ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்!கை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்!
இலங்கையில் நடைபெற்ற போரால், இரண்டு கைகளை இழந்தாலும், கணினி கற்றுத் தரும், செல்வநாயகி: நான், இலங்கையில் உள்ள, வெற்றிலைக்கேணி முள்ளியானை என்ற இடத்தில், தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். இலங்கை ராணுவம் நடத்திய, கடுமையான போர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, பொது மக்கள் மீதும், பல தாக்குதல்கள் நடந்தன. கடந்த, 1990ம் ஆண்டு மார்கழி, 22ம் தேதி இலங்கை ராணுவம், புலிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில், அவர்கள் வீசிய எறிகணை வீச்சில், என் இரு கைகளையும் இழந்த போது, எனக்கு, 14 வயது. நான், வாழ வழியற்ற நிலையில், இருந்த போது, "தமிழ் புனர் வாழ்வுக் கழகம்' என்ற தமிழர் அமைப்பு, என்னை பராமரித்து வளர்த்தது. அந்த அமைப்பிலேயே வளர்ந்ததால், எனக்கு கணினி பயிற்சியும் தர, முன்வந்தனர். கணினி பயிற்சியை, நல்ல முறையில் கற்றுக் கொண்டேன். தற்போது, தமிழர்கள் அதிகம் வசிக்கும், வன்னிப் பகுதியில் வசிக்கிறேன். 2009ம் ஆண்டு, இலங்கை ராணுவத்தினரின் போர் நடவடிக்கைகள், முடிவுக்கு வந்த பின், மீண்டும் எனக்கு தமிழர் புனர் வாழ்வுக் கழகம், ஆதரவளித்தது. கணினி துறையில், எனக்குள்ள ஆர்வத்தை பார்த்து, என் வளர்ச்சிக்கு உதவினர். அன்று கற்ற கணினி கல்வி மூலம், பலருக்கு கணினியை கற்றுத் தரும், ஆசிரியர் என்கிற, உன்னத இடத்திற்கு முன்னேறி உள்ளேன். முல்லைத் தீவுக்கு அருகில், மாமூலையில் உள்ள கணினி நிலையத்தில், ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இரண்டு கைகளும் இல்லாததால், நேரடியாக கரும்பலகையில் எழுதி, மாணவர்களுக்கு சொல்லித் தர இயலாது. எனவே, நான் சொல்வதை, ஒருவர் கரும்பலகையில் எழுத, அதை, மாணவர்கள் குறிப்பெடுத்து படிக்கின்றனர். கணினியில், நேரடியாக விளக்க வேண்டியவற்றை, யாருடைய உதவியும் இன்றி, நானே மாணவர்களுக்கு விளக்குகிறேன். எதிர்காலத்தில், கணினி மையம் ஒன்றை, சொந்தமாக நடத்த வேண்டும்
என்பதே, என் லட்சியம்.


பெண்களை முன்னேற்றணும்!விவசாயப் பெண்களுக்கு, பைகள் உற்பத்தி செய்ய பயிற்சி தந்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ராகுலன்: என் சொந்த ஊர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, திருப்பனந்தாள் கிராமம். தந்தையின் வேலை காரணமாக, மும்பை சென்றோம். அவர் மரணத்திற்கு பின், சொந்த ஊர் திரும்பினோம். இங்கு வாழ்க்கையை நடத்த, மேற்கொண்ட பல முயற்சிகள், பலன் அளிக்கவில்லை. அதனால், பல ஊர்கள் சுற்றி, கடைசியில் கரூர் வந்தேன். ஏற்றுமதி தொழில், அங்கு சிறப்பாக நடைபெற்றதால், அங்கேயே ஒரு சில நிறுவனங்களில் பணியாற்றி, சொந்தமாகவே ஒரு ஏற்றுமதி தொழில் துவங்கினேன். ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நிறைய ஆர்டர்கள் கிடைத்ததால், அங்கேயே குடிஉரிமை பெற்று குடியேறினேன். இருந்தாலும், ஆண்டிற்கு ஒரு முறையாவது, சொந்த ஊரான திருப்பனந்தாளுக்கு, குடும்பத்துடன் வருவது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த போது, சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்ததில், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவது தெரிந்தது. அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்து ஆண்களையே நம்ம வேண்டியிருந்தது.
பெண்கள், வெறுமனே அடுப்பூதி, கட்டாயத்திற்காக வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதைக் கண்டு, மனம் வாடினேன். எனவே, என் பணியான, ஏற்றுமதி தொழில் மூலம், சொந்த ஊரில் உள்ள பெண்களுக்கு உதவலாம் என, எண்ணி, "க்ரீன் இன்னோவேஷன்ஸ்' எனும் நிறுவனம் துவங்கினேன். அதன் மூலம், நம்மூரில் குப்பையில் போடப்படும், தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை, நேரடியாக விலை கொடுத்து வாங்கி, "அப்சைக்ளிங்' எனும் உயர்சுழற்சி முறையில், லேப்-டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் என, தரமாக தயாரிக்க, பெண்களுக்கு உதவினேன். உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்டதால், ஐரோப்பிய சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, 25 பெண்கள் தொழிலை கற்று, வேலை செய்கின்றனர். குடும்பத் தேவையை தாங்களே சமாளிக்கும் அளவிற்கு முன்னேறிஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக