சனி, 23 ஏப்ரல், 2011

ka.pa.aravaanan article about thamizh in dinamalar : தமிழ் இனி மெல்ல வளரும்: கா.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

 அருமையான கட்டுரை. வரும் அரசு தொடரும் அரசாக இருந்தாலும் புதிய ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் வகையில் கல்வி, ஆட்சி, வழிபாடு முதலான எல்லாவற்றிலும் தமிழே இருக்கச் செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த குழுக்களில் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் உள்ளவர்களையே அமர்த்தல் வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசு, மத்திய அரசு, பிற அரசு,. தனியார் என்ற வேறுபாடின்றி  அனைத்து அலுவலகங்களிலும் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும். ஊடகங்களில் தமிழ் கொச்கையாகவும் பிழையாகவும் எழுதவும் பேசவும் படுவன நிறுத்தப்பட வேண்டும். கிரந்தத் திணிப்பையும் பிற அயல்மொழிச் சொற்கலப்பையும் அடியோடு தடுக்க வேண்டும்.ஈழத்தமிழர் நலனும் உலகத்தமிழர் நலனும் பேணப்பட வேண்டும். மத்திய அரசில் தமிழுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /  
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




மொழி வளர்ச்சி பற்றி சிந்தித்து திட்டமிடும் போது, தமிழ்மொழிக்கு நிகரான பழமையும், செழுமையும் வாய்ந்த உலக மொழிகள் எப்படி வளர்ந்தன என்று ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும். அந்த மொழிகளுடைய வளர்ச்சி அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும்; வழி துணையாக இருக்கும். யூதர்களின் ஹீப்ரூ, சீனர்களின் சீனம், கிரேக்கர்களின் கிரேக்கம், ரோமானியர்களின் லத்தீன் ஆகியவற்றின் வரலாறு நமக்கு தெளிவாக பாடம் புகட்டுகிறது.

தமிழ் மொழியை போல பல்வேறு அன்னிய ஆதிக்கங்களையும், இடையூறுகளை ஹீப்ரூ மொழி சந்தித்தது. உலகம் முழுவதும் நாடற்றவர்களாக பரவிய யூதர்கள், தம் மொழியை செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து சென்று பொத்தி பொத்தி வளர்த்தனர். 1948ல் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய போது, அனைத்து மட்டங்களிலும் ஹீப்ரூ மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். சீனர்களை பொறுத்தவரை, நம்மைவிட பல நூற்றாண்டு பழமையான வரலாறு உடையவர்கள். தங்கள் மொழியை அவர்கள் எந்த கட்டத்திலும் கைவிட்டதே இல்லை. கிரேக்கர்களும், ரோமானியர்களும் அதே வரலாற்றை உடையவர்கள். இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஆங்கிலம், அது பிறந்த இங்கிலாந்து நாட்டிலேயே, கி.பி.14ம் நூற்றாண்டு வரை ஆட்சி பீடத்தை அடையவில்லை. அங்கு, எங்கும், எதிலும் ரோமானியர்களின் லத்தீன் மொழியே தலைமை வகித்தது. அதன்பின் வந்த சாசர் கால அரசர்களால் ஆங்கிலம் அனைத்து மட்டங்களிலும் இடம் பெற்றது. ஆங்கிலேயர்களின் துணிச்சலாலும், அரசியல் சாதுர்யத்தாலும், வாணிக நோக்கினாலும், உலகெங்கும் ஆங்கிலேய காலனி நாடுகள் உருவாகின. அந்நாடுகளில் இருந்த பூர்வீக மொழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆங்கில மொழியை அரியாசம் ஏற்றினர். இவ்வாறு உலகத்தில் மொழி வளர்ச்சி அமைந்ததற்கு காரணம், அந்தந்த நாட்டு மக்களின் மொழிபற்றே! ஒரு மொழியை கற்கும்போது அந்த மொழியின் கலாசாரமும் கற்பிக்கப்படுகிறது. எனவே தான், மொழி வழியே அந்த மொழிக்குரிய கலாசாரமும் கற்போருக்கு படிந்து விடுகிறது.

