வியாழன், 11 அக்டோபர், 2012

நெய்வேலியில் முற்றுகைப் போர்: வைகோ அறிவிப்பு

நெய்வேலியில் முற்றுகைப் போர்: வைகோ அறிவிப்பு

First Published : 10 October 2012 09:46 PM IST
காவிரிப் பிரச்னை தொடர்பாக நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் வரும் அக்.12ம் தேதி நடத்தப்படும் என்று கூறியுள்ளார் வைகோ.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன  அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார்.
அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது,  ‘காவிரி நீர் ஆணையம் அறிவித்தவாறு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்; இல்லையேல் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரும்’ என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, கர்நாடக அரசு காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு வரவிடாமல், தடுத்துவிட்டது.
ஐக்கிய முற்போக்கு அரசில், காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்துகொண்டே, தமிழ்நாட்டுக்கு 9,000 கன அடி தண்ணீர் தரச்சொன்ன அறிவிப்பை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று, பிரதமருக்கே கடிதம் எழுதியது மன்னிக்கமுடியாத செயல் ஆகும். அதன்பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், மத்திய காங்கிரஸ் அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயும், கர்நாடகத்தைச் சார்ந்த பா.ஜ.க., எம்.பி.களும் கூட்டாகச் சேர்ந்து பிரதமரைச் சந்தித்து, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று நிர்ப்பந்தித்தனர்.
தமிழகத்தில் காவிரி தண்ணீர் பாசன குறுவைச் சாகுபடியை முற்றிலும் இழந்தோம். நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக புதிதாக இலட்சக்கணக்கான ஏக்கரில் கர்நாடகம் சாகுபடி செய்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் வராவிடில், காவிரி படுகை நஞ்சை நிலங்கள் தரிசு நிலங்களாக ஆகும். இலட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்க்கை எல்லையற்ற துயரத்தில் முடியும்.
இதற்கு மத்தியில் கர்நாடகத்தில் உள்ள கன்னட வெறியர்கள், அராஜகமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், அக்டோபர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று  காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் எனது தலைமையில் நடைபெறும்.
- இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக