வெள்ளி, 12 அக்டோபர், 2012

செங்கற் களஞ்சியமாகும் நெற்களஞ்சியம் : rice bowl thanjavur turns into bricks bowl




தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயத்தை கைவிட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகள் பலர், கிடைக்கும் காவிரி நீரை பயன்படுத்தி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில், பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத நிலையில், விவசாயம் மட்டுமே இங்கு முக்கிய தொழில்.
பாசனம்:


மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி நீர், இங்குள்ள காவிரி, வெண்õறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் பாய்ந்து, அதன் மூலம் தான் பாசனம் நடக்கிறது. காவிரி மூலம், 4.69 லட்சம், வெண்ணாறு மூலம், 4.65 லட்சம், கல் லணை கால்வாய் மூலம், 2.56 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இம்மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று காலங்களில் நெல் மட்டுமே பிரதானமாக, விளைச்சல் செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி, 75 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், சம்பா சாகுபடி, 3 லட்சம் ஏக்கர் நிலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. கடந் தாண்டு, 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியும், இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில், சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டன.
பாதிப்பு:


50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், கரும்பு, உளுந்து, துவரை, பச்சைபயிறு, எள், பஞ்சு உள்ளிட்ட பயிர்கள், விவசாயம் செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஜூன் மாதம், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, காவிரி நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதம் முதல், செப்., மாதம் வரை, குறுவை, சம்பா சாகுபடிகளுக்கு, நியாயப்படி வழங்க வேண்டிய, 137 டி.எம்.சி., தண்ணீரையும், கர்நாடக அரசு, வாரம் மற்றும் மாத வாரியாக, முறைப்படி வழங்கவில்லை. காவிரியில் நீர் திறக்கப்படாததால், இந்தாண்டு, 10 ஆயிரம்
ஏக்கருக்கும் குறைவாகவே, தஞ்சாவூரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சம்பா சாகுபடி காலம் துவங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, காவிரியில் இருந்து, கடந்த, 29ம் தேதி முதல், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. இம்மாதம், 15ம் தேதி வரை, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத் தரவு இருந்தும், கடந்த, 8ம் தேதி இரவுடன், தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருப்பினும், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து, தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமான அளவில் இல்லாததாலும், விவசாய தொழில் நலிவுற்று வருவதாலும், இம்மாவட்ட விவசாயிகள் பலர், வேறு தொழில் களுக்கு தாவி வருகின்றனர். காவிரி, வெண்ணாறு படுகைகளை ஒட்டிய விவசாயிகள் பலர், செங்கல் தயாரிப்பு தொழிலில் களமிறங்கியுள்ளனர். விவசாயத்தை போல, கூலித்தொழிலாளர்களை நியமிக்காமல், பலர், குடும்பம், குடும்பமாகவே செங்கல் தயாரிப்பு தொழிலை செய்கின்றனர்.
விறுவிறுப்பு:


களிமண்ணில் இருந்து செங்கல் அறுக்கும் பக்குவம் தெரியாதவர்கள் மட்டுமே, இத்தொழிலில் தேர்ச்சிப் பெற்ற ஒரிருவரை, துணைக்கு வைத்துக் கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், செங்கல் தயாரிப்பு தொழில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான செங்கல் தயாரிப்பு சூளைகள், ஆற்றுப் படுகைகளில் அமைக்கப் பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் மட்டும், மாதந்தோறும், 10 லட்சம் செங்கற்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கள், தஞ்சாவூர் மட்டுமின்றி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களின், கட்டுமான தேவைக்காக அனுப்பப்படுகிறது. செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தஞ்சாவூர் தாலுகா, கூடலூரை சேர்ந்த தேவா, 42, என்பவர்
Advertisement
கூறியதாவது:
லாபம்:


விவசாயத்தை விட செங்கல் தயாரிப்பு தொழிலில் லாபம் கிடைக்கிறது. மேலும், இதற்கு விவசாயத்தை விட, தண்ணீர் பயன்பாடு குறைவு என்பதால், இந்த தொழிலை நாங்கள் ஆர்வமுடன் செய்கிறோம். இத்தொழிலில், நேரத்திற்கு ஏற்ப, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது. பருவமழை துவங்குவதற்குள், சூளையை எரிய வைத்து விட்டால், பின், கவலைப்பட தேவைஇல்லை. ஒரு மாதத்திற்கு முன், செங்கல் ஒன்றின் விலை, 2.80 ரூபாய்க்கு விற்றோம்; இப்போது தேவை அதிகம் இருப்பதால், 3.50 ரூபாய்க்கு விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆற்றுப்படுகையில் மீன் குழம்புவாசம்:


செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சூரிய வெயில் அதிகரிப்பதற்கு முன், அதிகாலையிலேயே, ஆற்றுப் படுகைகளுக்கு குடும்பத்துடன் வந்து விடுகின்றனர். அங்கு, ஒருபுறம் மண் குழைத்தல், அச்சில் கல்அறுப்பு, விறகு சேகரிப்பு, சூளைக்கு கல் அடுக்குதல் போன்ற பணிகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமையல் வேலையும் நடக்கிறது. அங்கேயே, களிமண்ணால் அடுப்புகள் அமைத்து, அதில் சட்டி, பானைகளை வைத்து சமையல் செய்கின்றனர். திறந்த வெளியில், சமைக்கும்போது, காற்று வேகத்தால் பாத்திரங்கள் கரி படிந்துவிடும் என்பதால்தான், சட்டி, பானைகளை பயன்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் மதிய உணவுகளில், மீன் குழம்பு அல்லது வறுவல் பிரதானமாக இடம் பெறுகிறது. மாலை நேரங்களில் சிற்றுண்டியாக, அவித்த மரவள்ளி கிழங்கு, வேர் கடலை, வாழைப்பழம் ஆகியவற்றையும் ருசிக்கின்றனர். சூளை பணிகளை துவக்கும் முன்பும், செங்கற்களை விற்பனைக்கு இறக்கும்போதும், ஆட்டுகிடா வெட்டி, குலதெய் வத்தை வணங்குவதையும் பலர் பின்பற்றுகின்றனர்.
- தினமலர் செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக