வியாழன், 11 அக்டோபர், 2012

விதியே... விதியே...!

விதியே... விதியே...!

First Published : 10 October 2012 01:51 AM IST
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும் (வினாடிக்கு 9,000 கனஅடி) நீரின் அளவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கர்நாடகத்தின் கோரிக்கையை, நீதிமன்றமும் பிரதமரும் நிராகரித்த அதே நாளில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விட்டுக்கொண்டிருந்த, வினாடிக்கு 9,823 கனஅடி தண்ணீரை நிறுத்தியுள்ளது கர்நாடக அரசு!
 இச்செயல் நீதிமன்றத்தையும், காவிரி நதிநீர் ஆணையத்தையும் ஒருசேர அவமதிக்கும் செயல் என்று மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தும் கர்நாடக அரசு இந்த அளவுக்குத் துணிந்திருக்கிறது என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது? இச்செயலை முன்வைத்து ஆட்சியைக் கலைக்கலாம், அணையை மத்திய அரசு தன்பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம் என்கிற அச்ச உணர்வே இல்லாமல் அடாவடி நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியது ஏன்?
 "இது பிரதமர் என்ற நிலையில் அளிக்கப்பட்ட உத்தரவு அல்ல, உடனே மாற்றுவதற்கு; காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவு. அக்டோபர் 11-ஆம் தேதி மீண்டும் கூடும்போது, இதுகுறித்துப் பேசுவோம், நிலைமைகளை ஆராய்ந்து முடிவு எடுப்போம்' என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
 "காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியவர் அதன் தலைவர்தான்.  உச்ச நீதிமன்றம் அல்ல; அவரது உத்தரவுக்கு நீதிமன்றம் இடையூறாக இருக்காது' என்று உச்ச நீதிமன்றமும் தெளிவாகக் கூறியதுடன், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்துக்கு மறுநாள் (அக்டோபர் 12-ஆம் தேதிக்கு) இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தது.
 அக்டோபர் 11-ஆம் தேதிக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில், ஏன் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதை நிறுத்த வேண்டும்?
 கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை என்று காரணம்காட்டித் தங்கள் செயலைக் கர்நாடக அரசு நியாயப்படுத்தவே முடியாது. அக்டோபர் 8-ஆம் தேதி மாலை நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 104.92 அடி தண்ணீர் இருந்தது. (மொத்த உயரம் 124.8 அடி). கபினி அணையில் (கடல்மட்டத்திலிருந்து) 2268.50 அடிக்கு தண்ணீர் இருந்தது. மொத்த உயரம் 2284 அடி. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 72.05 அடியாகத்தான் இருந்தது. கடந்த ஒரு மாதமாக இந்த உயரத்துக்கு மேலாக நீர்மட்டம் உயரவே இல்லை.
 அக்டோபர் 8-ஆம் தேதி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடி வந்து கொண்டிருந்ததற்குக் காரணம், பருவமழையால் வந்த மிகைநீர். மழை நின்றவுடன் இந்த நீர்வரத்தும் நின்றுபோகும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் இந்தப் பருவமழையால் ஒரே நாளில் 100 அடிக்கு உயர்ந்துவிடும் என்பதுபோல கர்நாடக அரசு சொல்வதும் உண்மையல்ல.
 கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலையில், இத்தனை தைரியத்துடன், பிரதமர் ஆணையை மீறி, தண்ணீரை நிறுத்தக் காரணம், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் மட்டுமே!
 கர்நாடக ஆளும் கட்சியான பாஜக தலைவர்கள் 16 பேர் குழுவாகச் சென்று பிரதமரைச் சந்திக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மாநிலத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தான் பாஜக கட்சி என்பதைப் பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சித் தலைவரான மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்கிறார். மல்லிகார்ஜுன கார்கேயும் கிருஷ்ணாவும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.
  அதேவேளையில், இங்கே தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? ஆளும்கட்சி அதிமுக தனித்துவிடப்பட்டுள்ளது. புதுதில்லியில் அதன் குரலுக்கு வலு இல்லை. மற்றபடி, தமிழகத்தைச் சேர்ந்த வேட்டி கட்டிய மத்திய அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?
 கர்நாடக அரசியல் கட்சிகள் பிரதமரைச் சந்தித்தால் அவர்களும் தமிழகத்தின் பிரதிநிதிகளாகச் சென்று, எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா? ஆளும் அதிமுகவுக்கு கெட்டபெயர் வரட்டும் என்று வாளாவிருப்பார்கள் என்றால், கர்நாடகம் எப்படி தமிழ்நாட்டை மதிக்கும்? தண்ணீரைத் திறந்துவிடும்?
 கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லது பாஜக இரு கூட்டணிகளைத் தவிர வேறு கட்சி ஆட்சி வருவது அரிது; விரைவில் கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மக்களைச் சந்திக்க ஏதுவாக இத்தகைய நாடகங்களை நடத்துவதாகச் சொல்லலாம். அந்த வாதம் உண்மையாகவே இருப்பினும்கூட, காவிரிப் பிரச்னையில் மக்களைச் சந்தித்தாக வேண்டும் என்ற எண்ணம், அங்குள்ள பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியோருக்கு இருப்பதைப்போல, ஏன் தமிழக காங்கிரஸýக்கும், திமுகவுக்கும் இல்லை?
 ஏனென்றால், "காவிரிப் பிரச்னையில் அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்பது கிடக்கட்டும், மத்திய அரசில் ஆட்சிச் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்த நீங்கள் செய்தது என்ன?" என்று காங்கிரûஸயும், திமுகவையும் கேள்வி கேட்கும் தமிழன் தமிழ்நாட்டில் இல்லை.
 மாநிலத்தில் ஆட்சிசெய்தபோதும், மத்திய அரசில் இடம்பெற்ற போதும் அரசியல் சுயலாபத்துக்காகத் தமிழனை பலவீனப்படுத்தி, கர்நாடகமும், கேரளமும் நம்மை ஏளனம் செய்யும் நிலைக்கு ஆளாக்கிய அரசியல் கட்சிகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத தமிழன்தான் தமிழ்நாட்டுக்கு எதிரி.
 மூத்த அமைச்சர்களான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் உள்ள உணர்வு, ப. சிதம்பரத்துக்கும், ஜி.கே. வாசனுக்கும், ஜெயந்தி நடராஜனுக்கும், திமுக தலைவரின் மூத்த வாரிசு மு.க. அழகிரிக்கும், ஏனைய திமுக அமைச்சர்களுக்கும் ஏன் இல்லை? இவர்களைத் தேர்ந்தெடுத்த நம்மை நாமே நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
 கர்நாடகத்தில் அரசியல்சட்டப் பிரிவு 356-ஐ பிரயோகித்து அரசைக் கலைத்திட வேண்டும் என்று  அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும், அதை மத்திய அரசை ஆளும் கூட்டணியினால் செய்ய முடியாது என்பதும், அப்படிச் செய்தால் அது காங்கிரஸýக்கு எதிராக அங்கே பாஜகவைப் பலப்படுத்திவிடும் என்பதும் மற்ற கட்சிகள் எதிர்க்கும் என்பதும்! நாளை யாரும் திமுகவைக் குறை சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு காகித ஓடத்தை வறண்ட காவிரியில் விடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
 தமிழகம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பினால் நன்மை ஏற்படலாமே தவிர, தமிழக அரசியல் கட்சிகளால் தமிழனுக்கு நன்மை கிடைக்காது.
  அன்று மகாகவி பாரதி இந்த நடிப்பு சுதேசிகளுக்காகத்தான் "நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடீ, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி...!' என்று பாடினான் போலிருக்கிறது!


கருத்துகள்(36)

"நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடீ, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி...!' என்று பாடியது மட்டும் இல்லாமல் அவர்தம் முகத்தில் காரி உமிழ்ந்து இர்ருப்பன்,
தமிழகம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பினால் நன்மை ஏற்படலாமே தவிர, தமிழக அரசியல் கட்சிகளால் தமிழனுக்கு நன்மை கிடைக்காது.மாநிலத்தில் ஆட்சிசெய்தபோதும், மத்திய அரசில் இடம்பெற்ற போதும் அரசியல் சுயலாபத்துக்காகத் தமிழனை பலவீனப்படுத்தி, கர்நாடகமும், கேரளமும் நம்மை ஏளனம் செய்யும் நிலைக்கு ஆளாக்கிய அரசியல் கட்சிகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத தமிழன்தான் தமிழ்நாட்டுக்கு எதிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக