1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘அனைத்தறன்’
ஆகுல நீர பிற.
2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்.
3. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
உலகின் பல்வேறு மொழிகளிலும்
எழுதப்பட்டுள்ள நூல்களுக்கெல்லாம் முதன்மையாக இருப்பது திருவள்ளுவர் அருளிய
திருக்குறளாகும். காலத்தினால் சொல்லுவதென்பதல்லாமல், கருத்தினாலும்
சொல்லப்படுவதாகின்றது.
உலகில் காணப்படுகின்ற நூல்கள்,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினையே கருத்துட்கொண்டு எழுதப்பட்டுள்ளன.
தெய்வீகம், பொருளாதாரம், அரசியல், காதல் வாழ்க்கை, இல்லறம், துறவறம்
இவ்வாறாக ஒவ்வொன்றில் நின்று எழுந்த நூல்களாகவே காணப்படுகின்றன. ஆனால்
திருக்குறளோ, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு உண்மைகளையும்
எக்காலத்திற்கும் பொருத்தமான தன்மையில் சுருக்கியும் விளக்கியும் கூறுவதால்
முதல் நூல் என்று சிறப்பிக்கப்பட்டு வருவதாயிற்று.
‘அறம்’ என்றால் என்ன வெண்பதனை ஒரு
குறட்பா தெளிவுபடுத்துகின்றது. மனதில் தீய எண்ணங்கள் எனப்படுகின்ற
அழுக்குகள் (குற்றங்கள் இல்லாதிருப்பதே அறமாகும். மனதிலே குற்றங்களை
வைத்துக் கொண்டு பிறர் அறிய வேண்டிச் செய்கின்ற செயல்களெல்லாம்
பயனில்லாதவைகளேயாகும். அப்படிச் செய்வன (ஆகுல நீர) ஆரவாரத்
தன்மையுடையனவேயாகும். எனவே ‘அறம்’ என்பது விளக்கப்பட்டது.
அடுத்தபடியாக ‘அந்தணர்’ என்று
கூறப்படுவோர் யார்? அவர்களையே அறவோர் என்றும் கூறுகின்றோம். அறம் என்பது
மனந் தூய்மையாயிற்று. மனந்தூய்மை பெற்றவர்கள் அறவோர் எனப்பட்டனர். ஏன்?
அறவழியில் செல்லுபவராயினர் மனந்தூய்மைபெற்ற அறவோர்கள் உலகில் வாழ் எல்லா
உயிர்களுக்கும் நன்மையே செய்வர், தீமையென்பதை நினையார், எனவே அறிவோர் என்று
குறிக்கப்பட்டவர்களே அந்தணராயினர். ஆதலால் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்
யார் என்பதைக் கண்டோம். அடுத்து,
இறைவன் வாழ்த்து & கடவுள் வாழ்த்து
என்று குறிக்கப்படும் முதல் அதிகாரத்தில் உலகிற்கெல்லாம் ஒரு பொருள்
முதலாயுள்ள மெய்ப் பொருளினை வாலறிவன் என்றும் ஆதிபகவன் என்றும் மற்றும்
ஒழுக்க முதலான தன்மைகளால் ஆசிரியர் விளக்கிப் பேசுகின்றார். அவ்வாறு
விளக்கப்படுகின்ற இறைவனை அறத்தின் வடிவாகவே குறிக்கின்றார். ‘அந்தணன்’
என்னும் பெயரில் அழைக்கின்றார்.
‘அறமே கடலாக & அறக்கடலான இறைவனை
என்றென்றும் உள்ளத்தில் நிறுத்தி வாழாதவர்கள் துன்பங்கள் என்று கடலினைக்
(பிற& ஆழி) கடக்க முடியாது. துன்பங்களினின்றும் விடுபெற முடியாது’’
இக்கருத்தினை மூன்றாவது (மேலே கண்ட) குறட்பா உணர்த்துகிறது. அறம் என்பதனை
விளக்கி அறவழியில் நிற்கும் அந்தணனைக் குறித்துக் காட்டி, அறம் நிறைந்த
அந்தணத் தன்மையே இறைவன் என்பதனையும் சுருக்கமாகத் தந்த திருவள்ளுவரின் முறை
உய்த்துணர வேண்டியதாகும். திருவள்ளுவர் தாம் விளக்குகின்ற கருத்துக்களை
எவ்வளவு எளிதில் விளங்குமாறு செய்கின்றார் என்பதற்காகவே இக்குறிப்பான
முறையினைச் சுட்டிக் காட்டுகின்றோம்.
- குறள்நெறி : 02.01.1995 / 15.01.64
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக