ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கும்பமேளாவில் கார்த்திகேயன் கைவண்ணம்

 
 
ஆர்.கார்த்திகேயன்.

செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனர் வேலை பார்ப்பவர்.

இந்த வேலை எப்படிப்பட்டது என்றால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள், நிருபர்கள் போன்ற படைப்பாளிகள் தரும் படைப்பை மெருகேற்றி பக்கங்களில் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும், அழகுபடவும் சேர்க்கும் அருமையான பணி.
இதற்காக டில்லி, பெங்களூருவில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தனது பணியை மேம்படுத்திக்கொண்டவர்.
வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.
இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதிய வைத்துக் கொண்டே வந்தார்.
இதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார், இவரது இந்த எண்ணம் ஈடேற நான்கு ஆண்டுகளாயிற்று.
சமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டமால் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.
இதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏழாம் தேதி துவங்கி பதிமூன்றாம்தேதி வரையிலான எட்டு நாட்கள் அங்கேயே முகாமிட்டு, இரவு இரண்டு மணிக்கு வீசும் உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல படங்களை எடுத்து வந்துள்ளார்.
பல படங்கள் அருமையாக வந்துள்ளது. அடுத்த மகா கும்பமேளா வரை பேசப்படும் இந்த ஆவண படங்களில் இருந்து சில படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பக்கம் பருப்பு வேகாத நிலையில், கும்பமேளாவிற்கு தன் தொண்டர்கள் சகிதம் சென்று, அங்குள்ள அகடா (சாமியார்களுக்கான மடம்) ஒன்றை மதுரை ஆதினத்தை பிடித்தது போல பிடித்து, அந்த மடத்தின் மகா மண்டேலஸ்வரர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டு, கங்கையில் புனித நீராட தங்க பல்லக்கில் வந்த நித்யானந்தாவை, இவர் மட்டுமே படமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் படத்திற்கு கீழே உள்ள போட்டோ கேலரி என்ற சிவப்பு பட்டையை கிளிக் செய்து கும்பமேளாவில் எடுத்த படங்களை பார்க்கலாம், படங்கள் குறித்து கார்த்திகேயனிடம் பேசுவதற்கான எண்: 8754481047.

- எல்.முருகராசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக