செவ்வாய், 9 அக்டோபர், 2012

இழுவை மிதி வண்டியருக்கு அருள் வரம்- SOLAR RICKSHAW

சொல்கிறார்கள்
இழுவை மிதி வண்டியருக்கு  அருள் வரம்

"ரிக்ஷாக்காரர்களுக்கு வரப் பிரசாதம்!'

மின்சாரம், சூரிய ஒளி மூலம் இயங்கும், புது விதமான ரிக்ஷாவைக் கண்டுபிடித்துள்ள சிவராஜ்: நான், எம்.பி.ஏ., பட்டதாரி. சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில், விளம்பரத் துறையில் பணியாற்றுகிறேன். ஆட்டோ மொபைல் துறையில் அதிக ஈடுபாடு உண்டு. நான் தயாரித்துள்ள இந்த வாகனம், சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் மிதிப்பது ஆகியவற்றின் மூலம், இயங்குகிறது. இதைச் செய்து முடிக்க, எனக்கு, மூன்று ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது. பல முறை வடிவமைத்தும், திருப்தி ஏற்படவில்லை.ஒரு பக்கம் சார்ஜ் ஏறவில்லை; சார்ஜ் ஏறினால், வண்டியின் ஓட்டத்திற்கு தேவைப்படும் அளவில் இல்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேயிருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின், வெற்றி கிடைத்தது. இப்போது, சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இதற்கு பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது.புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முற்றிலும் வித்தியாசமான முறையில், இதை வடிவமைத்துள்ளேன். காணாமல் போன ரிக்ஷாக்காரர்களுக்கு இந்த வண்டி மூலம், புதிய வாழ்க்கை கிடைக்கும். வெயிலில் வாடாமல், கால் கடுக்க மிதிக்காமல், சொகுசாக இதை ஓட்டலாம்.ஆட்டோ ரிக்ஷா வடிவில் உள்ள இந்த வாகனம், 120 கிலோ எடை கொண்டது. இதில், மூன்று பேர் பயணம் செய்யலாம். மின்சாரம் மூலம், மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 150 கி.மீ., ஓட்டலாம். மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் செல்லும் திறனுடையது இந்த வாகனம். வணிக ரீதியில் உற்பத்தி செய்யும் போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்க முடியும். இந்த வாகனத்தை உற்பத்தி செய்து தர, பல நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.மக்களிடம் இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநில அளவில், மேலும் இதை பரவலாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக