புதன், 22 மே, 2013

கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை: முதல்வர் வலியுறுத்தல்

கச்சத் தீவை மீட்க உடனடி நடவடிக்கை:  முதல்வர் வலியுறுத்தல்

கச்சத் தீவை த் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் கடந்த 3-ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின்கீழ் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழக சட்டப் பேரவை வலியுறுத்துகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத் தீவு தொடர்பாக, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதில், கச்சத்தீவானது இலங்கையின் ஒருபகுதியாக தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் ஏதும் பெறப்படாமல், கச்சத்தீவின் உரிமை மத்திய அரசால் ஒருதலைப்பட்சமாக விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நிலவியல், நாகரிகம் மற்றும் வரலாற்றுப்பூர்வமான கச்சத்தீவானது, இந்தியாவின் ஒரு பகுதியாகும். பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்தத் தீவை திரும்பப் பெறுவது அவசியமாகிறது என்பது தமிழக அரசின் நிலையாகும்.
அதிமுக சார்பில் மனு தாக்கல்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவப்படை துப்பாக்கிச்சூடு நடத்துவது, அவர்களைத் தாக்குவது, துன்புறுத்துவது போன்ற நிகழ்வுகள் சற்றும் குறையாத நிலையில் தொடர்கின்றன. இந்தியா-இலங்கை இடையே கச்சத் தீவு தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது அவசியம் என்ற நிலையிலும், இவ்வாறு செய்யாதிருப்பது இந்த ஒப்பந்தங்களை முற்றிலும் செல்லாததாக்கிவிடும் என்ற வகையிலும், கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறுவது அவசியம் என்ற நிலையிலும், கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை பரிசீலிப்பதற்கென அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில், நான் என் சொந்தப் பொறுப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2008 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மாநிலத்தின் வருவாய்த் துறையை ஒரு தரப்பினராகச் சேர்ப்பதென்று சட்டப் பேரவையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிற பின்னணியிலும், மீனவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் அக்கறை கொண்டு, இந்திய அரசு கச்சத்தீவையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து சட்டப் பேரவையில் கடந்த 3-ஆம் தேதி தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எனவே, கச்சத் தீவையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உங்களிடம் மீண்டும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கச்சத் தீவு மீட்கப்பட்ட பிறகு, இந்திய கடல் பகுதியில் மீண்டும் எல்லைக் கோட்டை வரையறை செய்ய வேண்டும் என்றும், அதனால் மீனவர்கள், பாதுகாப்பு பற்றிய கவலை ஏதுமின்றி அவர்களுடைய பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிப்புத் தொழிலை மேற்கொள்ள முடியும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

1 கருத்து:

  1. I don't know how it is possible when Mr.Karunidhi along with the then Prime Minister Indira Gandhi has handed over the Katchathivu to them now how they will return the piece of land to us. ARE THE POLITICIANS ARE MAKING FOOL OF US

    பதிலளிநீக்கு