தமிழகத்தில் ஐரோப்பியர் காலத்தில் துவங்கிய ஆங்கிலேய கல்வி, சுதந்திரம் பெற்ற நாளோடு விடைபெறவில்லை. மாறாக, எல்லா இடத்திலும் மேலும் செங்கோலோச்ச துவங்கி விட்டது. பேச்சில், எழுத்தில், கல்வியில், ஆட்சியில் என, அனைத்து பயன்பாட்டு தளங்களிலும் இருக்க வேண்டிய தமிழை ஒதுக்கிவிட்டு, ஆங்கிலம் குடியமர்ந்து விட்டது. குடிசையில் ஒண்ட இடம் கேட்டு வந்த ஒட்டகம், குடிசைக்குரியவனை வெளியேற்றி விட்டதைப் போல, ஆங்கில ஒட்டகம் தமிழை வெளியேற்றி விட்டது என்பதே உண்மை. ஆங்கில மொழி வழி பயிலுகிற இளம்சிறார்கள், மொழியை பயில்வதோடு இல்லாமல், ஆங்கில மொழிக்குரிய ஐரோப்பிய கலாசாரத்தையும் பயில்கின்றனர். விளைவு, தமிழகத்தில் தமிழ் கலாசாரத்தையே இழந்த இளைஞர்களையும், குழந்தைகளையும் பார்க்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய், நம் இளைஞர்களும், குழந்தைகளும், தங்கள் மொழி, கலாசாரம், உணவு, உடை, உறை முதலானவற்றையும் தாழ்வாக கருத துவங்கி விட்டனர். தங்கள் பராம்பரியத்தை தாழ்வாக கருதுவதால், அயல் பாரம்பரியத்தை உயர்வாக எண்ணுகின்றனர். இதனால், ஒருவகை தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி விட்டனர். இவர்களை இந்த நிலையிலிருந்து முழுவதும் மீட்பதே நம் கருத்தும், கவலையுமாக இருத்தல் வேண்டும்.

இந்நோக்கில் அண்ணல் காந்தியடிகள் மிக சரியாக சிந்தித்தார். காந்தி காட்டிய வழியைவிட்டு எதிர் திசையில் சென்றுக் கொண்டிருக்கும் நம் அரசுகளும், அமைப்புகளும் மாற வேண்டும். இல்லை யென்றால், நம் பாரம்பரியத்தை படுகுழியில் புதைத்தவர் ஆவோம். அயல்நாட்டு பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும் அடிமைகளாக தொடர்வோம். அடுத்து அமையும் அரசு, முதல் அடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் -சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை தவிர, முதல் ஐந்து வகுப்புகள் வரையிலாவது தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு படித்து வந்தவர்களுக்கு மட்டுமே, அரசிலும், தனியார் நிர்வாகத்திலும் வேலை என்று, முறைப்படி சட்டம் இயற்ற வேண்டும். எந்த மொழியும் நிலைபெற வேண்டுமானால், அது பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தமிழ் மொழியின் பயன்பாடு கடந்த 60 ஆண்டுகாலமாக சுருங்கிக் கொண்டே வருகிறது. மறுதலையாக அது வெறும் வீட்டுமொழியாக மட்டும் ஆகிக் கொண்டிருக்கிறது. தெருவிலோ, பொதுஇடங்களிலோ, குறிப்பாக, நகரங்களில் தமிழ்மொழி பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. வீட்டில்கூட காலப்போக்கில் ஆங்கில வழி கற்றவர் குடும்பங்களில், தமிழ் பேச்சு மொழி அந்தஸ்தையும் இழந்துவிடும் ஆபத்து உள்ளது. இந்நிலை, பள்ளிக்கல்வியை தமிழ்வழிக் கல்வியாக மாற்றும் போதுதான் காலப்போக்கில் மாறும். அதுபோலவே, ஆட்சிமொழியாக தமிழ் எல்லா தளத்திலும் இடம்பெறுவதை உறுதியாக்க வேண்டும். மத்திய அரசு நடத்தக்கூடிய, யு.சி.ஜி., ராணுவ சேவை தேர்வுகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடத்தப்படுவதில்லை. இவற்றை எல்லாம் தமிழ்மொழியில் நடத்த வேண்டும். புது அரசு, இதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக