செவ்வாய், 10 ஏப்ரல், 2012

தன்னம்பிக்கைமெருகேற்றும்!


தன்னம்பிக்கைமெருகேற்றும்!

சிறப்பு குழந்தைகளுக்கான, பயிற்சி மைய சிறப்புக் கல்வியாளர் வனிதா:
ஆட்டிசம், மூளை முடக்குவாதம், மன வளர்ச்சி குறைவு, கற்றலில் குறைபாடு, காது கேளாமை, வாய் பேசாமை, தசைப் பிறழ்வு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள். பொதுவாக குழந்தையின் ஒரு வயதிற்குள்ளாக அவர்களின் பிரச்னைகள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். கண்ணுக்கு கண் பார்ப்பது, ஒலி, ஒளி வரும் திசையில் பார்ப்பது என, இவை எல்லாம், நான்கு மாதங்களுக்குள் நிகழ வேண்டும்.மாறாக, பார்வை நிலையாக இல்லாமல் இருப்பது, நான்கு மாதங்களுக்குப் பிறகும் கழுத்து நிற்காமல் இருப்பது, ஆறு மாதங்களுக்குப் பிறகும் தவழாமல் இருப்பது, ஒரு வயதுக்குப் பிறகும் நிற்காமல் இருப்பது, இப்படி அந்தந்த காலகட்டங்களில் நடக்க வேண்டிய இயக்கங்கள், தாமதப்பட்டாலோ, தடைபட்டாலோ அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும்.பொதுவாக, ஒன்று முதல், மூன்று வயதிற்குள்ளாகவே, சிறப்புக் குழந்தைகள், பெற்றோரால் அடையாளம் காணப்பட்டு விடுவர். சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்க, பெற்றோர் அதிக கவனமும், அக்கறையும் செலுத்த வேண்டும்.சாதாரண குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சின்ன விஷயங்களைக் கூட, சிறப்புக் குழந்தைகள் கற்றுக் கொள்ள, நீண்ட நாட்களாகும். எனவே, பெற்றோர் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.பல் துலக்குவது, தன் ஆடைகளை தானே அணிந்து கொள்வது, தன் வேலைகளை, தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்வது என, அன்றாட வாழ்க்கைக்கான பயிற்சிகள், சிறப்புக் குழந்தைகளுக்கு வழங்கப்படும். கை வேலைப்பாடுகள் செய்வது குறித்து, சிறப்புக் குழந்தைகளுக்கு கற்றுத் தரலாம். அது அவர்களின் பொருளாதாரப் பிடிமானத்திற்கு உதவும்."உன்னால் உழைக்க முடியும், சம்பாதிக்க முடியும்' என்ற ஊக்கம் தான் அவர்களை இன்னும் தன்னம்பிக்கைப்படுத்தும்.சரியான பயிற்சிகளும், முறையான வழிகாட்டுதல்களும், சிறப்புக் குழந்தைகளின் திறன்களை மெருகேற்றும்; அது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக