வெள்ளி, 12 அக்டோபர், 2012

இழிபொருள் தகவல்களுக்கு மூன்றாண்டு ச் சிறை : 3 years imprisonment for porn messages and pictures

இழிபொருள் தகவல்களுக்கு  மூன்றாண்டு ச் சிறை
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மூன்றாண்டு சிறை

புதுடில்லி: மொபைல் போனில், ஆபாச படங்களை அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து, எஸ்.எம்.எஸ்., மற்றும் மெயில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களை இழிவுபடுத்தியும், ஆபாசமாக சித்தரித்தும், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, தண்டனை வழங்கும் வகையில், 1986ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, நவீன தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு, பல்வேறு விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துள்ளன. மொபைல் போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம், தெரிந்தோ, தெரியாமலோ தகவல்களை எளிதில் பெற முடிகிறது. இதை சிலர், தவறாகப் பயன்படுத்தி, மொபைல் போனில் ஆபாச படங்களை, எம்.எம்.எஸ்., மூலம் அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும், எஸ்.எம்.எஸ்., அனுப்புவது அதிகரித்துள்ளது. பெண்களை ஆபாசமாக படமெடுத்து, இணையதளத்தில் பரவ விடுவது போன்ற செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதில், பெரும்பாலும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆபத்தை உணராமல் சிக்கிக் கொள்கின்றனர். "இது போன்ற, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என, பார்லிமென்டிலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று, பிரதமர் தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சட்ட திருத்தம் கொண்டு வர, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, பெண்களை இழிவுபடுத்தி, சித்தரித்து மோசமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வகை செய்யும், ஐ.ஆர்.டபிள்யூ.ஏ., சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. மின்னணு தொடர்பு சாதனங்களான, மொபைல் போன் மற்றும் இணையதளம் வழியாக, பெண்களை ஆபாசமாக சித்தரித்து படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சம், மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த குற்றத்தை, முதல் முறையாக செய்து மாட்டிக் கொள்பவருக்கு, தற்போது, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்சம், 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு முறை தண்டனை அனுபவித்து, இரண்டாவது முறையாக, இதே குற்றச் செயல்களில் ஈடுபட்டால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல், 1 லட்சம் அபராதம், 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரிகள், சந்தேகப்படுவோரின் வீடுகளைச் சோதனையிடவும், பறிமுதலும் செய்யலாம். இது மட்டுமின்றி, விளம்பரம், ஓவியம், எழுத்து என, எந்த வடிவிலும் பெண்களை இழிவுபடுத்தி, படங்களோ, வாசகங்களோ அமைந்தால், அதை தடுக்கும் வகையில், இந்த சட்ட திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம், வரவிருக்கும் பார்லிமென்டின் குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இப்படியொரு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, பல உறுப்பினர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதால், இது கட்சி பேதமின்றி நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சட்ட வடிவமாக்குவதற்கு முன், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக