புதன், 10 அக்டோபர், 2012

உலக மனநல நாள் / world mental health day

நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா...: இன்று உலக மனநல நாள்

உலக மனநல தினம், 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு, உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, மதுப் பழக்கம், பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, சவாலாக உள்ளது. நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் ஓரவுளக்குத்தான் இதை தீர்க்க முடியும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கருணை காட்டலாமே: மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போல பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வாழ்வோர், அதிகம் படித்தவர்களிடம் இப்பழக்கம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது, சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது. மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர். இதனால் மை வைத்தல், மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவை மூட நம்பிக்கைகள்.

பாதிக்காமல் இருக்க: மனநலம் பாதிக்காமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இசை கேட்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மற்றவர்களுடன் பழக வேண்டும். தனிமையை தவிர்க்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டால் டாக்டரை அணுகுவது போல், மனநலம் பாதிக்கப்பட்டாலும் அணுக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக