டுரையில், ஒரேயொரு இடத்தில்மட்டும், ´நடைமுறைப்படுத்தப்பட்ட` எனும் சொல், தவறாக இடம்பெற்றிருக்கிறது ஐயா!
    இன்னும், இது ஒரே சொல்லாக வருமா, அன்றித் தாங்கள் இட்டுள்ளதுபோல வேறுவேறாக வருமா என்பதிலே எனக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு. அருள்கூர்ந்து விளக்கவும்.

    பதிலளிநீக்கு